அத்தியாயம் 45 - புதையுண்ட தமிழகத்தின் நிறைவுப்பகுதி

தமிழகத்தில் மேற்கொண்ட முதன்மையானதும், முதலாவதுமான ஆழ்கடல் ஆய்வும், அதன் வழியாக பெறப்பட்ட புதிய தகவல்களும் இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

புதையுண்ட தமிழகத்தின் நிறைவுப்பகுதி

தமிழக வரலாற்றை, தொல்லியல் அகழ்வாராய்ச்சி வழியாகக் கிடைத்த சான்றுகளை மையமாகக் கொண்டு இத்தொடர் எழுதப்பட்டது. தமிழகத்தில் மட்டுமின்றி பாண்டிச்சேரி பகுதியில் செய்யப்பட்ட அகழாய்வுகளையும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளையும் ஒப்பாய்வுக்காகக் கையாளப்பட்டுள்ளது.*1

இன்று நம்மிடையே உள்ள தமிழக வரலாற்று நூல்கள், தமிழகத்தில் காணப்பட்ட கல்வெட்டுகள், இலக்கியங்கள், நாணயங்கள் போன்ற சான்றாதாரங்களைக் கொண்டு கூறப்பட்டுள்ளபோதிலும், அனைத்தும் ஓர் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே கூறப்பட்டதுபோலத் தோன்றுகின்றது. அகழாய்வுச் சான்றுகள் கொண்டு அதனை வலுப்படுத்தவும், புதுப்பிக்கவும் வேண்டியுள்ளது.

தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆட்சிக்காலம் ஒன்று இருந்தது என்றும் அதனை இருண்ட காலம் என்றும் கூறிவந்தனர்.*2 பின்னர், பூலாங்குறிச்சி பாறைக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு களப்பிரர் காலம் நன்கு செழிப்புடன் இருந்தது என அக்கல்வெட்டு கூறுவதைக் கொண்டு வரலாற்றுச் செய்திகள் வெளிவந்தன*3. இருப்பினும், இதனை அக்காலத்தின் முழுமையாக வரலாறாக ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. ஏற்காமைக்குக் காரணம், அங்கு ஒரு தொல்லியல் அகழாய்வை நடத்தி அதன்வழியாக கல்வெட்டின் செய்திகள் உறுதிசெய்யப்படவில்லை என்பதுதான்.

உண்மையில், வரலாற்றுத் தடயங்கள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்து அதன்வழியாகப் பெறப்படும் சான்றுகளே அங்கு எத்தகைய மக்கள் வாழ்ந்தனர், அவர்களது பண்பாட்டு நிலை என்ன? என அனைத்தும் அறிய வழிவகுக்கின்றது. அகழாய்வு ஒன்றினை பூலாங்குறிச்சி பகுதியில் மேற்கொண்டிருந்தால், களப்பிரர்கள் என்று கூறப்பட்டு வரும் மக்கள் எத்தகையத்தன்மையினர் என்பதையும் அவர்களது தொழில், உணவுவகைகள், விளையாட்டுகள், பயன்படுத்திய மட்கலன்கள், அவர்கள் பயன்படுத்திய எழுத்துகள் போன்றவற்றை அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருந்திருக்கும். இப்பகுதி, வருங்கால ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மனத்தில் கொள்வோம்.

அகழாய்வுகள், தமிழக வரலாற்றுக்கு உதவும் வலிமையான சான்றுகளை வழங்குவதில் முதன்மையாகத் திகழ்வதற்குச் சான்றாக, கொடுமணல் மற்றும் அழகன்குளம் அகழாய்வுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இலக்கியங்களில் கொடுமணல் குறித்து சிறு குறிப்பும், அழகன்குளம் பற்றி ஒன்றும் இல்லாமையைக் காண்கிறோம். ஆனால், கொடுமணலில் இரும்பு உருக்குத் தொழிலும், இரும்புப் பட்டறையும் இருந்துள்ளது என்பதையும், மணிகள் தயாரிக்கும் தொழிற் பட்டறைகள் இருந்த பகுதி அது என்பதையும் மிகவும் தெளிவாக உரிய சான்றுகளுடன் அகழாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. அதைப்போன்றே, அழகன்குளம் அகழாய்வும் ரோமானியர்கள் அதிக அளவில் அங்கு வருகை புரிந்துள்ளதையும், மணிகள் தயாரிக்கும் தொழிற் பட்டறை இருந்ததையும் போதிய சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வகையில், அகழாய்வுச் சான்றுகள்தான் ஒரு வரலாற்றை இறுதி முடிவுக்குக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. அதன் அடிப்படையில்தான், புதையுண்ட தமிழகத்தின் அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் நடைபெற்ற பெரும்பான்மையான அகழாய்வுகளில் பெறப்பட்ட தொல்லியல் தடயங்களைக் கொண்டு தமிழக மக்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டு நிலை, வளர்ச்சி நிலைகள் எவ்வாறு இருந்துள்ளன என்றும் விளக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், தமிழக வரலாற்றுக்கு அகழாய்வுச் சான்றுகள் வழங்கும் பல புதிய தகவல்கள் இந்த அத்தியாயங்களின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அவற்றின் கருத்துத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

1. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்கே ஓடும் ஆறுகளும், நதிகளும், வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கின்றன. இடைப்பட்ட ஆற்றங்கரைகளிலும், கடற்கரை ஓரத்திலும் காணப்படும் பட்டினங்களின் செய்திகள், அகழாய்வுகள் வழியாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.*4

