75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்!
அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா வழங்குவதற்கு டிரம்ப் அரசு விதித்த தடையை ரத்து செய்து அமெரிக்க ஃபெடரல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் - AP
அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா வழங்குவதற்கு டிரம்ப் அரசு தடை விதித்திருந்ததை ரத்து செய்து அமெரிக்க ஃபெடரல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்தத் தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் நீதிபதி ஜீனெட் வர்காஸ் இந்தத் தீர்ப்பை வழங்கினார். இது சட்டத்திற்கு புறம்பானது எனக் குறிப்பிட்ட அவர், இந்த உத்தரவை வெளியிட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறியுள்ளதாகக் கூறினார்.
ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வந்த இந்தக் கொள்கை மூலம் ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, தாய்லாந்து மற்றும் ஏமன் உள்பட 75 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை அமெரிக்க நிறுத்தி வைத்திருந்தது.
”அதிக ஆபத்துகள் கொண்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் குடியேறிகள், சட்டவிரோதமாக நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்தாமல், நாட்டிற்கு பொதுச்சுமையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கொள்கையை நடைமுறைப்படுத்திய போது வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆனால், குடியேற்ற விண்ணப்பதாரர்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என தூதரக அதிகாரிகள் தீர்மானித்தாலும், அவர்களின் பூர்வீக நாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குடியேற்ற விசாக்களை மறுக்குமாறு தவறாக உத்தரவிடப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு கொள்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு விசா மறுப்பையும் ரத்து செய்வதாகக் கூறப்படும் நிலையில், அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் லட்சக்கணக்கான ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்றுவதாக டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அவர் பதவியேற்ற பின்னர், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, எல்லை தாண்டி வருபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் டிரம்ப் மேற்கொண்டார்.
Summary
Trump banned visas for 75 countries: US court overturns the order!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



