பாலியல் வன்கொடுமைகளில் மகள்களை இழந்து பரிதவிக்கும் அம்மாக்கள் அனைவருக்குள்ளும் கொதித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு கொல்வேல் காளி!

மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ திரைப்படத்தில் வரும் அம்மாவைப் போல, உலக அம்மாக்கள் அனைவரும் தங்களது அறியாப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட பாலியம் அநீதிகளுக்கு எதிராக ரெளத்திரம் பழக ஆரம்பித்தார்கள் எனில்...
பாலியல் வன்கொடுமைகளில் மகள்களை இழந்து பரிதவிக்கும் அம்மாக்கள் அனைவருக்குள்ளும் கொதித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு கொல்வேல் காளி!

கடந்த வாரத்தில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் வழக்குரைஞர் ஒருவர், தான் தத்தெடுத்து வளர்த்து வந்த மூன்று வயதுப் பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற சம்பவத்தில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு கைதானார். இப்படி ஒரு கொடுஞ்செயலை செய்யும் ஈனத்தனமானவர்களுக்கு எல்லாம் ‘ர்’ விகுதி தேவையில்லை. தற்போது போஸ்ட் மார்ட்டம் ஆய்வறிக்கையில் அவனது குற்றம் நிரூபிக்கப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள அந்த மனிதனின் வழக்கு எப்படித் திரும்பும் எனத் தெரியவில்லை.

கடந்த வருடம் போரூர் மதனந்த புரத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப் பட்ட சிறுமி ஹாஷினி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப் பட்ட தஸ்வந்த் எனும் இளைஞன் குண்டர் சட்டத்தில் ஜாமீனில் வெளி வர முடியாதபடி சிறையிலடைக்கப் பட்டுள்ளான். தான் இன்னது தான் செய்கிறோம் என்று தெரிந்தே... சைக்கோத்தனமாக ஒருவன் திட்டமிட்டு செய்த ஒரு படுகொலைக்கு இந்த தண்டனை மட்டும் போதுமா? அவனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்ததால் நாட்டில் மீண்டும் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் கிஞ்சித்தாவது குறைந்து விட்டதா என்ன? சொல்லப் போனால் இத்தகையை சம்பவங்கள் மேலும், மேலுமென அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. அரசு இதற்கு எதிராக, இவற்றைக் கண்டித்து என்ன தான் நடவடிக்கை எடுத்து விட்டது இதுவரை?

இந்தக் கொலைகளுக்கு மத்தியில் காலில் இருக்கும் கொலுசு மற்றும் காதுக் கம்மலுக்காக ஒரு குழந்தை சில மாதங்களுக்கு முன்பு சென்னை, எண்ணூரில் ரித்திகா என்ற சிறுமி, கொலை செய்யப் பட்டு, சடலமாக குப்பைத் தொட்டியில் மீட்டெடுக்கப் பட்டாள். அந்தக் கொலைக்கான காரணம் நகையா? அல்லது அதிலும் இப்படிப் பட்ட பாலியல் வன்கொடுமை உண்டா? எனும் ரீதியில் விசாரணை சென்று கொண்டிருந்த வேலையில் அந்த வழக்கு அப்படியே முடக்கப் பட்டு விட்டது.

அரியலூர் நந்தினி வழக்கிலோ, குற்றவாளிகள் இன்னார் தான் என்று வெளிப்படையாகத் தெரிந்திருந்த போதிலும்; சட்டம் ஏன் இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

இவற்றுக்கு நடுவில் இன்று ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சி ஒன்றில் ஹைதராபாத்தில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்டு மிகவும் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளும், பாலியல் வன்முறைகளும் இப்படித் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால் நாம் என்ன மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைய வேண்டிய இத்தகைய கொடுமைகள் ஆண்டு தோறும் 20 % அதிகரித்துக்கொண்டே செல்வதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விவரக் கணக்குகளை வெளியிட்டுள்ளது. அதனடைப்படையில் பார்த்தால்; நாளொன்றுக்கு 2 பெண் குழந்தைகள் வீதம் ஆண்டு தோறும் 655 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் படுவதாக 2014 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 2014 க்குப் பிறகு இந்தப் புள்ளி விவரங்களில் பெரிதாக எந்தப் பின்னடைவும் இருந்து விடப் போவதில்லை. அது மேலும் அதிகரித்திருக்கும் என்று நம்பலாம். இனியாவது பெண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள்; ‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்வதை திரைப்பட வசனமாக நினைத்து எள்ளி நகையாடமல், அதிலுள்ள தார்மீக பயத்தை அடையாளம் காண முயல வேண்டும் இந்த சமூகம். 