2. பழைய கற்கால மக்கள் கொற்றலை ஆற்றுப்படுகைகளில் அதிக அளவில் வசித்து வந்தனர் என்பது ஆய்வுச் செய்தியாகும். ஆய்வின் நிறைவாக, பழைய கற்கால மக்களில் ஒரு குழுவினர் அத்திரம்பாக்கம், பரிகுளம் போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளனர் என்பது தொல்லியல் அகழாய்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்ட செய்தியாகும். இதன்மூலம், உலகில் முதன்முதலில் தோன்றிய மனிதர்கள், கொற்றலை ஆற்றுப் பகுதியிலும் இருந்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. பழைய கற்கால மக்களுக்குத் தேவையான கற்கருவிகளை இங்கு தொழிற்பட்டறை அமைத்து தயார் செய்துள்ளனர் என்பது இவ்வாய்வின் முடிவில் பெறப்பட்ட கூடுதல் சான்றாகும்.*5

3. புதிய கற்கால மக்களின் வாழ்விடங்கள் பையம்பள்ளி, மோதூர் அகழாய்விலும், மயிலாடும்பாறை அகழாய்விலும் கண்டறியப்பட்டன. இந்த மூன்று இடங்களிலும் புதிய கற்கால மக்கள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது அகழாய்வுச் சான்றுகள் வழியாக பெறப்பட்ட புதிய செய்தியாகும்.*6 புதையுண்ட தமிழகத்தின் ஆசிரியர், மேலும் பல இடங்களில் களஆய்வு மேற்கொண்டு, புதிய கற்கால மக்களின் வாழ்விடங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தியள்ளார். தமிழகத்தில் புதிய கற்கால மக்களின் வாழ்விடங்கள் இல்லை என்ற முன்னர் நிலவிய கருத்துக்கு எதிராக, இவ்வாய்வுகளில் சரியான தொல்லியல் சான்றுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

4. தமிழகத்தில் அதிக அளவில் புதிய கற்காலக் கற்கருவிகள் கிடைத்த பகுதி மோதூர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல்வேறுவிதமான, வெவ்வேறு பயன்பாடுள்ள, பல்வேறு வடிவிலான கற்கருவிகள் வகை பிரித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.*7 இவை, தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கும், கைக்கோடாரிகள் மட்டுமின்றி பிற கற்கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கும் சான்றாகத் திகழ்கின்றன. மண்ணடுக்குகளின் நிலையிலேயே இக்கற்கருவிகள் சேகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். புதிய கற்கால மக்கள் கொட்டைகளை பொடியாக்கியும், உணவை வேகவைத்தும், அம்மிக்கல் குழவிக்கல் கொண்டு அரைத்தும் பயன்படுத்தியுள்ளனர் என்பது தொல்லியல் சான்றுகளால் அறியப்பட்டுள்ளது.

5. பெருங் கற்காலம் என்றும் இரும்புக் காலம் என்றும் அழைக்கப்படும் காலகட்டத்தில் பலவகைத் தொழிற் பட்டறைகள் இருந்துள்ளன என்றும், வணிகம் மேற்கொள்ளப்பட்டது என்றும் சான்றுகள் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில், கீறல் குறியீடுகள், கீறல் குறியீடுகளால் மேற்கொண்ட வணிக மற்றும் பிற பரிவர்த்தனைகள், குறியீடுகளின் தோற்றம் வளர்ச்சி, தொழிற் பட்டறைகளில் இரும்பு உருக்குதல்*8, இரும்புக் கருவிகள் செய்தல்*9, மணிகள் தயாரித்தல்*10, விவசாயம்*11, மட்பாண்டங்கள் செய்தல்*12 போன்ற தொழில் வளர்ச்சியை அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

6. வரலாற்றுக் காலத்தில் எழுத்தின் வளர்ச்சி*13, நகரத்தின் அமைப்பு, அரண்மனைக் கட்டடங்கள்*14, கட்டுமான முறை*15, குடிநீர்க் குழாய்கள்*16 அமைத்தல், கழிவுநீர்க் குழாய்கள்*17, கட்டுத்தொட்டி அமைத்தல்*18, ஆறு, ஏரி, குளங்களில் மதகு அமைத்து*19 நீர்ப்பாசன வசதியைப் பெருக்குதல், குடியிருப்பு வீடுகள் கட்டுதல்*20, மேல்தளங்களில் கூறை ஓடுகள் அமைத்தல்*21, அதன் வளர்ச்சி நிலை, வணிகம், அயல்நாட்டோடு கொண்ட தொடர்புகள்*22, கடற்கரை துறைமுகப்பட்டினங்கள்*23, படகுத் துறைகள், கோட்டைகள்*24 அனைத்தும் தொல்லியல் சான்றுகளைக் கொண்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

7. சோழர்களின் ஆட்சி முடிவுற்று பொ.ஆ. 1334-ல் விஜயநகரப் பேரரசர்கள் வருகைக்குப் பின், சமயக் கொள்கைகளும் மாற்றம் அடைந்தன என்றும் வைணவம் தலைதூக்கியது எனவும் நிறுவப்பட்டுள்ளது. தமிழகக் கோபுரங்கள் அனைத்தும் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தது. எனவே, தமிழகத்தில் காணப்பட்ட மிக உயர்ந்த கோபுரங்களை இராயர் கோபுரம் என்றே அழைத்தனர். அதுவே, இன்றைய ராஜகோபுரங்களாகத் திகழ்வதாகும். கல்யாண மண்டபங்களும், குளங்களும், ஊஞ்சல் மண்டபங்களும் கோயில்களும் பெருகின எனலாம்.

