குளிர்ச்சாதன வசதியுடன் கூடிய உலகின் மிக, மிகச்சிறிய இந்த நட்சத்திர உணவக விடுதியில் தங்க, கட்டணம் ரூ.3631 மட்டுமே!

2011 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டே பேர் தான் அமர்ந்து உணவுண்ண முடியும். இருவரைத் தாண்டி இன்னொருவருக்கு இதற்குள் இடமில்லை.
குளிர்ச்சாதன வசதியுடன் கூடிய உலகின் மிக, மிகச்சிறிய இந்த நட்சத்திர உணவக விடுதியில் தங்க, கட்டணம் ரூ.3631 மட்டுமே!

நாம் இதுவரை எத்தனையோ விதமான உணவகங்களைக் கண்டிருக்கலாம். மலைக்குகைகளுக்குள் உணவகம், பாறை உச்சியில் திறந்த வெளி உணவகம், பழைய வேன்கள் மற்றும் மினி பேருந்துகளை ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கான ரெஸ்டாரெண்டுகளாக்கிய மொபைல் உணவகம், பாதாள உணவகம், சுழலும் உணவகங்கள், நீருக்குள் மிதக்கும் உணவகங்கள் என எத்தனை, எத்தனையோ உணவகங்களைக் கண்டிருப்போம். ஆனால், அவற்றில் எதுவுமே இந்த உணவகத்தைப் போன்றதாக இருக்க வாய்ப்பில்லை. ஜோர்டானில் இயங்கும் இந்த மிகச்சிறிய உணவகம் என்பது ஒரு சிறிய காருக்குள் வடிவமைக்கப்பட்ட குட்டியூண்டு மொபைல் உணவகம். நம்மூர் நானோ கார் போன்று தோற்றம் தரும் இந்தக் கார் வோக்ஸ்வேகன் பீட்டில்ஸ் வகையைச் சேர்ந்தது. பழைய காரை, இப்படி துக்கினியூண்டு உணவகமாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஐடியா அந்த உணவக ஓனருக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால், இந்த ஐடியாவைப் பாராட்டத்தான் வேண்டும்.

2011 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டே பேர் தான் அமர்ந்து உணவுண்ண முடியும். இருவரைத் தாண்டி இன்னொருவருக்கு இதற்குள் இடமில்லை. உணவகமே காருக்குள் இயங்குவதால், உணவகத்தின் பரப்பளவை அதிகரிக்கவும் வாய்ப்பே இல்லை. ஜோர்டானின் மலைப்பாறைகளின் திடுக்கிடச் செய்யும் பள்ளங்கள், உச்சிகள், பாலவன மணற்புயல்கள், கடுங்கோடையின் உருக்கி வார்க்கும் வெப்பம் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருப்பவர்கள் உலகின் மிகச்சிறிய இந்த உணவகத்துக்கு ஒருமுறை சென்று வரலாம். ஜோர்டானில் கோடையில் வெப்பம் 104 டிகிரிக்கும் மேலாக வரிந்து கட்டிக் கொண்டு சுட்டுத் தள்ளும். பார்வைக்குத்தான் எளிய கையடக்கமான உணவகம் போல் தோற்றமளிக்கிறதே தவிர இந்த உணவகத்தில் ஐந்து நட்சத்திர உணவகங்களுக்கு இணையான தரம் நிர்வகிக்கப்படுகிறது. எனவே கோடையில் இந்த உணவகத்தில் உங்களுக்கு இடம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் முன்னதாக பதிவு செய்து வைத்துக் கொண்டால் தான் ஆயிற்று!

ஜோர்டானின் அல்ஜயா பகுதியில் இயங்கி வரும் இந்த உணவகத்தின் அதிபரான முகமது அல் மலஹீம் அலைஸ் அபு அலி தனது உணவகத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்;  ‘என் உணவகத்தின் தரத்தையும், இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சுவாரஸ்யமான பயண இடங்களைத் தேடவும் நான் புதிதாக ஒரு புராஜக்ட்டைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். ஏனெனில், ஜோர்டானில் மக்கள் இன்னமும் தரிசிக்காத சுவாரஸ்யமான அழகான இடங்கள் என்கிறார். அல்ஜயாவில் வசித்த மக்களில் பெரும்பாலோர் தங்களுக்கான நவீன வாழ்க்கையைத் தேடி வேறு இடங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று விட்டாலும் அபு அலி இப்போதும் தனது ஊரின் அழகைச் சிலாகித்து அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அதெல்லாம் சரி தான், ஆனால், வோக்ஸ்வேகன் கார் மட்டுமே தான் இந்த உணவகம் என்று நினைத்து விடாதீர்கள், அருகிலுள்ள குகைப்பாறைக் குடைவொன்றில் இந்த உணவகத்தின் லாபி கம் வரவேற்பறை ஒன்றையும் கூட அபு அலி நிர்வகித்து வருகிறார். பால்டு க்ரூட்டோ என்ற பெயருடன் இயங்கி வரும் அந்த லாபியில் வைத்து தனது உணவகத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு காஃபி, டீ, ஸ்னாக்ஸ் வகையறாக்களை விற்பனை செய்து வருகிறார் அபு அலி. விருந்தினர்கள் வெறும் 40 ஜோர்டானியன் தினார்களுக்கு இந்த வசதிகளை எல்லாம் அனுபவிக்கலாம். அமெரிக்க டாலர்களோடு ஒப்பிட்டால் இது வெறும் 56 டாலர்கள் மட்டுமே! இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 3631 ரூபாய் மட்டுமே!

குளிர்ச்சாதன வசதியுடன் கூடிய உலகின் மிக, மிகச்சிறிய இந்த  நட்சத்திர உணவகத்துக்குச் சென்று சரித்திரத்தில் தங்களது பெயரை பதிவு செய்ய நினைப்பவர்கள் ஒருமுறை ஜோர்டான் சென்று அபு அலியின் உணவகத்தை தரிசித்து விட்டு வரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com