38. மீன் உண்டவன்

ஒன்று புரிந்தது. நாய்கள் பெரும்பாலும் சோம்பியிருப்பதில்லை. அதன் இலக்கு என்னவென்று தெரிவதில்லையே தவிர, எதையோ தேடிக்கொண்டு அது போய்க்கொண்டேதான் இருக்கிறது.

அது என்ன கிறுக்குத்தனம் என்று தெரியவில்லை. அன்றைக்குப் பகல் முழுதும் அந்த நாய் எங்கெல்லாம் சென்றதோ, அதன் பின்னாலேயே போய்க்கொண்டிருந்தேன். அது ஓய்வெடுக்க அமர்ந்தபோது நானும் அமர்ந்தேன். இடையிடையே அது தனது உறவினர்களையோ, நண்பர்களையோ சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசியதைக் கவனித்தேன். ஒன்று புரிந்தது. நாய்கள் பெரும்பாலும் சோம்பியிருப்பதில்லை. அதன் இலக்கு என்னவென்று தெரிவதில்லையே தவிர, எதையோ தேடிக்கொண்டு அது போய்க்கொண்டேதான் இருக்கிறது. நான் நாயைத் தொடர்ந்து போனாலும், என் கவனம் முழுவதும் எங்காவது அண்ணா கண்ணில் படுகிறானா என்பதிலேயே இருந்தது. ஏனோ அவன் ஒரு முனிவரைப் போலக் காட்டுக்குள் தனிமை தேடி அமர்ந்து தவமிருக்கமாட்டான் என்று நினைத்தேன். அறிமுகமற்ற முகங்களின் நடுவேதான் தனிமையின் உச்சத்தைக் கண்டுணர முடியும். கூட்டத்தில் கரைவது காற்றில் கரைவதினும் பேரனுபவம்.

அவன் காற்றுக்குள்தான் மறைந்திருப்பான் என்று அந்தக் கிழவன் சொல்லியிருந்தான். எனக்கென்னவோ அது ஒரு மிகை என்று பட்டது. இந்தச் சில வருடங்களில் அப்படியான சக்திகளை அவன் பெற்றிருக்கமுடியும் என்று தோன்றவில்லை. உண்மையில் அப்படியொரு சக்தி இருந்துவிடத்தான் முடியுமா!

என் அறிவியல் ஆசிரியர் ஒரு ஆன்மிகவாதி. பெரிய மகான்களின் சரிதங்கள், சுய சரிதங்கள் வாசிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். வகுப்பு முடிவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னால் பாடத்தை முடித்துக்கொண்டு, அந்தப் பத்து நிமிடங்களுக்கு ஏதாவது ஒரு கதை சொல்லுவார். அது யாராவது ஒரு மகானின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமாக இருக்கும். நாங்கள் ஸ்ரீரங்கம் புறப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்னர் அவர் அப்படி ஒரு கதை சொன்னார். திரைலங்கர் என்றொரு துறவியைப் பற்றிய கதை. குருவிடம் பயின்று முடித்துவிட்டு, அவர் தனியே சாதகங்கள் செய்து பார்ப்பதற்காகக் கிளம்பி இமயத்துக்குப் போனார். இத்தனை நாள், இன்னின்ன பயிற்சிகள் என்ற திட்டமெல்லாம் இல்லை. சும்மா போனார். போனவர் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு, சரி போதும் ஊருக்குப் போகலாம் என்று எண்ணியபோது இருபது வருடங்கள் கழிந்துவிட்டிருந்தன. அடடா இத்தனைக் காலம் குருவைப் பார்க்காதிருந்துவிட்டோமே, மறந்தே போனோமே என்று அவருக்கு ஒரே வருத்தமாகிவிட்டது. உடனே தன் மானசீகத்தில் குருவை அழைத்தார். ‘குருவே, நலமாக இருக்கிறீர்களா? எங்கே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘ஒரு வழியாக என் நினைவு வந்துவிட்டதா? கிளம்பி வா வாரணாசிக்கு’ என்று குருவும் அதே மானசீகத்தில் தன் இருப்பிடத்தைத் தெரிவித்தார். ‘கும்பமேளா ஆரம்பித்திருக்கிறது. நான் இங்கேதான் இருக்கிறேன்.’

தகவல் வந்த மாத்திரத்தில், திரைலங்கர் இருந்த இடத்தில் இருந்து அப்படியே எழுந்து காற்றில் மறைந்துவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் காசியில் உள்ள தசாஸ்வமேத கட்டத்தில் இருந்தார்.

மீண்டும் குருநாதர் தகவல் அனுப்பினார். ‘மகனே, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் நான் அங்கே வருவேன். அதுவரை காத்திரு.’