அடுத்த நிலையில் நாயக்கர்கள், தஞ்சை மராட்டியர்கள், சேதுபதிகள், பாளையக்காரர்கள் தமிழகத்தை ஆட்சிபுரியத் துவங்கினர். இவர்கள் கோயில் கட்டடக் கலையில் செய்த மாற்றங்கள் அனைத்தும் தமிழகக் கோயில்களில் இடம்பெறத் துவங்கின. நாயக்கர்கள் தங்களின் பெயர் நிலைக்க, தனியாக மண்டபங்களை எழுப்பி நாயக்கர் மண்டபம் என்று பெயரிட்டு அழைத்தனர். இவர்களுடைய தனித்தன்மையான சுதை வேலைப்பாடுகளும், வண்ணப்பூச்சுகளும் தமிழக மக்களை மிகவும் கவர்ந்தன. இக்கால மக்கள் விளையாட்டுக்குப் பெரும் ஆதரவை நல்கி ஊக்குவித்தனர். குறிப்பாக மல்யுத்தத்துக்கும் பிற வீர விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தனர். தனிமனிதத் திறனறியும் விளையாட்டுக்களையே போற்றியுள்ளதை அகழாய்வு வாயிலாக அறியமுடிகிறது. மராட்டியர் ஓவியங்களும் சிறப்பான இடத்தைப் பெற்றது. இவ்வாறே தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் வருகையை எதிர்த்த பாளையக்காரர்களின் வரலாற்றையும் அகழாய்வுகள் வழங்கிய சான்றுகள் வாயிலாகக் காட்டப்பட்டுள்ளது,

தமிழக அகழாய்வுகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், புதுவை போன்ற பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளையும் ஒப்பிட்டு இவ்வாய்வின் முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடற்கரையை ஒட்டிப் பல துறைமுகப்பட்டினங்கள் அமைந்துள்ளதை இலக்கியங்கள் விவரிக்கின்றன. வசவசமுத்திரம்*25, அரிக்கமேடு*26, குடிகாடு*27, மரக்காணம்*28, பூம்புகார்*29, கொற்கை*30, அழகன்குளம்*31 போன்ற பண்டைய துறைமுகப்பட்டினங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் பல சான்றுகளை வழங்கி, அங்கே பட்டினங்கள் இருந்துள்ளதையும், இலக்கியக் கருத்தையும் உறுதி செய்துள்ளன. இயற்கையின் அமைப்போடு இணைந்த வாழ்க்கையையே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு கடற்கரையை ஒட்டி அமைந்த துறைமுகப்பட்டினங்களும், அகழாய்வுகள் வழங்கிய தொல்பொருட்களும், கட்டடப் பகுதிகளும், நீர்நிலைத் தொட்டிகளும்*32, சாயத் தொட்டிகளும்*33 சான்றாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

அத்தியாயங்களின் வரிசைப்படி, ஆய்வில் கண்டறிந்த புதிய தகவல்களின் தொகுப்பு

பழைய கற்காலம்

பழைய கற்கால மக்களின் வாழ்க்கைமுறையை, அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு எவ்வாறு அமைந்திருந்தன என்றும் எடுத்துக் கூறப்பட்டது. அகழாய்வுகள் வழியாகக் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் அத்திரம்பாக்கம், நெய்வேலி, பரிகுளம் போன்ற இடங்களில் பழைய கற்கால மக்கள் ஒரு கூட்டமாகத் தங்கியிருந்துள்ளனர் என்பதும், அவர்கள் தங்களுக்குத் தேவையான கற்கருவிகளை அவர்களே தயாரித்துக்கொண்டதையும், இப்பண்பாடு நடைபெற்ற அத்திரம்பாக்கம், பரிகுளம் அகழாய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன*34.

கொற்றலை ஆற்றுப்படுகைகளில் வாழ்ந்த மக்கள் மிகவும் பழமையானவர்கள் என்பதும், சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழத் துவங்கினர் என்ற கருத்தையும் அகழாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்*35. அடுத்து, இப்பகுதியில் முதல், இடை, கடை நிலைப் பழைய கற்கால மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளனர் என்பது, அத்திரம்பாக்கம் மற்றும் பரிகுளம் அகழாய்வுகள் வழியாகப் பெறப்பட்ட புதிய தகவல்களாகும்*36. இவ்விடங்களில், பழைய கற்காலக் கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற் பட்டறை இருந்துள்ளன என்பதற்குச் சான்றாக, அதிக அளவில் கருங்கற்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட சில்லுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளதை கருத்தில் கொண்டு உறுதிபடக் கூறலாம்*37.

