மோடிஜி இதற்குப் பெயர் ஹிந்தி திணிப்பு இல்லை என்றால் வேறு என்ன?

ஹிந்தி மொழியைப் பரப்ப  மத்திய அரசு எடுக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் நம்மை இந்தியர்கள் என்று சொல்வதை விட, ஹிந்தியர்கள் என்று சொல்ல வைத்துவிடும் அளவுக்கு பயங்கர உத்வேகத்துடன் உள்ளது.
மோடிஜி இதற்குப் பெயர் ஹிந்தி திணிப்பு இல்லை என்றால் வேறு என்ன?

ஹிந்தி மொழியைப் பரப்ப  மத்திய அரசு எடுக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் நம்மை இந்தியர்கள் என்று சொல்வதை விட, ஹிந்தியர்கள் என்று சொல்ல வைத்துவிடும் அளவுக்கு பயங்கர உத்வேகத்துடன் உள்ளது.

தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இலைமறைக் காயாக, மத்திய அரசு சில ஹிந்தித் திணிப்பு நடவடிக்கைகளையும் செய்து கொண்டே வருகிறது.

தமிழக அரசியல் பரபரப்பால் எதிர்க்கட்சிகளின் பார்வையிலும், ஊடகப் பார்வையிலும் ஹிந்தித் திணிப்பு போதிய கவனம் பெறாமலேயே உள்ளது.

ஹிந்தி திணிப்பு என்பது பாஜக தலைமையிலான அரசு செய்யும் முதல் முயற்சியல்ல.. திமுகவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

அது பற்றி ஒரு சின்ன விளக்கம்

ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் -  ஒரு பார்வை
1937ம் ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக ஹிந்தி திணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயமாக்கியதே, ஹிந்தி திணிப்புப் போராட்டத்துக்கு வித்திட்டது.

இந்த போராட்டங்களினால் 1939ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பதவி விலகியது. சென்னை மாகாண பிரிட்டானியா ஆளுநர் எர்ஸ்கின் பிரபு, 1940ம் ஆண்டு கட்டாய ஹிந்திக் கல்வியை விலக்கினார். சுதந்திரத்துக்கு முன்பான இந்த போராட்டம் ஆட்சிக் கலைப்புக்குக் காரணமாக இருந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியக் குடியரசில் அலுவல் மொழி குறித்த நீண்ட விவாதத்துக்குப் பின், ஹிந்தி அரசுப் பணி மொழியாகவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாகவும் விளங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

இதன் அடிப்படையில், 1965ம் ஆண்டில் இருந்து இந்தியை மட்டுமே அரசு மொழியாக மாற்ற மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பலை உருவானது. இதில், தமிழகம் முன்னிலை வகித்தது.

திமுக நடத்திய பல போராட்டங்கள் கலவரமாக வெடித்தது. 2 மாதங்கள் நடந்த இந்த போராட்டங்களை காவலர்களால் தடுக்க முடியவில்லை. ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், மாநிலங்களின் அரசியல் மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்தது. இந்த தாக்கத்தால், 1967ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. தமிழகத்தில் அன்று தோல்வி அடைந்த காங்கிரஸ், இன்று வரை அந்த அரியாசனத்தைப் பிடிக்க முடியாமல் உள்ளது.

(தமிழகத்தில் கிளைபரப்ப நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு, இந்த படிப்பினை இருந்தும்...)

இந்த நிலையில், மத்தியில் ஆண்ட இந்திரா காந்தி தலைமையிலான அரசு, அரசு அலுவல் மொழிச் சட்டத்தில் எப்போதும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளுமே அரசு மொழிகளாக இருக்கும் வகையில் திருத்தம் செய்தது.

அதன்பிறகு பெரிய அளவில் மொழித் திணிப்பை அடுத்தடுத்து வந்த தலைமைகள் மேற்கொள்ளாததால், மெல்லிய காற்றுப் போல, தமிழகத்தில் ஹிந்தி மொழியும் சேர்ந்து வீசத் தொடங்கியது என்பதே உண்மை.

ஆனால், தற்போது அந்த சூழல் மாறி வருகிறது. ஹிந்தி திணிப்பு எனும் சூறாவளி, மெல்லியக் காற்றையும் வெறுக்கும் அளவுக்கு நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது.