வீட்டை விட்டு வெளியில் விளையாடச் சென்ற குழந்தைகள் மறுபடி வீட்டுக்கு வர சற்று தாமதமானால் அவர்களைப் பெற்ற மனம் என்ன பாடுபடும்? என்று எப்போதாவது இந்த குற்றவாளிகள் சிந்தித்திருப்பார்களா? தவறு செய்ய நினைக்கும், குறிப்பாக... பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ய நினைக்கும் அத்தனை மிருகங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்... தங்கள் குழந்தைகளை இத்தகைய வன்கொடுமைகளில் இழந்து பரிதவிக்கும் அம்மாக்கள் அனைவருக்குள்ளும் ஒரு கொல்வேல் காளி உக்கிரமாகக் கொதித்துக் கொண்டிருக்கிறாள் என்பது. மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ திரைப்படத்தில் வரும் அம்மாவைப் போல, உலக அம்மாக்கள் அனைவரும் தங்களது அறியாப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட பாலியம் அநீதிகளுக்கு எதிராக ரெளத்திரம் பழக ஆரம்பித்தார்கள் எனில் அவர்களுக்கு சட்டம் ஒரு பொருட்டல்ல! தண்டணைகளைப் பற்றி குற்றவாளிகளுக்கு இல்லாத அக்கறை பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?

மதுரையில் சில வருடங்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் பெற்ற மகளை, தனக்குப் பிறந்தவளில்லை எனும் கொடூர மனப்பான்மையின் அடிப்படையில் பாலியல் கொடுமை செய்ய முயன்ற தன் இரண்டாவது கணவனை கடப்பாரையில் குத்திக் கொன்ற அன்னை ஒருத்தியை குற்றவாளி இல்லை என காவல்துறை விடுவித்தது. அவள் செய்ததை தற்காப்பு நடவடிக்கையே என்று நீதிமன்றம் நம்பியது. 

குறைந்த பட்சம் இப்படிப் பட்ட விழிப்புணர்வாவது வருங்காலத்தில் பெண்களிடம் ஏற்படுத்தப் பட வேண்டும். சட்டங்களைக் கண்டு குற்றங்கள் குறையவில்லை எனில் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் படவிருக்கும் பெண்கள் இப்படித்தான் தடாலடி நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். வயது பெண்களுக்கு இது சரியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு இதை எப்படிப் புரிய வைப்பது? குழந்தைகள் பெரியவர்களை விட வலிமையற்றவர்கள் என்பதாலேயே அவர்கள் மீது நடத்தப் படும் வன்முறைகளின் சதவிகிதம் இன்னும் அதிகம். மனநலம் என்ற பெயரில் ஒருபக்கம் குழந்தைகளை தன்னிச்சையாக இயங்கப் பழக்குங்கள் என்று முழங்கி விட்டு, அவர்கள் தனியாக இருக்கையில் அவர்கள் மீது இப்படிப் பட்ட பாலியல் வன்கொடுமைகளையும் பாய்ச்சுவோம் என்றால் அது அரக்கத்தனமானது. குழந்தைகள் தன்னிசையாக இயங்கலாம் ஆனால் எப்போதும் அது பெற்றோரின் கண்காணிப்பில் நிகழ வேண்டும். குறைந்த பட்சம் இதை பெற்றோர் மறக்கக் கூடாது. கவனமின்மையும், கண்காணிப்பின்மையுமே பல நேரங்களில் இப்படியான கொடுமைகளுக்கு காரணமாகி விடுகிறது.