புதிய கற்காலம்

புதிய கற்கால மக்கள் மட்கலன்களையும் கற்கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்பது பொதுவான செய்தி. அகழாய்வுகள் வழங்கிய சான்றுகள் கொண்டு மேலும் பல புதிய தகவல்களையும், அக்கால மக்கள் மேற்கொண்ட விவசாயம், மட்கலன்கள் தயாரித்தல், கால்நடைகள் வளர்த்தல், அவற்றை பட்டிகளில் அடைத்துக் காத்தல், வேட்டையாடுதலைக் குறைத்து விவசாயத்தையும், தானியங்களை சேமித்து வைத்தலையும் நடைமுறைப்படுத்தினர் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பழைய கற்கால மக்களின் வாழ்வியல் தொடர்ச்சியே புதிய கற்காலம் என்பதற்குச் சான்றாக, இவர்களும் அதிக அளவில் கற்கருவிகளையே பயன்படுத்தியுள்ளனர் என்பது கொண்டு விளக்கப்பெற்றுள்ளது. பையம்பள்ளி, மோதூர் அகழாய்வுகளில் வழவழப்பான கைக்கோடாரிகளுடன், முட்டை வடிவிலான கல்தட்டு (Oval Shape Disc), கல்வட்டு (Stone Hopscotches), உழக்கை (Pestle), பள்ளவரி அமைப்புள்ள கல்சுத்தி (Grooved Stone Hammer), அரவைக்கல் (Grinding Stone), கூர்தீட்டும் கருவி (Sharpenning Stone) என பல்வேறு விதமான கற்கருவிகள் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது*38. இச்சான்றுகள், தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் நன்கு நாகரிகமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பதை புரியவைத்துள்ளது. கர்நாடகப் பகுதிகளான பிக்கிலிகால்*39, டி.நரசிபூர்*40 போன்ற புதிய கற்கால வாழ்விடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள், தமிழகத்தில் மோதூர், மயிலாடும்பாறை போன்ற அகழாய்வுகளிலும் மண்ணடுக்குகளிளேயே கிடைத்துள்ளது குறிப்பித்தக்கதாகும். தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை, தமிழகத்தில் மேற்கொண்ட பையம்பள்ளி*41, மோதூர்*42, மயிலாடும்பாறை*43 போன்ற அகழாய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

பெருங் கற்காலம் (அ) இரும்புக் காலம்

தமிழகத்தில் பெருங் கற்காலம் என்றும், இரும்பின் பயனை அறியப்பட்டிருந்தது என்பதால் இரும்புக் காலம் என்றும் அழைக்கப்படும் இக்காலத்தில், பல தொழிற் பட்டறைகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதை பெருங் கற்கால மக்கள் வாழ்விடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகள் நிரூபித்துள்ளன. கொடுமணல் அகழாய்வில், இரும்பு உருக்கும் ஊது உலைகள் பல கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இங்கு இரும்பை உருக்கி இரும்புக் கருவிகள் செய்யும் தொழிற் பட்டறை இருந்துள்ளது என்பது புலனாகிறது. இவைமட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெற்ற பெருங் கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்த பல இடங்களிலும் ஊது உலைகளும், உலைக்கலன்களும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமான மணிகளும், சூது பவளம் கருக்கற்களும், அறுத்த நிலையிலும், துளையிடத் தயார் நிலையில் உள்ளவையும், மெருகேற்றிய மணிகள் எனவும் பல்வேறு நிலைகளில் மணிகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. பல்வேறுவிதான மணிகள் தயாரிக்கும் தொழிற் கூடமும் இங்கு இருந்துள்ளன என்பதற்கு கொடுமணல், பொருந்தல், தாண்டிக்குடி போன்ற அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் சான்றுகளாக உள்ளன.

இரும்புக் கால மக்கள், புதிய கற்காலத்தைத் தொடர்ந்து நன்கு வளர்ந்த நிலையைப் பெற்று நிலையான இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு கூட்டமாக வாழத் துவங்கியவர்கள். இவர்கள், இறந்தவர்களைப் புதைக்கத் தனியாக ஒரு இடத்தைத் தெரிவு செய்து புதைக்கும் பழக்கத்தையும், மேலும் புதைத்த இடத்தில் அவர்களது நினைவாக ஒரு கட்டுமானத்தை ஏற்படுத்தி அதற்குள்ளே இறந்தவர்களை அடக்கம் செய்யும் பழக்கத்தையும் கொண்டிருந்துள்ளனர். அவ்வாறு அடக்கம் செய்தவற்றில் பல இடங்களில், தங்களது மூதாதையரின் நினைவாக (Votive Purpose) புதிய கற்காலக் கற்கருவி ஒன்றையும் வைத்துள்ளனர். இதனை கோவலன்பொட்டல்*44, மாங்குடி*45, செம்பியன்கண்டியூர்*46 போன்ற அகழாய்வுகளில், முதுமக்கள் தாழிகளில் கிடைத்த வழவழப்பான கைக்கோடாரிகளைச் சான்றாகக் கூறலாம். இதன் அடிப்படையில், பெருங் கற்கால மக்கள் புதிய கற்கால மக்களின் வழித்தோன்றல்கள்தான் என்பதை இவ்வாய்வுகளின் வழியாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இத்தொடரில், பெருங் கற்காலப் பண்பாட்டை இரு பெரும் பிரிவுகளாகப் பகுத்து ஆய்வுச் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன.

1. நினைவுச் சின்னங்களில் காணப்படும் மட்கலன்களில் காணப்படும் குறியீடுகள் கிடைக்கும் வரை உள்ள தொல்பொருட்கள் ஒரு பிரிவாகக் கொள்ளப்பட்டுள்ளது. இக்காலத்தை, வரலாற்றுக்கு முற்பட்ட காலமாகவும் வைத்து அணுகப்பட்டுள்ளது.

2. நினைவுச் சின்னங்களில் கிடைத்துள்ள மட்கலன்களில் எழுத்துகள் கிடைத்த பிறகு உள்ள காலத்தை, சங்க காலத்தின் துவக்கக் காலமாகக் கருதி இவ்வாய்வு அணுகப்பட்டுள்ளது.

பெருங் கற்காலப் பண்பாட்டை, அதாவது இரும்புக் காலத்தை மிகவும் வளர்ச்சியும், நாகரிகமும், பண்பாடும் நிறைந்த ஒன்று என ஆய்வில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் புதியதாக முன்வைக்கப்பட்ட செய்திகளாவன -

1. நினைவுச் சின்னங்களின் கட்டுமான அமைப்பே, பிற்காலத்தில் இறைவழிபாட்டுக்காக எழுப்பப்பட்ட ஆலயங்களாகக் குறிக்கலாம்*47.

