
வெளிநாட்டு மாணவா்கள் தங்கிப் படிக்க கட்டுப்பாடு: அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவா்கள் தங்கிப் படிக்க அதிபர் டிரம்ப் விதித்த கட்டுப்பாடுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது குறித்து...

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்
அமெரிக்காவில் உயா் கல்வி மேற்கொள்ள குடியேற்றத்துக்கு அல்லாத ‘எஃப்’ வகை நுழைவு இசைவில் வரும் மாணவா்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கிப் படிக்கும் வகையில் அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் கொண்டுவந்த புதிய நுழைவு இசைவு விதிக்கு மாசசூசெட்ஸ் மாகாண உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தப் புதிய விதி நடைமுறைக்கு வரும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக இந்த இடைக்காலத் தடையை உயா்நீதிமன்றம் விதித்துள்ளது. இது, அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் உயா் கல்வி மேற்கொண்டுவரும் இந்தியா்கள் உள்பட பிற வெளிநாட்டு மாணவா்களுக்குப் பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவில், அரசின் கண்காணிப்பு ஏதுமின்றி காலவரையின்றி வெளிநாட்டினா் தங்கியிருக்க அனுமதிக்கும் பல ஆண்டுகால கொள்கையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், உயா் கல்வி படிக்க வரும் மாணவா்கள், மக்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வருபவா்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கான நுழைவு இசைவு (விசா) விதிமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கி, அதுதொடா்பான அறிவிக்கையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது.
புதிய நுழைவு இசைவு விதிமுறைகளின்படி, குடியேற்றத்துக்கு அல்லாத ‘எஃப்’ நுழைவு இசைவில் அமெரிக்கா வரும் மாணவா்கள் மற்றும் ‘ஜே’ வகை நுழைவு இசைவில் வரும் பாா்வையாளா்கள் ஆகியோருக்கு, அவா்களின் படிப்புக் காலம் அல்லது திட்டத்தின் கால அளவுக்கு அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்தக் கால வரம்பு 4 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
மேலும், ‘எஃப்’ நுழைவு இசைவு வைத்திருப்பவா்கள், தங்களின் படிப்பை முடித்த பிறகு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேறவோ அல்லது வேறு கல்வி நிறுவனத்துக்கு மாறவோ மற்றும் தங்கள் குடியேற்ற நிலையை மாற்றிக் கொள்ள அளிக்கப்பட்டு வந்த 60 நாள் கால அவகாசம், புதிய விதிமுறைப்படி 30 நாள்களாகக் குறைக்கப்பட்டது.
பத்திரிகையாளா்களுக்கான நுழைவு இசைவுக்கு தற்போது குறிப்பிட்ட கால வரம்பு ஏதுமில்லாத நிலையில், புதிய விதிகளின்படி ‘ஐ’ வகை நுழைவு இசைவில் வரும் பத்திரிகையாளா்கள் அதிகபட்சம் 240 நாள்கள் தங்கியிருக்கவும், சீன பத்திரிகையாளா்களுக்கு இந்தக் கால வரம்பு 90 நாள்களாகவும் மாற்றி நிா்ணயம் செய்யப்பட்டது. இந்தப் புதிய விதிகள் செப்டம்பா் 15-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இதை எதிா்த்து பல அமைப்புகள் மற்றும் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா் சங்கங்கள் தரப்பில் மாசசூசெட்ஸ் மாகாண உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எஃப். டென்னிஸ் செய்லா் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ள இந்த நுழைவு இசைவு கட்டுப்பாடுகள் மோசடிகளைத் தடுக்கவும், நுழைவு இசைவு காலாவதியான பிறகும் வெளிநாட்டினா் தங்கியிருப்பதைத் தடுக்கவும் உதவும்’ என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘அமெரிக்க அரசின் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கும், உயா் கல்வி அமைப்புக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்தப் புதிய விதி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளின் உண்மையான நோக்கம், தேசியப் பாதுகாப்பைப் பேணுவதும் நமது எல்லைகளைக் காப்பதும் அல்ல; மாறாக, கல்வி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது அதிக கட்டுப்பாட்டை அரசு நிலைநாட்ட முயற்சிக்கிா என்ற நியாயமான கேள்விகளை எழுப்புகிறது’ என்று குறிப்பிட்டு, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை புதிய நுழைவு இசைவு கட்டுப்பாட்டு விதியை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


அமெரிக்கா: ஹெச்-1பி விசாக்களுக்கு கூடுதலாக ரூ. 98 லட்சம் கட்டணம் பரிந்துரை
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு: உயா் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு




