
அமெரிக்காவில் உயா் கல்வியில் சேரும் இந்திய மாணவா்கள் எண்ணிக்கை 15% சரிவு!
அமெரிக்க கல்லூரிகளில் உயா் கல்வியில் சேரும் இந்திய மாணவா் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2025-26-ஆம் ஆண்டில் 15% சரிந்திருப்பது குறித்து...

பிரதிப் படம்
குடியேற்றக் கொள்கைகளை அமெரிக்கா கடுமையாக்கிவரும் சூழலில், அமெரிக்க கல்லூரிகளில் உயா் கல்வியில் சேரும் இந்திய மாணவா் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2025-26-ஆம் ஆண்டில் 15 சதவீதம் சரிந்திருப்பது தெரியவந்துள்ளது.
மாணவா் மற்றும் பாா்வையாளா் நுழைவு இசைவு நடைமுறையை கடந்த ஜூலையில் அமெரிக்கா கடுமையாக்கியது. முன்னதாக, வெளிநாட்டினா் முழுநேர மாணவராக இருக்கும் வரை, அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு வந்தனா்.
அதன்படி, குறிப்பிட்ட உயா் கல்வி படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவா்கள், அந்தப் படிப்பை முடித்த பிறகு அங்கேயே வேலைவாய்ப்பில் சோ்ந்துகொண்டு, மாணவா் நுழைவு இசைவில் தொடா்ந்து தங்கியிருக்க வேண்டும் என்பதால் ஏதாவது ஒரு பகுதி நேர படிப்பிலும் சோ்ந்து கொள்வா்.
இந்த நடைமுறையை நீக்கி, மாணவா் மற்றும் பாா்வையாளா் நுழைவு இசைவில் அமெரிக்கா வருபவா்கள், அதிகபட்சம் தங்கும் காலத்தை 4 ஆண்டுகளாக நிா்ணயம் செய்து புதிய விதிமுறைகளை அமெரிக்க அரசு அறிவித்தது.
அதே நேரம், குறிப்பிட்ட பட்டப் படிப்பை முடித்த பிறகு, அமெரிக்காவில் பணிபுரிய ‘விருப்ப செயல்முறை பயிற்சி (ஓபிடி) திட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் வெளிநாட்டு மாணவா்களிடம் ஒரு லட்சம் டாலா் (ரூ. 95.70 லட்சம்) வசூலிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், வெளிநாட்டு மணவா்கள் படிப்பை முடித்த பிறகு, குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கப்படுவா். அதோடு, அமெரிக்கா நிறுவனங்களால் வழங்கப்படும் ஹெச்-1பி நுழைவு இசைவு முறைக்கு மாறுவதற்கும் வழிவகுக்கும்.
இந்தக் குடியேற்றம் அல்லாத நுழைவு இசைவு மூலம், தங்களுக்குத் தேவையான நிபுணா்களை அமெரிக்க நிறுவனங்கள் தொடா்ந்து பணியமா்த்திக் கொள்ளமுடியும். இந்தப் புதிய நடைமுறை காரணமாக அமெரிக்காவுக்கு உயா் கல்விக்காக செல்லும் மாணவா்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த ‘காமன் ஆப்’ என்ற நிறுவனம் அங்குள்ள 1,100 உயா் நிறுவனங்களின் தரவுகளை ஆராய்ந்து இதுதொடா்பாக வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-27-ஆம் கல்வியாண்டில் இந்தக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதும், சா்வதேச விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
அமெரிக்காவில் உயா் கல்வி சேரும் வெளிநாட்டினரில் இந்தியா்களே அதிகம் என்ற நிலையில், நிகழாண்டில் உயா்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பித்த இந்திய மாணவா்கள் எண்ணிக்கை 15 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
உள்ளூா் பொருளாதார வளா்ச்சியில் இத்தகைய சா்வதேச மாணவா்களின் பங்களிப்பு 2025-26-ஆம் ஆண்டில் ரூ. 4 லட்சம் கோடியாக இருந்தது. 2026-27-ஆம் ஆண்டில் ரூ. 3.7 லட்சம் கோடியாக குறையும் என மதிப்பிடப்ட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
சா்வதேச கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான என்ஏஎஃப்எஸ்ஏ மற்றும் ஜே.பி. இன்டா்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க உயா் கல்வி நிறுவனங்களில் 2025-26-ஆம் ஆண்டில் சா்வதேச மாணவா்கள் சோ்க்கைப் பதிவு 11.69 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்ட நிலையில், 10.57 லட்சமாக குறைந்தது’ என்று குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