2. கருவறை, திருச்சுற்றுப் பிராகாரம் என்ற அமைப்பை துவக்கியவர்கள்*48.

3. கற்களை அடுக்கி ஒன்றன்மேல் ஒன்றாக அமைத்து கட்டுமானத்தை அமைக்கலாம் என்ற கட்டடக் கலைப் (Structural Method) முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்களும், இரும்பை ஆயுதங்களாக்கி கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியவர்களும் இக்கால மக்களே என்பதையும் ஊகித்து உணரலாம். பெரிய பெரிய பாறைகளை உடைப்பதற்குக் கற்களையும், அதற்குத் துணையாக இரும்பு உளிகளையுமே பயன்படுத்தியிருத்தல் வேண்டும் என்பதற்குப் பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு அமைத்த பெருங்கல் நினைவுச் சின்னங்கள் சான்றுகளாக அமைகின்றன.

4. தங்களது கருத்துகளை எழுத்துகளாகவும், ஓவியமாகவும், கற்பலகைகளில் முதன்முதலில் பதிவு செய்தவர்கள். மேலும், தங்களது கையொப்பத்துக்குப் பதிலாக, தங்களது கைவிரல்களை அழுத்தி முத்திரை பதித்தவர்களும் இவர்கள்தான்*49.

5. இரும்பை உருக்கி இரும்புக் கருவிகள் செய்தவர்கள் இவர்கள். எனவே, இவர்களையும் இப்பண்பாட்டையும் இரும்புக் காலப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அழைப்பதே முறையாகும். இம்மக்கள், இரும்புத் தாதுவைப் பிரித்தெடுக்கும் கலையைக் கற்றிருந்தனர் என்பதற்குச் சான்று அகழாய்வுகளில் கிடைத்த ஊது உலைகளும், உலைக்கலன்களுமே ஆகும்.

6. குறியீடுகள் குறித்த தெளிவான கருத்து இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பிடத்தையும் செய்யும் தொழிலின் அடிப்படையிலும் அமைந்த குறியீடுகள்; பின்னர் வணிகத் தொடர்பால் ஏற்பட்ட நட்பு, திருமணம் என ஒரு குழுக்கூட்டம் இன்னொரு குழுக் கூட்டத்துடன் இணைந்ததால் ஏற்பட்ட இரண்டு குறியீடுகள்; அடுத்து இணைக் குறியீடுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது*50. சித்திர எழுத்துகளுக்கும் குறியீடுகளுக்கும் ஓர் ஒப்பீட்டு ஆய்வு செய்து, குறியீடுகளே காலத்தால் முற்பட்டது என்பதை பொருந்தல் அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது*51.

7. பல்வேறு விதமான தொழிற் பட்டறைகள் பெருங் கற்காலம் முதல் தமிழகத்தில் இருந்துவந்துள்ளன என்பதை கொடுமணல், பொருந்தல், மாங்குடி போன்ற அகழாய்வுகள் வழியாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மணிகள் தயாரித்தல், சங்கு வளையல்கள் தயாரித்தல், மட்கலன்கள் செய்தல், வணிகம், அயல்நாட்டுத் தொடர்பு, விவசாயத்தில் அதிக அளவில் உற்பத்தி, அதனை சேமித்துவைத்தல் என பல்வேறு செய்திகள், இவ்வாய்வின் வழியாக அகழாய்வுச் சான்றுகளின் துணையோடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

8. ஐவகை நிலங்களின் அமைப்புக்கு ஏற்ப குறியீடுகளும், நினைவுச் சின்னங்களும் அமைத்துக்கொண்டனர். வட மாநிலங்ளில் காணப்படும் நினைவுச் சின்னங்களையும், தென் மாநிலங்களில் காணப்படும் நினைவுச் சின்னங்களையும் பகுத்து ஆய்வு செய்யப்பட்டு, இப்பண்பாட்டுக் காலத்தை அந்நினைவுச் சின்னங்களில் காணப்படும் தொல்பொருட்களின் அடிப்படையில் பகுத்து ஆய்வு செய்தால்தான் தமிழகப் பண்பாடு தெளிவுபெறும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

9. தாய்தெய்வ வழிபாடு சிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அகழாய்வுகளில் தாய்தெய்வத்தின் சுடுமண் உருவங்கள் கிடைத்ததைக் குறிக்கலாம். இதற்குச் சான்றாக கீழ்வாளை ஓவியங்களும், அதற்கேற்ப காணப்படும் மனிதவடிவில் அமைந்த குத்துக்கல் நினைவுச் சின்னத்தையும் குறிக்கலாம். இவை வளமைச் சடங்குக்காக ஏற்படுத்தப்பட்டு, பின்னர் தமிழகத்தில் தாய்தெய்வ வழிபாடு இன்றியமையாத இடத்தையும் பெற்றுள்ளது எனலாம்.

