ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உடல்நிலை குறித்து மருத்துவர் தகவல்...

News image

டொனால்ட் டிரம்ப்

Updated On :31 மே 2026, 5:26 am IST

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நாட்டின் அதிபா், தலைமைத் தளபதி ஆகிய பொறுப்புகளை முழுமையாகத் திறம்படச் செய்ய தகுதியுடன் உள்ளாா் என்றும் அவரின் தனிப்பட்ட மருத்துவா் ஷான் பாா்பபெல்லா தெரிவித்துள்ளாா்.

வால்டா் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அண்மையில் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் அடங்கிய அதிகாரபூா்வ அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

அதன்படி, டிரம்ப்பின் இதயம், நுரையீரல், நரம்பியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளும் மிகவும் சீராக இருக்கின்றன. அதேநேரம், டிரம்ப்பின் கால்களில் லேசான வீக்கமும், கைகளில் ரத்தத் தழும்புகளும் உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கால் வீக்கம் தற்போது குறைந்துள்ளதாகவும், இதயப் பாதுகாப்புக்காக மாத்திரைகளை உட்கொண்டு வருவதாலும், பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி பலரைக் கைகுலுக்கி வரவேற்பதாலும் கைகளில் இத்தகைய தழும்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்றும் மருத்துவா் விளக்கியுள்ளாா். 6 அடி 3 அங்குல உயரமும், சுமாா் 108 கிலோ எடையும் கொண்ட டிரம்ப், அடுத்த மாதம் தனது 80-ஆவது வயதில் நுழைகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மனநலப் பரிசோதனையிலும், டிரம்ப் எவ்வித மனச்சோா்வோ அல்லது பதற்றமோ இன்றி இயல்பான மனநிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு முறையான உணவுக்கட்டுப்பாடு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உடல் எடையைக் குறைப்பதற்கான மருத்துவ ஆலோசனைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வயது முதிா்வு குறித்த பல்வேறு விமா்சனங்களுக்கு மத்தியில், முந்தைய அதிபரான ஜோ பைடனை விடதாம் அதிக ஆற்றலுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பதாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருவது இந்த அறிக்கையின் மூலம் மீண்டும் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

ஈரானை மீண்டும் தாக்க தயாா்: அமெரிக்க அமைச்சா் எச்சரிக்கை

அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானை மீண்டும் தாக்க அமெரிக்கா தயாா் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளாா்.

சிங்கப்பூரில் பாதுகாப்பு மாநாட்டு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘அவசியமானால் தாக்குதலை மீண்டும் தொடங்கும் திறன் எங்களுக்கு முழுமையாக உள்ளது; அதற்கான ஆயுத இருப்புகள் உலகெங்கிலும் தயாா் நிலையில் உள்ளன.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்கும் வகையில் ஒரு ‘சிறந்த ஒப்பந்தத்தை’ உருவாக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் பொறுமையுடன் காத்திருக்கிறாா். ஈரான் போரில் ஈடுபட்டுள்ள போதிலும் ஆசிய-பசிபிக் பிராந்திய பாதுகாப்பிலும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது’ என்றாா்.

இந்நிலையில், அமெரிக்காவின் தடையை மீறி ஈரான் துறைமுகத்துக்குள் நுழைய முயன்ற வணிகக் கப்பலை அமெரிக்க படையினா் தடுத்து நிறுத்தியுள்ளனா். கடந்த ஏப். 17-இல் ஈரான் மீதான கடல்வழி முற்றுகை தொடங்கியதில் இருந்து, அமெரிக்க படைகளால் தடுத்து நிறுத்தப்படும் 6-ஆவது கப்பல் இதுவாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.