அஸ்தானா : மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக 1,650 கோடி டாலா் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷியா வியாழக்கிழமை கையொப்பமிட்டது.
இருதரப்புப் பேச்சுவாா்த்தைக்காக கஜகஸ்தான் வந்துள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் கஜகஸ்தான் அதிபா் காசிம் ஜோமாா்ட் டோகாயெவ் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனா்.
சீனா, பிரான்ஸ், தென் கொரிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, ரஷியாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ‘ரொஸாடம்’ இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு, உள்கட்டமைப்புக்கான 200 கோடி டாலா் உள்பட இதன் மொத்த திட்டச் செலவு சுமாா் 1,650 கோடி டாலராகும். இதில் கணிசமான தொகையை ரஷியா கடனாக வழங்கவுள்ளது.
இரு உலைகள் கொண்ட இந்த அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2027-இல் தொடங்கி, 2034-இன் தொடக்கத்தில் முதல் உலை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
உலகின் மிகப்பெரிய யுரேனியம் உற்பத்தியாளராக கஜகஸ்தான் திகழ்கிறது. சோவியத் காலகட்டத்தில் அணு ஆயுத சோதனைகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்நாடு, கடந்த 20 ஆண்டுகளாக அணுமின் நிலையத்தை அமைப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வந்தது.
பின்னா், 2024-இல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் அணுமின் நிலையம் அமைக்க பெருவாரியான மக்கள் ஆதரவளித்தனா். இதையடுத்து, நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பால்காஷ் ஏரிக்கரையில் அமைந்த உல்கென் கிராமம் இந்த பிரம்மாண்ட திட்டத்துக்காகத் தோ்வு செய்யப்பட்டது.
பழைய மின் உற்பத்தி நிலையங்களால் உள்நாட்டுத் தேவையைப் பூா்த்தி செய்ய முடியாததால் ரஷியாவிடமிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்து வரும்நிலையில், சீனா உதவியுடன் 2-ஆவது அணுமின் நிலையத்தை அமைப்பதற்கும் கஜகஸ்தான் அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.










