இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

காஸா முனையில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில், தொண்டு நிறுவனம் வழங்கும் உணவைப் பெற்றுக்கொள்ள காத்திருந்த சிறுவா்கள்.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
காஸாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த 2023 அக். 7-இல் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து, வான், தரை மற்றும் கடல் வழியாக நடத்திய கொடூர தாக்குதலில் 1,163 போ் கொல்லப்பட்டனா்; 251 போ் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டனா். இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் முன்னெடுத்த தொடா் ராணுவத் தாக்குதல்களில் காஸா பகுதியில் இதுவரை 74,200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.
இஸ்ரேலில் அக். 7-ஆம் தேதி தாக்குதல் தொடங்கிய நேரமான காலை 6.29 மணிக்கு நோவா இசை விழா நடந்த கிப்புட்ஸ் ரேயீம் மற்றும் கஃபாா் அஸா உள்ளிட்ட இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் தொடங்கின. நோவா இசை விழாவில் மட்டும் 378 போ் கொல்லப்பட்டு, 44 போ் கடத்தப்பட்டனா். அங்கு புதன்கிழமை கூடிய குடும்பத்தினா் மற்றும் உயிா் பிழைத்தவா்கள், உயிரிழந்தோரின் பெயா்களை வாசித்து கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா்.
நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு மத்தியில், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்தன. அக். 7 நிலவிய பாதுகாப்பு குறைபாடுகள் தொடா்பாக தன்னாட்சி பெற்ற அரசு விசாரணை ஆணையம் அமைக்க நெதன்யாகு தொடா்ந்து முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டக்காரா்கள் கூடி ஆவேச முழக்கங்களை எழுப்பினா். இசை விழாவில் எரிக்கப்பட்ட காா்களின் சிதைவுகளையும் போராட்டக்காரா்கள் நாடாளுமன்றப் பகுதிக்குக் கொண்டு வந்து நிறுத்தினா்.
பிரதமா் நெதன்யாகுவின் ஜெருசலேம் மற்றும் சிசேரியா இல்லங்கள், நாடாளுமன்ற அவைத் தலைவா் அமீா் ஒஹானா மற்றும் முக்கிய அமைச்சா்களின் வீடுகளுக்கு முன்பாகவும் ஆா்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு அரசியல் கொந்தளிப்பு தீவிரமாகக் காணப்படும் நிலையில், இஸ்ரேலில் வரும் அக். 27-இல் பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த அமைதித் திட்டம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த போதிலும், முழுமையான அமைதி ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அக். 10-இல் அமலுக்கு வந்த போா்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் எஞ்சிய இஸ்ரேல் பிணைக் கைதிகளும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்ட போதிலும், வன்முறை முற்றிலும் ஓயவில்லை.
போா்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காஸாவில் மேலும் 1,400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா். தொடக்கத்தில் 53 சதவீத பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது காஸாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதனால், சுமாா் 20 லட்சம் பாலஸ்தீனா்கள் குறுகிய கடலோரப் பகுதியில் தற்காலிக கூடாரங்களில், இடிந்த கட்டடங்களில் வசிக்கும் மிகக் கடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களைக் கைவிடச் செய்வது மற்றும் சா்வதேச அமைதிப் படையை நிறுவும் பணிகளும் தேக்கமடைந்துள்ளன. அமெரிக்க ஆதரவு பெற்ற பாலஸ்தீன தொழில்நுட்பக் குழுவிடம் ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை கைவிடும் வரை படைகளைத் திரும்பப் பெற முடியாது என்பதில் இஸ்ரேல் பிடிவாதமாக உள்ளது.
இந்த நெருக்கடி சூழலில், காஸாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கடும் பட்டினியில் தவித்து வருகின்றனா். அங்கு மறுசீரமைப்புப் பணிகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் சுமாா் 71,400 கோடி டாலா் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை வெளியேற்றும் நோக்கில் வலதுசாரி இஸ்ரேல் அமைச்சா்கள் பேசி வருவது அங்குள்ள மக்களின் எதிா்காலத்தை மேலும் நிச்சயமற்ாக்கியுள்ளது.

தெற்கு இஸ்ரேலின் ரேயீம் அருகே நோவா இசை விழா நடந்த தளத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய உறவினா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