சாலையோர மைல் கற்களில் மாநில மொழிகளை விட, ஹிந்திக்கு முக்கியத்துவம், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் என அடுக்கடுக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

பாஜக தலைமையிலான அரசு, மத்தியில் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், மத்திய அரசு, நாடு முழுவதும் ஹிந்தி மொழி பரப்பலுக்காக மட்டும் பல கொள்கைகளை எடுத்து அதனை அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

அறிவிப்பு இல்லாமல் மைல் கற்களில் தமிழை அகற்றிவிட்டு ஹிந்தி மொழியில் ஊர் பெயர்களை எழுதியது தமிழர்களுக்கு விழுந்த பெரிய அடியாகக் கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல நியாயங்களையும் கற்பித்தார். ஏற்கனவே தமிழகத்தில் அரசியல் நிலவரம் குழம்பியிருக்கும் நிலையில், ஹிந்தி பிரச்னையும் அரசியலாக்கப்படுவது அவலத்தின் உச்சம்.

மைல் கற்களில் ஹிந்தி

குழம்பியக் குட்டையில் மீன் பிடிப்பதைப் போன்று தமிழகத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மிகவும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிடத்தக்கவை 75 மற்றும் 77 எண் கொண்ட சாலைகளாகும். இவற்றில் தேசிய நெடுஞ்சாலை 75 கர்நாடகத்தின் வழியாக செல்லும் 73ஆவது எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை -பெங்களூர் இடையிலான 48ஆவது எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையையும் வேலூரில் இணைக்கிறது. இந்த சாலையின் மொத்த நீளம் 533 கி.மீ ஆகும். அதேபோல் தேசிய நெடுஞ்சாலை 77 கிருஷ்ணகிரி - திண்டிவனம்  நகரங்களை இணைக்கிறது. இந்த சாலைகளில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த சாலைகளில் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களை அழித்து விட்டு, ஹிந்தியில் எழுதும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் சாலைகளிலுள்ள ஊர்களின் பெயர்களை இந்திமயமாக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள ஊர்களின் பெயர்களை இந்தியில் எழுதுவது தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படாது என்று மத்திய அரசின் சார்பில் பலமுறை அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு எதிரான செயல் என்பது மட்டுமின்றி, அந்த சாலைகள் வழியாக செல்லும் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளின் நலன்களுக்கு எதிரான செயலாகும். இச்சாலைகள் அனைத்திலும், அனைத்து ஊர்களிலும் இந்தியில் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இதுதவிர தமிழகத்தில் தமிழிலும், ஆந்திரத்தில் தெலுங்கிலும், கர்நாடகத்தில் கன்னடத்திலும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன. வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை, தோல் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு மைல்கற்களில் எழுதப்பட்டுள்ள எந்த மொழியும்  தெரியாது என்பதால் அவர்கள் எந்த ஊரை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியாமல் தடுமாறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி மொழியை திணிக்கும் செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு முறை இந்தித் திணிப்பு நடத்தப்படும் போதும் அதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுவதும், அதைத் தொடர்ந்து அகற்றப்படும் இந்தி எழுத்துக்கள் அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் முளைப்பதும் வாடிக்கையாகி விட்டன. தேசிய நெடுஞ்சாலைகள்  75 மற்றும் 77ல் இந்தியில் பெயர் எழுதும் முடிவு உள்ளூர் அளவில் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. மாறாக, மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் தான் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த  ஊர் பெயர்கள் இந்தியில் மாற்றப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்மூலம் இது மத்திய அரசின் திட்டமிட்ட இந்தித் திணிப்பு என்பது தெளிவாகிறது.