வரலாற்றுக் காலத்தில் காணப்பட்ட புதிய செய்திகளாவன -

1. எழுத்துகளின் வளர்ச்சி பற்றி பலரும் குறிப்பிட்டிருந்தாலும், அகழாய்வில் கிடைத்த நெடுங்கிள்ளி என்ற எழுத்துப் பொறித்த மட்கலன் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்*52. தமிழகத்தில் இதுவரை சங்க கால மன்னர்களின் பெயர் பொறித்தவற்றில் சேரர், பாண்டியர்கள் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முதன்முதலாக, தமிழக அகழாய்வுகளில் சங்க காலச் சோழர் பெயர் பொறித்த மட்கலன் கிடைத்திருப்பது சிறப்புக்குரிய முதன்மைத் தகவலாகும். கல்வெட்டுகளில், புகளூர் கல்வெட்டில் இளங்கடுங்கோ, மாங்குளம் பாறைக் கல்வெட்டில் நெடுஞ்செழியன், ஜம்பை கல்வெட்டில் தகடூர் அதியமான்; இவற்றோடு காசுகளில் கொல்லிப்பொறை, மாக்கோதை, பெருவழுதி, குட்டுவன்கோதை பெயர்களையும், பல்வேறு வகையில் எழுத்துகளின் வளர்ச்சியை அவர்கள் வெளியிட்ட காசுகள் மற்றும் கல்வெட்டுக்கள் வழியாகவும் பெறப்பட்டுள்ளன.

இதுபோன்று, தமிழகத்தில் பெருங் கற்காலத்துக்குப் பின்னர், அதாவது சங்க காலத்தில் எழுத்துகள் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளதைப் பல அகழாய்வுகளில் கிடைத்த எழுத்துப் பொறித்த மட்கலன்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன. குறிப்பாக தேரிருவேலி, பொருந்தல், அழகன்குளம், அரிக்கமேடு, திருக்காம்புலியூர், அழகரை போன்றவற்றைக் குறிப்பிடலாம். கொடுமணல் அகழாய்வில்தான் அதிக அளவில் எழுத்துப் பொறித்த மட்கலன்கள் கிடைத்துள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இத்தொடரில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மாங்குடி, கொடுமணல், அழகன்குளம் போன்ற இடங்களில், குறியீடுகளுக்கு அடுத்த நிலையில் எழுத்துகள் காணப்படுவதால், அதன் வளர்ச்சி நிலையை மண்ணடுக்குகளைக் கொண்டு எளிதில் அறியமுடிந்தது.

2. தமிழக அகழாய்வுகளில் அரிக்கமேடு, பூம்புகார், கொற்கை, கரூர், காஞ்சிபுரம், பேரூர் போன்ற அகழாய்வுகளில், சங்க காலக் கட்டுமானங்கள் கண்டறிந்து வெளிக்கொணரப்பட்டது. இவற்றில் சாயத் தொட்டிகள், குடிநீர்க் கால்வாய்கள், பௌத்த விகாரம், படகுத் துறை போன்ற பல கட்டுமானச் செய்திகள் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. செங்கற்களின் அளவுகள், அதன் தன்மை போன்றவற்றையும், செங்கற்களைக் கொண்டு கட்டுமான அமைப்பு காணப்பட்ட விதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

3. அகழாய்வுகள் வெளிப்படுத்திய நகரங்களைப் பற்றிய செய்திகள், முதன்முதலாக தெளிவான விளக்கத்துடன் ஒப்பீட்டு ஆய்வு செய்து, உரிய சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. சங்க கால மக்களின் நகர அமைப்புகளும், கால்வாய்களும், அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

4. அயல் நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்பு, குறிப்பாக ரோமானியர்கள் வருகை இவை அனைத்தும் அழகன்குளம், அரிக்கமேடு, காஞ்சிபுரம், கரூர், புகார், மரக்காணம் போன்ற பல அகழாய்வுகளில் கிடைத்த ரோமானிய மட்கலன்களையும் தொல்பொருட்களையும் தொகுத்து இக்கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோமானிய மட்கலன்களில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது*53.

5.    தொழிற் பட்டறைகள் பல அமைத்து தங்கள் வணிகத்தை நடத்தியுள்ளனர். மட்கலன்கள் தயாரித்தல், மணிகள் செய்தல், சங்கு வளையல்கள் செய்தல், விளையாட்டுப் பொருட்கள் செய்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தங்களது வாழ்க்கையில் கேளிக்கைகளையும் விளையாட்டையும் இணைத்து வாழ்ந்துள்ளனர். கரூர், பேரூர், போளுவாம்பட்டி, அழகன்குளம், படைவீடு போன்ற இடங்களில் கிடைத்த தாயக்கட்டைகள், சதுரங்க காய்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

6. வரலாற்றின் இடைக்காலத்தில் அரசு உருவாக்கம் பெற்ற பின்னர், அவர்களது அரண்மனை கட்டடப் பகுதிகள், அவர்களின் கட்டுமான அமைப்புகளில் காணப்பட்ட வளர்ச்சி, குடிநீர் வாய்க்கால், ஏரிகளில் நீர்ப்பாசன வாய்க்கால் அமைத்தல், வீடுகளில் கூறை ஓடுகளைப் பயன்படுத்தியமை, சங்க காலக் கூறை ஓடுகளில் இருந்து பெற்ற மாற்றங்கள் அனைத்தும், தொல்லியல் சான்றாகக் கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வில் கிடைத்தவற்றைக் கொண்டு சுட்டிக்காட்டப்பட்டு, தகுந்த விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், முதன்முதலாக அகழாய்வின் வழியாக வெளிக்கொணரப்பட்ட அரண்மனை கங்கைகொண்டசோழபுரம் ஆகும். இதேபோன்று, தஞ்சை அரண்மனை உள்ள இடத்தையும் அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் முதன்முதலாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கங்கைகொண்டசோழபுரத்தில் தலைப்பகுதியையும், உடற்பகுதியையும் மாற்றி அமைத்துக் கட்டும் கட்டுமான அமைப்பை (Header and Structure Method) பயன்படுத்தியுள்ளனர் என்பது விளக்கப்பட்டுள்ளது*54. இந்த அமைப்பு முறையானது, கட்டடத்துக்கு உறுதியைச் சேர்க்கும் என்பதும், இரண்டு சுவர் அமைப்பு முறையில், இடைவெளியாக 55 செ.மீ. விட்டும், இந்த இடைப்பட்ட பகுதியிலும், அடித்தளத்திலும் மணல் நிரப்பியுள்ளனர் என்பதும் அறியப்பட்டுள்ளது. இது, கட்டடத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என்பர். இதுபோன்ற கட்டுமான அமைப்புகள் கோயில் கட்டுவதிலும், அரண்மனை அமைப்பதிலும் பின்பற்றினர். இதனை கங்கைகொண்டசோழபுரம்*55, படைவீடு*56, தலச்செங்காடு*57 போன்ற அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட கட்டடப் பகுதிகளில் காணப்பட்ட செய்திகள் கொண்டு உறுதிசெய்யப்படுகிறது.

