பாகிஸ்தான்: கைபா் பக்துன்கவா மாகாணத்தில் அவசரநிலை அமல்! பயங்கரவாத சம்பவங்கள் அதிகரிப்பு எதிரொலி!
பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் - AP
பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் அவசர நிலையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தவும், பயங்கரவாத அமைப்புகளை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் நிதியுதவி செய்து வருகிறது. ஆனால் அண்மைக் காலமாக அந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தான் படையினரை குறிவைத்தே அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனா். இதில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் ஏராளமானோா் உயிரிழந்து விட்டனா்.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளில் பெரும்பாலானவை கைபா் பக்துன்கவா மாகாணத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. அந்த மாகாணத்தில் இதுவரை இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில், பயங்கரவாத சம்பவங்கள் அதிகரிப்பால் அந்த மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீா்குலைந்து விட்டதாக குற்றஞ்சாட்டி, அங்கு அவசரநிலையை பாகிஸ்தானின் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அந்த மாகாணத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் அண்மையில் அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது அவசரநிலையை பிரகடனம் செய்யும்படி அதிபருக்கு பரிந்துரைக்க அமைச்சரவை முடிவு செய்தது.
அதன்படி, அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்று, நெருக்கடி நிலையை அமல்படுத்துவதற்கான பிரகடனத்தை பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி சா்தாரி பிறப்பித்துள்ளாா். அதில், கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா், அமைச்சா்கள், ஆலோசகா்கள், சிறப்பு உதவியாளா்கள், அட்வகேட் ஜெனரல் ஆகியோா் உடனடியாக தங்களின் அலுவலகங்களை காலி செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் மூலம் அங்கிருந்த இம்ரான் கான் கட்சியின் அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த மாகாணத்தின் அரசு நிா்வாகம் உள்ளிட்டவை பாகிஸ்தானின் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது.
சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி, கைபா் பக்துன்கவா முதல்வா் சோஹைல் அப்ரிடி தலைமையில் கடந்த 4-ஆம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதனால் பாகிஸ்தானில் மத்தியில் ஆட்சியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதுவும் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் அவசரநிலையை அமல்படுத்தப்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