மத்திய அரசுத் துறைகளுக்கு சொந்தமான சமூக ஊடகக் கணக்குகளில் இந்தியில் மட்டுமே கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று ஆணையிட்டதன் மூலம் இந்தியைத் திணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முயன்றது, அதன்பின் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் சமஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும்; ஆசிரியர் நாளை குரு உத்சவ் ஆக கடைபிடிக்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளின் மூலம் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது,  பல்கலைக்கழகங்களின் மூலம் இந்தியை திணிக்கத் துடித்தது,  உள்ளூர் பண்பலை வானொலிகளிலும் இந்தி நிகழ்ச்சிகளை திணித்தது என இந்தி பேசாத மாநில  மக்கள் மீது இந்தி - சமஸ்கிருத திணிப்பு முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பல்வேறு இன, மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை திட்டமிட்டு திணிப்பது மத்திய அரசுக்கு அழகல்ல என்று தமிழகத்தைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டனர்.

அதோடு, குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இனி ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவும் உள்ளது.

இதைத் தவிர உள்நாட்டு விமானங்கள், கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தியைப் பிரதானப்படுத்தும் பல்வேறு பரிந்துரைகளும் விரைவில் அமலாக வாய்ப்புள்ளது.

ஹிந்தியை பரவலாக்கும் நோக்கில், அலுவலக மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சில பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியிருந்தது. அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அவ்வாறு இசைவு தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமானவை:

ஹிந்தியில் பேசவும், எழுதப்படிக்கவும் தெரிந்த அமைச்சர்கள் இனி அந்த மொழியில் மட்டுமே உரையாற்ற வேண்டும். இது குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்.

இதைத் தவிர உள்நாட்டு விமானங்களில் இனி அறிவிப்புகள் ஹிந்தியிலும் இடம்பெறும். அதன்படி, ஆங்கிலத்தைத் தொடர்ந்து ஹிந்தியிலும் அறிவிப்புகளை வெளியிடுவது விமான சேவை நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்படுகிறது.

அனைத்து விமானங்களுக்குள்ளும் ஹிந்தி நாளிதழ்கள், வார இதழ்கள் வைத்திருக்க வேண்டும். ஆங்கில இதழ்களுக்கு இணையாக அவை இடம்பெற வேண்டியது அவசியம்.

ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளில் ஹிந்தி மொழியை அதிகம் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் மட்டுமே விடையளிக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.

அந்த நடைமுறையை மாற்றி, மாணவர்கள் விருப்பப்பட்டால் அனைத்துத் தேர்வுகளையும் ஹிந்தியிலேயே எழுத வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோன்று நேர்முகத் தேர்விலும் ஹிந்தியில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அனைத்து பரிந்துரைகளையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், அவை விரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. முன்னதாக, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் மற்றொரு பரிந்துரையை நாடாளுமன்றக் குழு அளித்தது.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தபோதிலும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகே அதனை அமல்படுத்த முடியும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாநில மொழிகளுடன் சேர்த்து ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்

மேலும், சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வெளியேறும், மாணவ, மாணவிகள் ஹிந்தி மொழியை நிச்சயம் படித்திருக்கும் வகையில் பாடத் திட்டத்தை மாற்றியமைக்கவும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்பு, இரண்டு மொழிப் பாடங்களில் ஒன்று ஆங்கிலம், மற்றொன்று விருப்பப் பாடமாக அதாவது தமிழ் அல்லது ஹிந்தியை தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், தமிழை விருப்ப மொழியாகத் தேர்வு செய்யும் மாணவ, மாணவியர் ஹிந்தியைப் படிக்காமலேயே தனது பள்ளிப்படிப்பை முடித்துவிடலாம்.

ஆனால், புதிய உத்தரவின்படி, தமிழ், பிரெஞ்ச் போன்றவற்றை விருப்ப மொழியாக வைத்து, ஹிந்தியை கட்டாயமாக்கும் வகையில் கல்வி முறை மாற்றியமைக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த முறை பல பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துவிட்டாலும், இது கட்டாயமாக்கப்படுவதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் அளவிலேயே இந்த மொழிப் பிரசாரம் நின்றுவிடவில்லை. அதற்கடுத்த நிலையை எட்டியுள்ளது. ஆம், கல்லூரி பல்கலைக்கழகங்களிலும் இந்த மொழிப் பிரசாரம் சூடுபிடிக்கிறது.

சமீபத்தில், நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் விரைவில் பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளன. அத்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்தளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழு அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து விட்டார்.

