66. வேறொருத்தி

அவளை நகர்த்திவிட்டு நேரே வீட்டுக்குள் நுழைந்தவன், சற்றும் யோசிக்காமல் சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான்.

அந்தப் பெண் முதலில் அச்சப்பட்டிருக்கத்தான் வேண்டும். இவன் யாரோ மந்திரவாதி என்று தோன்றிவிட்டால், அடுத்தக் கணம் அலறிக்கொண்டு ஓடியிருப்பாள். ஆனால் அவளுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் வினய் புன்னகை செய்தான். கைகூப்பி வணங்கி, ‘தாகத்துக்குத் தண்ணி தர்றது உடம்புக்கு உயிரக் குடுக்கறதுக்கு சமம்’ என்று சொன்னான்.

‘நீங்க யாரு?’ என்று அவள் கேட்டாள். வினய் ஒன்றும் சொல்லவில்லை. வெளிச்சம் முற்றிலுமாக மறையத் தொடங்கிவிட்டிருந்தது. அவள் வினய்யை வீட்டுக்குள் அழைத்துச் என்று உட்காரச் சொன்னாள். சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமா என்று விசாரித்தாள். வினய் வேண்டாம் என்று மறுத்துவிட்டான். அந்தச் சிறு குடிசையை அரைக்கணப் பொழுதில் முற்றிலும் கவனித்துவிட முடிந்தது. எளிய குடிசை. நான்கைந்து பாத்திரங்களும் இரண்டு புடைவைகளும் மட்டுமே அவ்விடத்தின் உடைமைகளாக இருந்தன. ஒரு நாடாத் திரி அடுப்பு இருந்தது. மண் சுவரின் ஓரிடத்தில் ஆணியடித்து சிறியதாகக் கண்ணாடி ஒன்று மாட்டியிருந்தது. அதில் ஒரு ஓரத்தில் ரசம் போயிருந்தது. வினய் அதைக் கண்டதும், ‘ரசம்போன கண்ணாடியை வீட்ல வெக்காதே’ என்று சொன்னான்.

அவள் ஏன் என்று கேட்காமல் கண்ணாடியைக் கழட்டிக் கீழே வைத்தாள்.

‘வெளியே கொண்டு போட்டுடு’ என்று வினய் சொன்னான்.

அவள் அப்படியே செய்தாள்.

‘உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’

அவள் தலையசைத்தாள்.

‘புருஷன் என்ன செய்யறான்?’

‘அந்தாள் என்னோட இல்லை.’

‘ஓ. இந்த ஊர்ல இருக்கானா?’

‘இல்லை. எங்க இருக்கான்னு தெரியாது’ என்று அவள் சொன்னாள்.

‘உன்னோட வேற யார் இருக்கா?’

‘யாருமில்லை. நான் தனி’ என்றவள், வினய் சற்றும் எதிர்பாராவிதமாக அவன் காலில் விழுந்தாள்.

அதற்கு முந்தைய நாள் அதிகாலை அவளுக்கு ஒரு கனவு வந்திருக்கிறது. யாரென்று தெரியாத யாரோ ஒரு நபர் அவள் வீட்டு வாசலில் வந்து நின்று குரல் கொடுத்திருக்கிறான். பிரிந்துபோன தனது கணவனாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். சட்டென்று எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, அவளுக்கு அறிமுகமில்லாத யாரோ ஒருவன் அங்கே நின்றிருக்கிறான். அழுக்கு வேட்டி. உடலுக்குப் பொருத்தமில்லாத பெரிய சட்டை. அவன் கழுத்தில் ஒரு ருத்திராட்சம் இருந்தது. தலை கலைந்திருந்தது. முகம் மண்டிய தாடியும் கை விரல் நகங்களெங்கும் அழுக்கும் மண்டிக் கிடந்தன. யார் வேண்டும் என்று அவள் கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை. அவளை நகர்த்திவிட்டு நேரே வீட்டுக்குள் நுழைந்தவன், சற்றும் யோசிக்காமல் சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான். என்ன என்று அவள் திகைத்தபோது, ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

‘சொல்லிவைத்த மாதிரி நீங்கள் அந்தக் கண்ணாடியை எடுக்கச் சொன்னீர்கள்’ என்று அவள் சொன்னாள்.