திரைலங்கர் அங்கேயே இருந்தார். சொன்னதுபோல அன்றிரவு பன்னிரண்டு மணிக்குக் கூட்டம் முற்றிலும் கரைந்து காணாமலாகியிருந்த நிலையில், நதிப்பரப்பின் அக்கரையில் ஓர் ஒளிப்புள்ளி தோன்றியது. அந்தப் புள்ளி மெல்ல மெல்ல நகர்ந்து கரையின் இந்தப் பக்கம் வந்து சேர்ந்து திரைலங்கரின் குருவாக மாறியது. மகிழ்ச்சிப் பரவசத்துடன் திரைலங்கர் தனது குருவை விழுந்து வணங்கினார்.

‘வா, நமக்கொரு முக்கியமான வேலை இருக்கிறது’ என்று திரைலங்கரையும் ஓர் ஒளிப்புளியாக்கி எடுத்துக்கொண்டு, குரு மீண்டும் ஆற்று வெளியின் மீது மிதந்து போனார். பாதி தூரம் போனதும் அவர்கள் நீருக்குள் இறங்கத் தொடங்கினார்கள். ஒளி தண்ணீரைத் தொட்டதும் நீர் விலகிக்கொள்ளத் தொடங்கியது. ஓர் ஆழ்துளைக் கிணறுபோல அந்த இடம் குழிந்துகொண்டே போகப் போக, குருவும் சீடரும் அதனுள் இறங்கிச் சென்றுகொண்டே இருந்தார்கள்.

இரண்டாயிரம் அடி ஆழத்துக்கு அவர்கள் சென்று சேர்ந்தபோது, ஒரு நிலவறை போன்ற இடம் அங்கு உருவாக்கப்பட்டிருப்பதைத் திரைலங்கர் கண்டார். எங்கிருந்து வருகிறது என்றே தெரியாமல் அந்த நிலவறையெங்கும் வெளிச்சம் ஒரு நதியைப்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்தது. திரைலங்கருக்குக் கண் கூச்சமெடுத்தது. அப்படியொரு பேரொளிப் பிரவாகத்தை அவர் என்றுமே கண்டதில்லை. ‘குருவே இது என்ன இடம்?’ என்று கேட்டார்.

‘குழந்தாய், இது யோகிகள் சந்திக்கும் இடம். பல்லாண்டுக் காலங்களாகக் காற்று வெளியில் எங்கெங்கோ அலைந்து திரியும் யோகிகள், கும்பமேளா நடக்கிற நாள்களில் இங்கே வந்து கூடுவார்கள். இந்த முறை நீயும் இந்த சத்சங்கத்தில் பங்குபெற அனுமதிக்கப்படுகிறாய்!’ என்று குரு சொன்னார். அந்தக் கணம் அந்தப் பேரொளிப் படலம் மெல்ல மெல்ல மட்டுப்பட்டு, அந்த நிலவறையின் தோற்றம் சற்றே தெளிவு பெறத் தொடங்கியது. நூறு நூறு யோகிகள் அங்கே குழுமியிருப்பதைத் திரைலங்கர் கண்டார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஜன சமூகத்திடமிருந்து விலகிக் கானக வெளியில் யார் கண்ணிலும் படாமல் உலவிக்கொண்டிருக்கும் யோகிகள். நூறு வயது தாண்டியவர்கள். முன்னூறு வயதைத் தொட்டவர்கள். வயதே கண்டறிய முடியாதவர்கள். காலத்தின் வயதைத் தன் வயதாக்கிக்கொண்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பேசிய மொழி ஒவ்வொரு விதமாக இருந்தது. பல நூறு மொழிகள். ஆனால் எல்லா மொழியும் எல்லோருக்கும் அங்கே புரிந்தது. திரைலங்கர் அதையெல்லாம் பிரமிப்பும் வியப்பும் மேலோங்கப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அறிவியல் ஆசிரியர் இந்தக் கதையைப் பாதி சொல்லிக்கொண்டிருந்தபோதே, வகுப்பு முடிந்து மணியடித்துவிட்டார்கள். மீதிக் கதையை மறுநாள் சொல்வதாகச் சொல்லிவிட்டு அவர் கிளம்பிச் சென்றார். நான் அன்றிரவெல்லாம் அதையேதான் யோசித்துக்கொண்டிருந்தேன். இமயத்தின் ஏதோ ஒரு மூலையில், எங்கோ ஒரு கானகத்தில் இருந்த யோகி, எப்படி ஒரு மணி நேரத்தில் காசிக்கு வந்து சேர்ந்திருக்க முடியும்? ஒரு மனித உடலை ஒரு யோகி நினைத்தால், ஒளிப்புள்ளியாக்கி எடுத்துக்கொண்டு போய்விட முடியுமா? முன்னூறு வயது யோகி. நூற்று எண்பது வயது யோகி. மரணமற்றவர்கள். உண்டா? சாத்தியமா அதெல்லாம்?