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாக பொதுச் சட்டம் ஒன்றை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதோடு, அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழிக்கான துறைகள் இல்லை என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கண்டறிய வேண்டும். அங்கு ஹிந்தி மொழிக்கான துறைகளை உருவாக்குமாறு ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

மேலும், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் குறைந்தபட்ச ஹிந்தி மொழி வழிக் கல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிருக்காத மாநிலங்களில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் ஹிந்தி மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அவர்கள் தங்களின் தாய் மொழியில் இத்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.

உயர் கல்வித் துறையில் தன்னாட்சி அளிப்பதற்காக சில சட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் வகுத்து வந்தன. அவற்றின்படி சில பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது.

இந்நிலையில், அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதற்காக சமச்சீரான ஒரு கொள்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களிடம் இருந்து எதிர்ப்பும், விமர்சனமும் எழலாம்.

ஏற்கெனவே, கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் முறையிட்டுள்ளது.

பள்ளி அளவில் என்றால் சமூக ஆர்வலர்கள் மட்டுமே குரல் கொடுப்பார்கள். தற்போது மத்திய அரசின் மொழிப் பற்று கல்லூரி, பல்கலைக் கழங்களையும் தொ(சு)ட்டுவிட்டதால், இதனை எதிர்க்க அந்த மாணவர்களும் களம் இறங்குவார்கள்.

ஹிந்தியை திணிக்கவில்லை. நமது ஆட்சி மொழியை, அனைத்து மக்களுக்கும் அறிய வேண்டும் என்று தான் மத்திய அரசு கருதுகிறது. அதற்காக சில நடைமுறைகளையும் வகுத்தளிக்கிறது என்கிற வாதம் முன் வைக்கப்பட்டாலும், எல்லா மாநிலங்களுக்குமான பொது மொழியாக ஏற்கனவே ஆங்கிலம் நடைமுறையில் இருக்கும் போது, ஹிந்தியை ஏன் மத்திய அரசு கட்டாயப்படுத்த வேண்டும்.

அரசால் வழங்கப்படும் அரிசி கோதுமையைத் தவிர, மளிகைக் கடையில் நாம் விலை கொடுத்து வாங்கும் மொச்சை, கடலைப் பருப்பு, சோப்பு, டீத்தூள் போன்ற பொருட்கள்தான் ரேஷன் கடையிலும் தனியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் நமக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளலாம் என்றால், 10ல் 3 பேர் நிச்சயம் ஏதேனும் ஒரு பொருளை வாங்கத்தான் செய்வார்கள். ஆனால், 10ல், 10 பேருமே ஏதேனும் ஒரு பொருளை வாங்கித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போதுதான் எதிர்ப்பு எழுகிறது. அதே நிலை தான் இங்கு ஹிந்தியிலும். தற்போது தமிழகத்தில் ஏராளமான ஹிந்தி பிரசார சபாக்கள் செயல்படுகின்றன. அதன் மூலம் லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் 6 மாதத்துக்கு ஒரு முறை ஹிந்தி தேர்வெழுதி அதில் பட்டமும் பெறுகிறார்கள். இங்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பும் இல்லை. யாருக்கு ஹிந்தி மொழி தேவைப்படுகிறதோ, ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் அங்கு சென்று படித்துக் கொள்கிறார்கள். இதனை தடுக்க எந்த அமைப்பும் இல்லை.

ஆனால், எல்லோரும் படிக்க வேண்டிய சூழ்நிலையை மறைமுகமாக அல்ல நேரடியாகவே ஏற்படுத்துவதும், ஹிந்தி தெரியாதவர்கள் சிரமத்துக்கு உள்ளாகும் வகையில் திட்டங்களை மாற்றுவதும் தான் திணிப்பு என்ற வகையில் பார்க்கப்படுகிறது.

பள்ளியில் ஹிந்தி கட்டாயம், அரசு ஊழியர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும், கல்லூரியில் ஹிந்திப் பாடம், மைல் கற்களில் ஹிந்தி என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றலாம், இங்கு கடப்பாறையே இறக்கப்படுகிறது என்பதுதான் மாநில மொழிப் பற்று நிறைந்த ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com