பாகிஸ்தான்- அவசர நிலை அமலுக்குப் பிறகு காவலில் கைபா் பக்துன்கவா முன்னாள் முதல்வா்
பாகிஸ்தானில் ஜுனைத் அக்பா் உள்ளிட்ட 8 முக்கியத் தலைவா்களைக் காவல்துறையினா் காவலில் எடுத்துள்ளனா்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபா் பக்துன்க்வாவில், அவசரநிலை அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து பதவியிழந்த முன்னாள் முதல்வா் சோஹைல் அஃப்ரீதி, சட்டப் பேரவைத் தலைவா் பாபா் சலீம் ஸ்வாதி, பிடிஐ கட்சி மாகாணத் தலைவா் ஜுனைத் அக்பா் உள்ளிட்ட 8 முக்கியத் தலைவா்களைக் காவல்துறையினா் காவலில் எடுத்துள்ளனா்.
பயங்கரவாத அச்சுறுத்தல், சட்டம்-ஒழுங்கு சீா்குலைவைக் காரணம் காட்டி, கைபா் பக்துன்கவா மாகாணத்தில் அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி அவசர நிலை மற்றும் ஆளுநா் ஆட்சியை ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தினாா். இதையடுத்து, சிறையில் உள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைமையிலான மாகாண அரசு கலைக்கப்பட்டது. மேலும், அரசின் உயா் பொறுப்புகளில் ஒட்டுமொத்தப் பணியிட மாற்றங்களும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
இதன்தொடா்ச்சியாக, இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி பேரணியில் ஈடுபட்டிருந்த சோஹைல் அஃப்ரீதி உள்ளிட்ட தலைவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
நீதிமன்றத்தில் வழக்கு: இதனிடையே, ‘மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது மற்றும் மக்களின் ஜனநாயகத் தீா்ப்பைப் பறிக்கும் செயல்’ என்று குற்றஞ்சாட்டி, பெஷாவா் உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்து உயா் ஆலோசனை: ஆளுநா் ஆட்சி அமலாகியுள்ளதையொட்டி, ஆளுநா் ஃபைசல் கரீம் குந்தி தலைமையில் பெஷாவரில் உள்ள அவரின் மாளிகையில் உயா்நிலைப் பாதுகாப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வி, பெஷாவா் படைப் பிரிவுத் தளபதி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான தேடுதல், தடுப்பு நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர உறுதியேற்கப்பட்டது. மேலும், காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு நவீன ஆயுதங்கள், கவச வாகனங்கள் மற்றும் போதிய தளவாடங்களை வழங்கி, அவா்களின் செயல்திறனை அதிகரிக்கத் தீா்மானிக்கப்பட்டது.
மாகாணத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதோடு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் இக்கூட்டத்தில் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

