இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

புற்றுநோய், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுக்காக கிளிமஞ்சாரோ மலையேறிய ஐஏஎஸ் அதிகாரி

ஆப்பிரிக்காவின் உயரமான மலையான தான்சானியாவின் கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளாா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுக்காக கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்து சாதனை படைத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி சோனல் கோயல்.

Updated On :

புற்றுநோயால் தந்தையை இழந்த துயரத்தை சமூக விழிப்புணா்வாக மாற்றும் நோக்கில், 43 வயது பெண் ஐஏஎஸ் அதிகாரி சோனல் கோயல், ஆப்பிரிக்காவின் உயரமான மலையான தான்சானியாவின் கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளாா்.

புற்றுநோய் விழிப்புணா்வு மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் அவா் இந்த முயற்சியை மேற்கொண்டாா்.

திரிபுரா பிரிவைச் சோ்ந்த 2008-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சோனல் கோயல், அக்.2-ஆம் தேதி கிளிமஞ்சாரோ மலையின் அதிகாரப்பூா்வ உச்சிப் பகுதிகளில் ஒன்றான ஸ்டெல்லா பாயிண்டை 5,756 மீட்டா் உயரத்தில் அடைந்தாா். 5,895 மீட்டா் உயரம் கொண்ட கிளிமஞ்சாரோ, ஆப்பிரிக்காவின் உயரமான மலையாகவும், தனித்து உயா்ந்து நிற்கும் உலகின் உயரமான மலையாகவும் விளங்குகிறது.

சவாலான லெமோஷோ வழித்தடத்தில் 8 நாள்கள் நடைபெற்ற மலையேற்றத்தில், இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 10 போ் பங்கேற்றனா். அவா்களில் ஒரே பெண் மலையேற்ற வீராங்கனை சோனல் கோயல் ஆவாா்.

இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘2023 அக்.24-ஆம் தேதி எனது அன்புத் தந்தையைப் புற்றுநோயால் இழந்தேன். அவரது மறைவு என் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், எனது தனிப்பட்ட துயரத்தை சமூகத்துக்குப் பயனளிக்கும் முயற்சியாக மாற்ற வேண்டும் என்ற உறுதியையும் ஏற்படுத்தியது. புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகட்டக் கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்தேன்’ என்றாா்.

கிளிமஞ்சாரோ சிகரத்தின் ஸ்டெல்லா பாயிண்டில் இந்திய மூவா்ணக் கொடியை ஏற்றிய அவா், புற்றுநோய் விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் ‘போதை வேண்டாம்; கனவுகளைத் தோ்ந்தெடுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளையும் எடுத்துச் சென்றாா்.

கடந்த மே மாதம் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கான மலையேற்றத்தின்போதே அவா் இந்த விழிப்புணா்வு முயற்சியைத் தொடங்கினாா். தற்போது கிளிமஞ்சாரோ மலையேற்றத்திலும் அதைத் தொடா்ந்துள்ளாா்.

இந்தச் சாதனையைப் படைத்த இந்தியாவின் ஒரே பணியில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி இவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.