‘யோகப் பயிற்சிகள் சாத்தியமாக்கும்’ என்று அறிவியல் ஆசிரியர் சொன்னார். ஆனால் நான்காண்டுக் காலத்தில் அண்ணா அப்படிப்பட்ட பயிற்சிகளில் தேறியிருப்பானா? காற்றுக்குள் ஒளிந்துகொள்ளும் வித்தை அறிந்திருப்பானா?

எனக்கென்னவோ அந்த திருவானைக்கா கிழவன் பொய் சொல்கிறான் என்றே திரும்பத் திரும்பத் தோன்றியது. தவிரவும் இக்காலம் யோகிகளுக்கானதல்ல என்று நினைத்தேன். அண்ணாவுக்கு ஓர் உணர்வெழுச்சி இருந்தது. அதில் எனக்குச் சந்தேகமில்லை. அவன் எதையோ ஒன்றைக் குறி வைத்து நகர்ந்துகொண்டிருந்ததை என் சிறு வயது முதல் கண்டுவந்திருக்கிறேன். அது என்னவென்று அப்போது எனக்குப் புரிந்ததில்லை. பின்னாள்களில், நான் என் அறிவியல் ஆசிரியர் அளித்த உந்துதலால், சித்தர்களைக் குறித்தும் யோகிகளைக் குறித்தும் நிறையப் படிக்கத் தொடங்கியபோது மிகத் தெளிவாக ஒன்றை அறிந்தேன். இது எதுவும் சாமானியர்கள் நுழையக்கூடிய பிராந்தியமல்ல. அண்ணா ஒரு சாமானியன்தான் என்று எண்ணிக்கொள்வது எனக்கு சௌகரியமாக இருந்தது.

அன்று மதியத்துக்குமேல் நான் நாயைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு, மீண்டும் மலையேறி காட்டுக்குள் சென்றேன். எந்தத் திட்டமும் இன்றி கால் போன வழியில் நடந்துகொண்டே இருந்தேன். அவ்வப்போது தூறல் விழுந்தது. ஒரு சில நிமிடங்களுக்கு நல்ல மழையேகூடப் பெய்தது. சென்ற வழியெல்லாம் நீரின் சலசலப்பு இருந்துகொண்டே இருந்தது. நான் அதற்குமுன் ஒரு கானகத்தைக் கண்டதில்லை. மலையேறுவது எத்தனை சிரமமான பணி என்பதை அறிந்திருக்கவில்லை. துணைக்கு யாருமில்லாமல் எதற்காக இப்படி பைத்தியக்காரத்தனமாகத் திரிகிறோம் என்ற வினா அவ்வப்போது எழுந்தாலும், என்னால் அப்படிச் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்று செய்திருக்கலாம். நான் அண்ணாவைத் தேடிக்கொண்டு குற்றாலத்துக்கு வந்திருக்கிறேன் என்று வீட்டுக்கு ஒரு போனாவது செய்து தகவல் சொல்லியிருக்கலாம். என்னையும் இழந்துவிட்டதாக அம்மாவும் அப்பாவும் எண்ணிக் குமுறிக்கொண்டிருக்கப் போகிறார்களே என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி எழுந்தது.

ஒரு தருணம். அண்ணா கண்ணில் பட்டுவிட்டால் போதும். அவனை அம்மாவோடு பேச வைத்துவிட்டால் போதும். அனைத்தும் சமன் செய்ததாகிவிடும்.

நெடு நேரம் நடந்து களைத்துப் போனேன். திரும்பவும் இவ்வளவு தூரத்தையும் எப்படி நடந்து கடந்து நகரை அடையப்போகிறேன் என்று நினைக்கவே பிரமிப்பாக இருந்தது.

இருட்டிவிட்டால் திரும்புவது சிரமமாகிவிடுமே என்று தோன்றியது. இருப்பினும் அங்கேயே நிற்கவோ, திரும்பவோ தோன்றவேயில்லை. நடந்துகொண்டுதான் இருந்தேன். முக்கால் மணி நேரம் நடந்த பிறகு ஒரு குடிசை தெரிந்தது. அப்பாடா என்றிருந்தது. யாராவது இருப்பார்கள். சிறிது பேசி இளைப்பாறலாம் என்று நினைத்து அங்கே சென்றேன்.

அது ஒரு காட்டிலாகா ஊழியரின் குடிசை. நான் சென்றபோது அவரது மனைவிதான் அங்கு இருந்தாள்.