இனி சிந்தாதிரிப் பேட்டை குழந்தை விசயத்துக்கு வருவோம்; தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் விசயத்தில் அரசு இன்னும் கூடுதல் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என்பது இந்தக்குழந்தைக்கு நேர்ந்த அநீதியின் பின் உறுதியாகி இருக்கிறது. பெற்ற மகளாக வளர்க்கும் எண்ணத்தில் தத்தெடுக்கப் பட்ட குழந்தையிடம் ஒருவன் இத்தகைய வன்முறையை நிகழ்த்துகிறான் எனில் அதன் பின்னணியை ஆராய வேண்டும். அவன் திட்டமிட்டே இந்தச் செயலை செய்திருக்கிறான். இவனைப் போன்ற பிற மனிதத் தன்மையற்ற மிருகங்களுக்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய இப்படி ஒரு வழி இருக்கிறது என்று காட்டிக் கொடுப்பதாக ஆகாதா இச்செயல்? தத்துக் கொடுக்கப் பட்டது தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ, அல்லது அரசு காப்பகங்கள் மூலமாகவோ என எந்த வழியாக இருந்தாலும் இரண்டுமே தங்களிடமிருந்து தத்து கொடுக்கப் பட்ட குழந்தைகளை அவர்களது பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் கருதி அந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்க வேண்டும். தத்தெடுத்தல் சட்டங்கள் மேலும் முறைப்படுத்தப் பட வேண்டும் என்பதைத் தாண்டி, கணவன், மனைவியாக தத்துக் கேட்டு வரும் தம்பதிகளில் கயவர்களை எப்படி அடையாளம் காண்பது என்பதைப் பற்றியும் அரசு கொஞ்சம் ஆலோசிக்க வேண்டும். 

சொந்தக் குழந்தைகளிடத்தில் பாலியல் வன்கொடுமைகளை நிறைவேற்ற யத்தனிக்கும் தகப்பன்மார்கள் எவரேனுமிருந்தால் அவர்களுக்கு அவர்களை அம்மாக்களும் ,அம்கள்களுமே தண்டித்து விட்டு பாதுகாப்பாக மீள் நமது சட்டத்தில் மேலே சொல்லப் பட்ட மதுரை சம்பவம் போன்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஆகவே பெண்கள், தமக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் போது எதிராளியை எப்படித் தாக்குவது? என்பது குறித்து அச்சப் படவோ, யோசிக்கவோ தேவையில்லை. இதில் குறிப்பிடத் தக்க மற்றொரு விசயமும் உண்டு; இந்தியாவையே உலுக்கிய டெல்லி, நிர்பயா வழக்கில்; அந்தப் பெண்ணுக்கு நிகழ்த்தப் பட்ட உச்சகட்ட வன்முறைக்கு காரணமாக கொலையாளிகள் கூறிய பதில்; கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட பெண்; அத்தகைய வன்முறையின் போது... அதைத் தாங்கிக் கொண்டு ஒத்துழைக்க வேண்டுமாம், அப்படியல்லாமல் எதிர்த்துப் போராடியதால் தான் அவளை சாகும் அளவுக்குத் தாக்கினோம் என்று வன்முறை நிகழ்த்தியவர்களில் ஒருவன் சொன்னான். இது எத்தனை இரக்கமற்ற பதில்?! ஒரு இளம் பெண்ணை ஓடும் பேருந்துக்குள் வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு... மீட்கப் பட்ட அவள் மரணவாயிலில் காத்திருக்கையில் நாடே கொந்தளித்துக் கொண்டிருந்த போது குற்றவாளிகளில் ஒருவன் ஊடகப் பேட்டியில் இப்படிச் சொல்கிறான் எனில்; இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு இருக்கும் சுதந்திரம் தான் அவர்களை மேலும், மேலும் குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

ஆகவே பெண்களே! பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப் படும் நிலை வந்தால், தயவு செய்து நமது புராணங்களில் மட்டுமே நாம் கண்ட கொலைவேல் காளியை உங்களுக்குள் ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். நமது சட்டங்கள் குற்றம் நடந்து முடிந்த பின்னர் தண்டிப்பதற்கும், தப்பிப்பதற்கும் மட்டுமே சில வேளைகளில் உதவலாம். ஒவ்வொரு நொடியும் பெண்களுக்குக் காப்பு அவர்களது தைரியமும், தன்னம்பிக்கையும் மட்டுமே! இதையே தான் பாரதி ‘பாதகம் செய்பவர்களைக் கண்டால் மோதி மிதித்து விடு பாப்பா’ என்று சொன்னார். ஆகவே உங்களுக்கெதிரான அநியாயங்களை மிதிக்கத் தயங்காதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com