7. கால்வாய்கள் அமைப்பதற்குத் தனிக் கவனம் செலுத்தியுள்ளனர். இதுவரை அகழாய்வுகளில், நான்குவிதமான வாய்க்கால்கள் வீட்டு உபயோகத்துக்கான கட்டுமானமாக அமைத்துள்ளனர் என்ற புதிய தகவல்கள் இத்தொடரின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அவை - 1. செங்கற்களை அடுக்கி கால்வாய் அமைத்து அதனை நீர்த்தொட்டிக்குக் கொண்டுவந்து இணைத்தல்*58. 2. சுடுமண் குழாய்களை இணைத்து குடிநீர்க் குழாய்களை அமைத்தல்; இரண்டு சுடுமண் குழாய்களுக்கு இணைப்பாக காரைப்பூச்சு பூசுவது*59. 3. கற்பலகைகளைக் கொண்டு கால்வாய் அமைத்து, அதனை கற்பலகைகளைக் கொண்டே இறுக மூடி அதன் மீது காரைப்பூச்சு பூசி தூய்மையாக நீர் செல்லத்தக்க வகையில் அமைத்தல்*60. 4. கழிவுநீர்களை வெளியேற்ற கற்பலகைகளில் மையப்பகுதியை பள்ளமாக அமைத்த நிலத்தில் பதித்து, இதனை திறந்த நிலையில் அமைத்துள்ளமை*61. இவை அனைத்தும் அகழாய்வுகளில் காணப்பட்ட புதிய தகவல்கள் ஆகும். அடுத்ததாக, ஏரிகளில் அமைத்த வாய்க்கால் கட்டுமானமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

8. அகழாய்வுகளில் பல்வேறு காலகட்டத்தைச் சார்ந்த மன்னர்கள் வெளியிட்ட காசுகள் மண்ணடுக்குகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை காலத்தைக் கணிக்க பெரிதும் துணை நிற்கின்றன. சங்க காலப் பாண்டியர்*62, ரோமானியர்கள் காசுகள்*63, சோழர்கள் காசுகள்*64, பின்னர் விஜயநகர மன்னர்கள் காசுகள்*65 என பலவும் அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. சோழர்கள் காலத்துக்குப் பின்னர் விஜயநகர மன்னர்களும், நாயக்கர்களும், செஞ்சி, மதுரை நாயக்கர்களும் எவ்வாறு ஆட்சியைத் தொடர்ந்தனர் என்பதற்கு, மண்ணடுக்குகளில் கிடைத்த இத்தகைய நாணயங்கள் சான்றாக அமைந்துள்ளன.

9. அயல்நாட்டோடு தொடர்புடைய மட்கலன்களாகிய போர்ஸலைன், செலடைன் போன்ற மட்கலன்கள்*66, சீன தேசத்தோடு கொண்ட உறவைத் தெளிவுபடுத்துவதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

10.  தமிழகத்தில் மேற்கொண்ட ஆழ்கடல் அகழாய்வுகள் வழியாக, சங்க கால பூம்புகார் மட்டுமின்றி, 18-19-ம் நூற்றாண்டைச் சார்ந்த சிதைந்த போர்க்கப்பல்கள், தொல்பொருட்களாக ஈயக்கட்டிகள் (Lead Ingot), வெடிமருந்துப் பொருள்கள் அடங்கிய பெட்டிகள் (Gun powder box), உடைந்த பீரங்கி (cannon) என பல தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஈயக்கட்டிகளின் மேலே அவற்றின் வருடம் மற்றும் யாருடையது என்பதை குறிக்கும் வாசகம் என குறிப்பிடத்தகுந்த செய்திகள் காணப்படுகிறது*67. தமிழகத்தில் மேற்கொண்ட முதன்மையானதும், முதலாவதுமான ஆழ்கடல் ஆய்வும், அதன் வழியாக பெறப்பட்ட புதிய தகவல்களும் இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை சங்க காலம் மட்டுமின்றி, 19-ம் நூற்றாண்டில் பெற்ற வளர்ச்சியையும், மாற்றங்களையும் அறிய உதவுகின்றன. டேனிஷ் கோட்டைகள், பாஞ்சாலங்குறிச்சி அரண்மனைகள் என நவீன வரலாற்றில் பெற்ற மாற்றங்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாய்வில், அகழாய்வுகளின் அடிப்படையில் வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்களை மட்டுமே மையமாக வைத்து புதிதாக அறியப்பட்ட செய்திகளையும், இதுவரை யாரும் அறியாத நம் தமிழக மக்களின் பண்பாட்டு நிலையையும், பொருளாதார அமைப்பையும், அவை ஆரம்ப காலகட்டத்திலிருந்து இன்றுவரை பெற்ற வளர்ச்சியும் அகழாய்வுச் சான்றுகளின் துணை கொண்டு தெளிவாக்கப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்

1. தமிழக அகழாய்வுகளுடன், அரிக்கமேடு (புதுவை), பிக்கிலிகால் (ஆந்திரம்), டி.நரசிபூர் (கர்நாடகம்) போன்ற அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களும் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. நடன. காசிநாதன், களப்பிரர், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.

