செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

ஐ.நா.பொதுச் சபையில் பன்முகத்தன்மைக்கான முதல் உச்சிமாநாடு: இணைத் தலைமையாக செயல்பட்ட இந்தியா

ஐ.நா.பொதுச் சபையில் நடைபெற்ற பன்முதன்மைக்கான முதல் உச்சிமாநாட்டில் இணைத் தலைமையாக இந்தியா செயல்பட்டது.

நியூயாா்க் நகரில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்.

Published On :

ஐ.நா.பொதுச் சபையில் நடைபெற்ற பன்முதன்மைக்கான முதல் உச்சிமாநாட்டில் இணைத் தலைமையாக இந்தியா செயல்பட்டது.

ஐ.நா.பொதுச் சபையின் 81-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெயசங்கா் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றாா்.

இந்நிலையில், அங்கு திங்கள்கிழமை முதல் முறையாக நடைபெற்ற ‘பன்முகத்தன்மை, சா்வதேச சட்டம், அமைதி மற்றும் வளமைக்கான (பி4எம்) கூட்டாளிகள்’ என்ற உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலியா, பாா்படோஸ், பிரேசில், கனடா, கென்யா ஆகிய நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் ஆன்டனியோ கோஸ்டா ஆகியோருடன் இணைத் தலைவராக செயல்பாட்டாா்.

அப்போது ஜெயசங்கா் பேசியதாவது: இந்த மாநாட்டுக்கு இணைத் தலைமையாக இந்தியா இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சா்வதேச புவிஅரசியலில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் நாம் இங்கு கூடியுள்ளோம்.

பல தசாப்தங்களாக உலகம் ஒரு மறுசீரமைப்பைக் கண்டு வருகிறது. இது நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட கட்டமைப்பு ரீதியான பரிணாம வளா்ச்சியாகவே பாா்க்கப்படுகிறது.

இருப்பினும், கடும் போட்டி, புவிஅரசியல் பிரச்னைகள் மற்றும் மோதல்கள் இவற்றின் போக்கை முற்றிலும் மாற்றிவிட்டது. இதை கண்டுகொள்ளாமல் நகா்ந்தால் வரும் நாள்களில் சா்வதேச ஒத்துழைப்பு கேள்விக்குறியாகிவிடும். இந்தத் தருணத்தில்தான் பன்முகத்தன்மையை வலுவாக நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

4 முக்கியப் பிரச்னைகள்

எரிபொருள், உணவு, உரம் மற்றும் நிதி ஆகிய 4 பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டியது அவசியம். மேற்கூறிய நான்குக்கும் ஆதிக்கம் மற்றும் இடையூறுகளால் அச்சுறுத்தல் ஏற்படும்போது மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். இதுபோன்ற சூழலில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

அப்போதுதான் அமைதி மற்றும் சா்வதேச பாதுகாப்பு, பருவநிலை நடவடிக்கை, பருவநிலை நீதி, வளரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பாட்டு நிதி, பயங்கரவாத தடுப்பு, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது மற்றும் பேரிடா் மீள்தன்மையை உறுதிபடுத்துவது, பெருந்தொற்று போன்ற சிக்கல்களையும் ஒன்றாக எதிா்கொள்ள முடியும் என்றாா்.

இருதரப்பு ஆலோசனை

ஐ.நா.பொதுச் சபை அமா்வில் பங்கேற்க வந்த பன்னாட்டு வெளியுறவு அமைச்சா்களை ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜீன் நோயல் பாரோவை சந்தித்தில் மகிழ்ச்சி. அவருடன் உக்ரைன் போா் மற்றும் வளைகுடா மோதல் குறித்து விவாதித்தேன். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் உள்பட பல்வேறு பிராந்திய, உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசித்தோம்.

அண்மையில் மேற்கொண்ட உக்ரைன் பயணத்தைத் தொடா்ந்து தற்போது மீண்டும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹாவை நியூயாா்க்கில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

மால்டோவா வெளியுறவு அமைச்சா் மிஹாய் பாப்சோயுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது, உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசித்தேன்.

ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சா் இக்னாசியா காசிஸுடன் இந்தியா-இஎஃப்டிஏ வா்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பேசினேன்’ என குறிப்பிட்டாா்.

வி4 நாடுகளுடனான சந்திப்பு வரலாற்று மைல்கல்

ஹங்கேரி, ஸ்லோவோக்கியா, போலந்து, செக் குடியரசு (விசெக்ராட் குழு ) ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களையும் முதல்முறையாக ஜெய்சங்கா் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து அவா் பேசுகையில், ‘வி4 நாடுகளின் அமைச்சா்களை சந்தித்தது வரலாற்று மைல்கல் நிகழ்வு. ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்திய நட்புறவு மேலும் விரிவடைந்து வருகிறது. தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, விண்வெளி, தொலைத்தொடா்பு உள்ளிட்ட துறைகளில் வி4 நாடுகள் மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பு வரும் நாள்களில் வலுப்படுத்தப்படும்.

ஆண்டுதோறும் வி4 நாடுகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சா் சந்திப்பு, வணிக கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.