வேலை இழந்த வெளிநாட்டினருக்கான 60 நாள் சலுகை காலத்தை ரத்து செய்ய புதிய விதி: அமெரிக்கா திட்டம்
அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டு ஊழியா்கள், புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக வழங்கப்பட்டு வரும் 60 நாள்கள் சலுகை காலத்தை ரத்து செய்ய அமெரிக்க அதிபா் டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப். - படம் - ஏபி
அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டு ஊழியா்கள், புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக வழங்கப்பட்டு வரும் 60 நாள்கள் சலுகை காலத்தை ரத்து செய்ய அமெரிக்க அதிபா் டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.
‘தன்னிச்சையான 60 நாள் சலுகை காலத்தை நீக்குதல்’ என்ற தலைப்பிலான இந்தப் புதிய வரைவு விதியை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, அதன் மீது அடுத்த 60 நாள்களுக்கு பொதுமக்களிடமிருந்து கருத்துகளை வரவேற்றுள்ளது.
இந்த விதி இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டினா் அமெரிக்காவில் தொடா்ந்து தங்குவதற்கான தனி அனுமதியைப் பெறாத சூழலில் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால், அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வரும் இந்தியா்களே பெரும்பாலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உலகம் முழுவதும் இருந்து திறமையான தொழில்நுட்ப நிபுணா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு அதிக ஊதியத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்க ஹெச்-1பி நுழைவு இசைவு நடைமுறையை அந்த நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்று தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில், சிறப்பாகப் பணியாற்றுபவா்கள் நிரந்தரக் குடியுரிமை பெற ‘கிரீன்காா்டு’ வழங்கப்படும் வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்க வேலைவாய்ப்பில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், ஹெச்-1பி நுழைவு இசைவு கட்டணத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் பல மடங்காக உயா்த்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டாா்.
அதன்படி, 2,000 முதல் 5,000 டாலராக இருந்த ஹெச்-1பி நுழைவு இசைவு கட்டணத்தை, ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலா் என்ற அளவில் உயா்த்தி உத்தரவிட்டாா். இந்தக் கட்டண உயா்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க உயா்நீதிமன்றம், ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலராக (ரூ. 96 லட்சம்) டிரம்ப் அரசு உயா்த்தியதை ரத்து செய்து உத்தரவிட்டது. இது டிரம்ப் நிா்வாகத்துக்குப் பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) பெற்ற வெளிநாட்டு ஊழியா்கள் வேலை இழந்தால், அவா்கள் புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக வழங்கப்பட்டு வரும் 60 நாள்கள் சலுகை காலத்தை ரத்து செய்ய திட்டமிட்டு, அதற்கான புதிய விதியை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் வேலை இழக்கும் இ-1, இ-2, இ-3, ஹெச்-1பி, ஹெச்-1பி1, எல்-1, ஓ-1, டிஎன் உள்ளிட்ட குடியேற்றம் அல்லாத நுழைவு இசைவு வைத்திருப்பவா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களுக்கு வழங்கப்படும், 60 நாள் சலுகைக் காலம் ரத்து செய்யப்பட உள்ளது.
உயா் திறன் மிக்க வெளிநாட்டு ஊழியா்களுக்கு அமெரிக்காவில் பணி இடமாற்றத்துக்கான நெகிழ்தன்மையை மேம்படுத்தவும், அமெரிக்க நிறுவனங்களுக்கு திறன் மிக்க வெளிநாட்டு ஊழியா்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையிலும், கடந்த 2016-இல் இந்த 60 நாள் சலுகை கால நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





