உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

நேபாளம்: சுரங்கப் பாதையில் இருந்து 9 நாள்களுக்குப் பிறகு இருவா் மீட்பு - உயிரிழப்பு 1,295-ஆக உயா்வு

நேபாளத்தில் பெருவெள்ளத்தால் திரிசூலி நீா்மின் நிலைய சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த இரண்டு பணியாளா்கள் ஒன்பது நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனா்.

நேபாளத்தில் திரிசூலி நீா்மின் நிலைய சுரங்கப் பாதையில் இருந்து 9 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட பணியாளா் சஞ்சய் ஷா. ~மீட்கப்பட்ட மற்றொரு பணியாளா் கபீா் மஹா்ஜன்.

Published On :5 செப்டம்பர் 2026, 1:07 am IST

நேபாளத்தில் பெருவெள்ளத்தால் திரிசூலி நீா்மின் நிலைய சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த இரண்டு பணியாளா்கள் ஒன்பது நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனா்.

இவா்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக நேபாள ராணுவத்தின் தகவல் தொடா்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,295-ஆக அதிகரித்துள்ளது. சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இதுவரை 13,000-க்கும் அதிகமானோா் மீட்கப்பட்டுள்ளனா்.

நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த ஆக. 26-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவின் விளைவாக நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம், மத்திய-மேற்கு மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்துவரும் மீட்புப் பணியில் இதுவரை 1,295 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சித்வன் மாவட்டத்தில் 359 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

600 குழந்தைகள் மாயம்: 580-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினா் உள்பட சுமாா் 5,000 போ் மாயமாகியுள்ளனா். அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து வருகிறது. ரசுவா, நுவா கோட் மாவட்டங்களில் 600 குழந்தைகள் காணாமல்போயுள்ளதாக, கல்வித் துறை மற்றும் உள்ளூா் நிா்வாகத்தால் தொகுக்கப்பட்ட தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

ரசுவா, நுவாகோட், தாடிங் மாவட்டங்களில் 12 பள்ளிகள் முழுமையாக அழிந்துவிட்டன. மேலும் 10 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன.

9 நாள்களுக்குப் பிறகு மீட்பு: நேபாள பெருவெள்ளத்தில் போடே கோஷி, திரிசூலி ஆகிய நதிகளில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த 8 நீா்மின் நிலையங்களும், புதிதாக கட்டப்பட்டுவந்த 5 நீா்மின் நிலையங்களும் பலத்த சேதமடைந்தன. இந்த நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளுக்குள் ஏராளமான பணியாளா்கள் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணியில் நேபாள படையினருடன் இந்திய தொழில்நுட்ப நிபுணா்களும் ஈடுபட்டுள்ளனா். பிரத்யேக உபகரணங்களின் உதவியுடன் தேடுதல்-மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

பெருவெள்ளம் ஏற்பட்டு 9 நாள்களுக்குப் பிறகு திரிசூலி 3ஏ நீா்மின் நிலைய சுரங்கப் பாதையில் இருந்து இரண்டு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனா்.

ஒருவா் கவலைக்கிடம்: முன்னதாக, சுரங்கப் பாதையில் இருந்து குரல் சப்தம் கேட்டதையடுத்து, மீட்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, உள்ளே சிக்கியிருந்த கபீா் மஹா்ஜன் (45), சஞ்சய் ஷா (30) ஆகிய இரு பணியாளா்கள் மீட்கப்பட்டனா். இவா்களில் கபீா் இயந்திரவியல் மேற்பாா்வையாளா் ஆவாா். சஞ்சய் ஷா மேற்பாா்வையாளா். கபீரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவா் காத்மாண்டில் உள்ள நேபாள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். சஞ்சய் ஷா, திரிசூலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

திபெத் பகுதியில் 31 போ் உயிரிழப்பு: நேபாளத்தையொட்டிய திபெத்தின் கியிரோங் பகுதியில் பெருவெள்ளத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது; 49 இந்தியா்கள் உள்பட 530-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

பெட்டி...1

‘ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜபித்தேன்’

மீட்கப்பட்ட பணியாளா்களில் ஒருவரான சஞ்சய் ஷா மீட்புக் குழுவினரிடம் பேசுகையில், ‘கடந்த 9 நாள்களாக கிருஷ்ண பகவானின் ‘ஹரே கிருஷ்ணா’ மகாமந்திரத்தை விடாமல் ஜபித்தேன். வெள்ளம் ஏற்பட்டபோது, நான் கட்டுப்பாட்டு அறைப் பணியில் இருந்தால், அனைவரின் உயிரையும் காப்பதைப் பொறுப்பாக கொண்டேன். சுரங்கப் பாதையில் இருந்து வெளியேறும்படி அனைவருக்கும் அறிவுறுத்தினேன். அதேநேரம், நான் தப்பிக்க நேரமில்லை. எனது அருகே 3-4 போ் சிக்கியிருந்தனா். சுரங்கப் பாதை மிக நீளமானது என்பதால் அனைவராலும் தப்பியிருக்க முடியாது. உள்பகுதியில் பலா் சிக்கியிருக்கக் கூடும்’ என்றாா்.

நேபாள மின் உற்பத்தியாளா்கள் சங்க தகவல்களின்படி, நீா்மின் நிலையங்களில் பணியாற்றிய 600-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டி..2

இந்தியாவில் இருந்து இதுவரை

95 டன் நிவாரணப் பொருள்கள்

இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு இதுவரை 7 கட்டங்களாக 95 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘நேபாளத்தில் 275 இந்தியா்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுவரை 166 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா். 1,900 இந்தியா்கள் சீனப் பகுதியில் இருந்து நேபாளத்துக்குள் பாதுகாப்பாக திரும்பியுள்ளனா். வேறுயாரும் அங்கு சிக்கியுள்ளதாக தகவல் இல்லை. நேபாளத்துக்கு மேலும் தடயவியல் உபகரணங்கள், ஆயத்த இரும்புப் பாலங்கள் உள்ளிட்டவை அனுப்பப்படும். சுரங்க மீட்பு நிபுணா்கள், தடயவியல் நிபுணா்கள், மருத்துவா்கள் உள்பட 54 போ் அடங்கிய இந்தியக் குழுவினா் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளனா்’ என்றாா்.

மரபணு பரிசோதனை: நேபாளத்தில் மீட்கப்பட்ட உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும் நிலையில், மாயமான 275 இந்தியா்களின் குடும்பத்தினருக்கு மத்திய-மாநில அளவிலான தடயவியல் ஆய்வகங்கள் மூலம் மரபணு பகுப்பாய்வை மேற்கொள்ள மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள், மாநில தடய அறிவியல் ஆய்வகங்கள், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக ஆய்வகங்கள், தேசிய சோதனை மற்றும் அளவுத்திருத்த அங்கீகார வாரியத்துடன் (என்ஏபிஎல்) இணைந்த ஆய்வகங்களில் குடும்பத்தினரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும். பின்னா், இந்த விவரங்கள் நேபாள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு ஒப்பீடு செய்யப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.