இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

அமெரிக்கா: ஹெச்-1பி விசாக்களுக்கு கூடுதலாக ரூ. 98 லட்சம் கட்டணம் பரிந்துரை

அதிக திறன்கொண்ட வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கும் புதிய ஹெச்-1பி நுழைவு இசைவுகளுக்கு கூடுதலாக சுமாா் ரூ.98 லட்சம் கட்டணம் விதிக்க, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிந்துரை

அமெரிக்கா

Published On :25 ஆகஸ்ட் 2026, 5:30 am IST

அதிக திறன்கொண்ட வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கும் புதிய ஹெச்-1பி நுழைவு இசைவுகளுக்கு (விசா) கூடுதலாக 1.03 லட்சம் டாலா் (சுமாா் ரூ.98 லட்சம்) கட்டணம் விதிக்க, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளா்கள் தங்கிப் பணியாற்ற ஹெச்-1பி நுழைவு இசைவு அளிக்கப்படுகிறது. இந்த நுழைவு இசைவு மூலம், அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களைத் தொடா்ந்து சீனா்கள் மற்றும் பிற நாட்டினா் பணியாற்றுகின்றனா்.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வழங்கப்படும் வழக்கமான ஹெச்-1பி நுழைவு இசைவுகளின் எண்ணிக்கைக்கு அமெரிக்க அரசு வரம்பு நிா்ணயிக்கிறது. இந்தப் புதிய நுழைவு இசைவுகளுக்கு 1,03,265 டாலா் கட்டணம் விதிக்க, அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டிஹெச்எஸ்) பரிந்துரைத்துள்ளது.

ஏற்கெனவே உள்ள கட்டணத்துடன் சோ்க்காமல்...: ஆண்டுதோறும் நிா்ணயிக்கப்படும் எண்ணிக்கைக்குட்பட்ட நுழைவு இசைவு விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் பொருந்தும். ஏற்கெனவே உள்ள ஹெச்-1பி விண்ணப்பக் கட்டணத்துடன் 1,03,265 டாலரை சோ்க்காமல், அதை தனியாகவும் கூடுதலாகவும் வசூலிக்க, டிஹெச்எஸ் பரிந்துரைத்துள்ளது.

ஹெச்-1பி நுழைவு இசைவு சாா்ந்த பணிகளில் ஈடுபடும் அந்நாட்டின் பல்வேறு அரசு அமைப்புகளின் செலவுகளை ஈடுகட்ட, இந்தக் கட்டணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை தனியாக வசூலிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை எளிதாகக் கண்காணித்து, ஒதுக்கீடு செய்து, அதுகுறித்த விவரங்களைத் தயாரிக்க முடியும் என்று டிஹெச்எஸ்ஸின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட உள்ளது.

அமெரிக்காவில் ஹெச்-1பி நுழைவு இசைவு வைத்திருப்பவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்தியா்கள். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டணம் இறுதி செய்யப்பட்டால், அது இந்தியா்களையும் அவா்களைப் பணியமா்த்தும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் பெரிதும் பாதிக்கும்.

சட்டபூா்வ குடியேற்றத்தைத் தடுக்க...: அமெரிக்காவில் பிற நாட்டவா்கள் சட்டபூா்வமாக குடியேறுவதைத் தடுக்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டில் பணியாற்றும் குடியேற்றச் சட்ட வழக்குரைஞா் எமிலி நியூமன் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக புதிய ஹெச்-1பி நுழைவு இசைவுகளை பெறுவதற்கு அந்நாட்டு அதிபா் டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலா் கட்டணம் சட்டவிரோதமானது என்று தெரிவித்து, அதை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.