‘வழி தப்பி வந்துட்டியளா?’ என்று கேட்டாள்.

‘இல்லம்மா. எங்கண்ணா இங்க இருக்கான்னு தெரிஞ்சிது. அவனைத் தேடி வந்தேன்’ என்று பதில் சொன்னேன்.

‘என்னவா இருக்காக?’

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவன் நான்கு வருடங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடிப் போனவன். எதை நோக்கி ஓடினான் என்று சரியாகத் தெரியவில்லை. நிச்சயமாக அவன் ஒரு வேலை தேடிக்கொண்டு போயிருக்க முடியாது என்று மட்டும் சொன்னேன்.

அவள் சிறிது யோசித்தாள். ‘எப்படி இருப்பாக அவுக?’ என்று கேட்டாள்.

‘புருவத்துக்கு நடுவுல பொட்டு வெச்ச மாதிரி ஒரு மச்சம் இருக்கும்.’

‘ஆமா. ஒல்லியா, வெடவெடன்னு முருங்கக்காயாட்டம்...’

‘தெரியுமா? நீங்க பாத்திருக்கிங்களா? இங்கயா இருக்கான்?’ எனக்குப் பதற்றமாகிவிட்டது.

‘இப்ப கொஞ்ச நாளாத்தான் பாக்குதேன். இங்கனதான் சுத்திக்கிட்டு இருப்பாப்ல.’

‘ஐயோ, எங்க? எங்க பாக்கலாம்?’

‘எங்க இருக்காகன்னு தெரியலயே தம்பி. ஆனா பாப்பேன். ரெண்டு நாள் முன்ன இங்க நம்ம வீட்ல காப்பித் தண்ணி கேட்டுக் குடிச்சிட்டுப் போனாக.’

நான் எப்படியும் அவனைப் பார்த்துவிடுவேன் என்று உறுதியாகத் தோன்றியது. என் பதற்றத்தையும் தவிப்பையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், அந்தப் பெண்ணின் கணவன் வீடு வரும்வரை அங்கேயே காத்திருந்தேன். அவனிடம் விவரம் சொல்லி ஓரிரு தினங்கள் நான் அவன் வீட்டிலேயே தங்கலாமா என்று கேட்டேன்.

‘இடம் பத்தாது தம்பி’ என்று அவன் சொன்னான்.

‘இல்லே. நான் வெளியிலயே படுத்துக்கறேன். சாப்பாடெல்லாம் வேணாம். இங்க இருந்துக்க மட்டும் அனுமதி குடுத்தேள்னா போதும்’ என்று சொன்னேன்.

‘பாப்பார ஊட்டுப் புள்ளையா நீயி? அண்ணன்னு சொல்றே? அந்தப் பையன் மீனெல்லாம் திங்குதானே?’ என்று அவன் சொன்னான்.

அண்ணா மீன் சாப்பிடுகிறானா? இது எனக்குச் செய்தியாக இருந்தது. நம்ப முடியவில்லை.

‘நீங்க பாத்திங்களா?’ என்று கேட்டேன்.

‘ஆமா. ஆத்துல புடிச்சி பச்சையாவே தின்னுதான். தேனருவிப்பக்கம் பாத்தேன்.’

‘அவன் என்ன பண்ணிண்டிருக்கான்? பிச்சை எடுக்கறானா? காஷாயம்... காவி கட்டிண்டிருக்கானா?’

‘அதெல்லாம் இல்ல தம்பி. ஒன்ன மாதிரி, என்னை மாதிரிதான் இருக்கான். சவரம் பண்ணிக்காமெ திரியுதான் பரதேசியாட்டம். இரு. திரும்ப வரானா பாப்பம்’ என்று அவன் சொன்னான்.

அன்றிரவு நான் அந்தக் குடிசைக்கு வெளியே, அந்தப் பெண்மணி அளித்த பாயை விரித்துப் படுத்தேன். குளிர்க்காற்றும் தூறலும் உறங்கவிடாமல் செய்தன. இருந்தாலும், அண்ணாவைப் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்குப் போதுமானதாக இருந்தது.

மறுநாள் அதிகாலை ஐந்து மணி இருக்கும். ஒரு நூல்கண்டைப் போல என் உடலைச் சுருக்கி, முறுக்கி, ஒடுக்கிக்கொண்டு தூக்கத்தின் விளிம்பைத் தொட்டுக்கொண்டிருந்தபோது, யாரோ என்னைத் தொடுவதுபோல உணர்ந்தேன். அலறியடித்துக்கொண்டு எழுந்தபோது, அந்த நாய் என்னருகே நின்றிருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com