வினய் புன்னகை செய்தான். ‘ரசம் போன கண்ணாடி வீட்டில் இருப்பது தவறு’ என்று சொன்னான்.

அன்றிரவு வினய் அந்தக் குடிசை வாசலில்தான் படுத்துக்கொண்டான். நாளெல்லாம் நடந்த களைப்பில் படுத்த உடனே உறங்கியும் போனான். அதிகாலை கண் விழித்தபோது அவன் மீது ஒரு போர்வை போர்த்தப்பட்டிருப்பதைக் கண்டான். தலைமாட்டில் ஒரு சொம்பு தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அவன் எழுந்து சென்று முகம் கழுவி வாய் கொப்புளித்தான். அந்தப் பெண் அதற்குள் எழுந்துவிட்டிருந்தாள். ‘காப்பி குடிக்கிறிங்களா?’ என்று கேட்டாள்.

‘இல்லே. எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை.’

‘வெறும் காப்பித்தண்ணிதான். பாலெல்லாம் இல்லை.’

‘ஏன் நேத்து நான் ஒரு சொம்பு பால் குடுத்தேனே. அதைக் காய்ச்ச வேண்டியதுதானே?’

அவள் ஒரு கணம் வெட்கியது போல் இருந்தது. சிறிது இடைவெளி விட்டு, ‘ராத்திரி நான் அதைக் குடிச்சிட்டுத்தான் படுத்தேன்.’

‘ஓ. அப்ப சரி’

‘காப்பித்தண்ணி கலக்கப்போறேன். ஒரு கிளாஸ் குடிங்க’ என்று சொல்லிவிட்டு அவள் அடுப்படிக்குச் சென்றாள். சில நிமிடங்களில் வெந்நீரில் கரைத்து வடிகட்டிய காப்பித்தண்ணீரை எடுத்துவந்து அவன் முன் வைத்தாள். வினய் ஒன்றும் சொல்லாமல் அதை எடுத்துக் குடித்தான்.

‘நீங்க சித்தருங்களா?’ என்று அவள் கேட்டாள்.

வினய் இதற்குப் பதில் சொல்லவில்லை. என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. சிறிது சிறிதாக இன்னும் நான்கைந்து சித்துகள் தன்னால் செய்ய இயலும் என்று அவனுக்குத் தோன்றியது. மந்திர ஜப வலுவில்லாதது உறுத்தியது. முகமது குட்டியை மானசீகத்தில் தேடிப் பிடிக்க மேற்கொண்ட முயற்சியில் தனது பெரும்பாலான சக்தி கரைந்துவிட்டதாகத் தோன்றியது. ஒரு வாரம் போதும். யாருமற்ற தனிமையில் போய் அமர்ந்துவிட முடிந்தால், சற்று வலுவேற்றிக்கொண்டு திரும்ப முடியும். அதற்கு முன்னால் முகமது குட்டியைத் தேடிக் கண்டுபிடித்துவிட முடிந்தால் நன்றாயிருக்கும்.

இவ்வாறு அவன் யோசித்துக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெண் அவனிடம் தன்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். இருபது வயதில் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. திருமணத்தின்போது அவளது பெற்றோர் அவளோடுதான் இருந்தார்கள். பையனைப் பார்த்துப் பேசி திருமணத்தை அவர்கள்தான் நடத்தி முடித்தார்கள். விசாரித்தபோது எல்லாமே சரியாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு எதுவுமே சரியில்லை என்று அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவனிடம் என்னவோ ஒரு பிரச்னை இருந்தது. அது என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை. கெட்ட பழக்கங்கள் அவனுக்குக் கிடையாது. ஒரு வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். கூலி வேலை. ஒரு விறகுத் தொட்டியில் அவன் வேலை பார்த்தான். நாள் முழுதும் சுமை தூக்கிவிட்டு இருட்டும் நேரம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் படுப்பான். மீண்டும் மறுநாள் காலை ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பிச் சென்றுவிடுவான். பணம் கேட்டால் கொடுப்பான். எங்காவது வெளியே போக வேண்டும் என்று சொன்னால் அழைத்துச் செல்வான். சண்டை போடுகிற வழக்கமில்லை. சாதாரணமாகத்தான் இருந்தான். சாதாரணமாகத்தான் பழகினான். ஆயினும் ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ போய்ச் சேர்ந்தான்.

பிறகு இருபது தினங்களுக்குப் பிறகு அவனிடம் இருந்து ஒரு அஞ்சல் அட்டை அவளுக்கு வந்தது. அதில் அவன் தான் வேறொரு பெண்ணுடன் வாழ்வதாகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தான். உனக்கு வேண்டுமென்றால் நீ இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டு போகலாம்; எனக்குப் பிரச்னை இல்லை என்றும் எழுதியிருந்தான்.

அவள் பல நாள் அந்த அஞ்சலட்டையைக் கண்டு அழுதுகொண்டே இருந்தாள். அது அவளது பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து காலமாகிவிட்டிருந்த சமயம். வேறு உறவுகளோ, நட்புகளோ இல்லாதிருந்தவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. யாரிடமும் இதைக் கொண்டுபோய்ப் பேசவும் பிடிக்கவில்லை. உன் புருஷன் எங்கே என்று கேட்டவர்களுக்கெல்லாம் அவன் மதராஸில் வேலை கிடைத்துப் போயிருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். அதை மாற்றவும் விருப்பமில்லை.

தன் வயிற்றைக் கழுவ சிறு சிறு விவசாயக் கூலி வேலைகள் செய்து பிழைக்க ஆரம்பித்தாள். அப்படியே வருடங்கள் நகர்ந்து அவளுக்கு இப்போது முப்பது வயதாகிவிட்டிருந்தது.

‘நீ அவனைத் தேடிப் போகவேயில்லியா?’ என்று வினய் கேட்டான்.

‘எதுக்கு?’

‘வாழறதுக்குன்னு சொல்லலே. குறைஞ்சது சண்டை போடவாச்சும்?’

‘பிரயோசனமில்லியே சாமி. வேணான்னுதானே போயிட்டான்? போய் சண்ட போட்டு மட்டும் என்னா ஆயிடப்போகுது?’ என்று அவள் கேட்டாள்.

வினய் அவளை உற்றுப் பார்த்தான். முப்பது வயது என்று அவள் சொன்னாலும் தோற்றத்தில் அத்தனை தெரியவில்லை. அவளுக்குச் சற்றுப் பெரிய கண்கள். மூக்கு சற்றுப் பட்டையாக இருந்தது. அது விகாரமாகத் தெரியாதபடி கன்னங்கள் அகன்று திரண்டு நின்றன. மண்வெட்டி பிடித்து வேலை செய்கிறவளைப் போலத் தோள்கள் வலுவாக இருந்தன. ஏதோ ஒருவிதத்தில் அவள் அழகிதான் என்று வினய் நினைத்தான். ஆனாலும் அவள் புருஷனுக்கு அவளைப் பிடிக்காமல் போயிருக்கிறது. என்ன காரணம் என்று அவன் சொல்லவில்லை. வீட்டில் பெரிய சண்டைகளும் நடந்ததில்லை என்று அவள் சொன்னாள்.

வினய் நெடுநேரம் அவளைக் குறித்து யோசித்தபடி இருந்தான். சட்டென்று ஏதோ தோன்ற, ‘உன் பேர் என்ன?’ என்று கேட்டான்.

‘இவ்ள நேரம் நீங்களும் கேக்கலை, நானும் சொல்லலை பாருங்க’ என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.

‘பரவால்ல. இப்ப சொல்லு. உன் பேர் என்ன?’

தன் பெயர் சித்ரா என்று அவள் சொன்னாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com