3. நடன. காசிநாதன், கல்லெழுத்துக் கலை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

4. வசவசமுத்திரம், அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், குடிகாடு, மரக்காணம், அழகன்குளம், கொற்கை போன்ற கடற்கரையோரத் துறைமுகப்பட்டினங்கள், அகழாய்வுகளின் வழியாக வெளிப்படுத்தப்பட்ட ஒன்று.

5. Sitharam Gurumurthy, Excavations of Archaeological sites in Tamilnadu, Parikulam (2005-2006), Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai-8.

6. S. Selvaraj, Significance of Modur Excavation, Seminar Paper, Seminar on Recent Excavations at Andipatti and Modur, held on 22.06.2005 at Chennai.

7. Ibid, Pp. 3-4

8. கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.

9. கா. ராஜன், கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர்.

10. கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம்.

11. கா.ராஜன், பொருந்தல் அகழாய்வு செய்திக்குறிப்பு, ஆவணம் இதழ் 20, 2009, பக்.109.

12. கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம்.

13. தி.ஸ்ரீ. ஸ்ரீதர், தமிழ்பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு

14.   S. Selvaraj, Gangaikondacholapuram, Tamil civilization, Tamil University, Thanjavur,Vol. No.5 I&2,1987, “The Foundation wall is built with burnt bricks that are arranged in “Header and stretcher” Method to give good strength to the building”. pp.125.

15. Ibid, pp.126. “By this side of the foundation wall another wall was also noticed leaving a gap of 55c.m. This gap was filled rammed brickbats and sticky clay and sand”.

16.   N. Kasinathan, Padavedu Excavations, Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai.

17. Ibid pp.

18.  S. Selvaraj, Gangaikondacholapuram, Tamil Civilization Vol. 5, 1 & 2, Thanjavur, 1987.

19.   தி.ஸ்ரீ. ஸ்ரீதர், கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வு அறிக்கை, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.

20.   மேலது.

21.   மேலது.

22.   ச. செல்வராஜ், அழகன்குளம் - மாங்குடி குறியீடுகள் ஓர் ஆய்வு, தொல்லியல் துறை, சென்னை, கல்வெட்டு காலாண்டு இதழ் 88, 2013.

23. T.S. Sridhar, Excavation of Archaeological Sites in Tamilnadu, Alagankulam, An ancient Roman Port city of Tamilnadu, Dept. of Archaeology, Government of Tamilnadu, 2005.

24. T. Subramani, Excavation at Tharangambadi, Government of Tamilnadu, Chennai.

25. R. Nagasamy & A. Abdul Majeed, Vasavasamudram, A Report on the Excavation conducted by the Tamilnadu State Dept. of Archaeology, 1978.

26. R.E.M. Wheelar, & A. Gosh, An Ancient India Vol-2, Archaeological Survey of India, New Delhi.

27. Indian Archaeology - A Review

28.   சீதாராம் குருமூர்த்தி, தமிழக அகழாய்வுகள் - மரக்காணம் (2005-2006), தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.

29. Indian Archaeology - A Review

30. A. Abdul Majeed, A note on Korkai Excavations pp.73. Tamil civilization Thanjavur, 1987.

31. T.S. Sridhar, Excavations of Archaeological sites in Tamilnadu, An Alagankulam an ancient Roman port city in Tamil nadu Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai, 2005.

32. N. Kasinathan, Padavedu Excavations, Govt. of Tamilnadu, Dept. of Archaeology, Chennai-113.

33. A. Gosh, An Encylopedea of ancient History, Munshiram manoharlal publishers, New Delhi, 1989.

34. Sitharam Gurumurthy, Excavations of Archaeological site in Tamilnadu, Parikulam (2005-2006) Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai-8.

“The Occurrence of large number of flakes and chips that were removed from the pebbles for making the tools along with several finished weapons from the middle palaeolithic levels of the present parikulam excavation. Clearly confirm the existenc of  an Achulion tool making Industry here”.

35. Santhipappu, Excavations at Korthalaiyaru river basin.

36. Sitharam Gurumurthy, opp.cit.pp.

37. Ibid pp.

38.  S. Selvaraj, Significance of Modur Excavation Seminar paper, Seminar on Recent Excavations at Andippatti & Modur, Held on 22.06.2005 at Chennai.

39. F.R. Allchin, Andhra Pradesh Government Archaeological series No.1, Piklihal Excavation, published by A.P., Hydrabad, 1960.

40. T.Narsipur

41. Ancient India Vol-2

42. T.S. Sridhar, Excavation of archaeological sites in Tamilnadu, Modur (2004-2005) Govt. of Tamilnadu, Dept of archaeology, 2005.

43. K. Rajan, Excavations at Mayiladumparai, Tamilnadu, Man and Environment xxix (2) 74-89, 2004.

44. R. Nagasamy, Damilica, Dept. of Archaeology, Govt. of Tamilnadu.

45. Ashokvardhan Shetty, Excavation at Mangudi, Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai, 2003.

46. தி.ஸ்ரீ. ஸ்ரீதர், தமிழக அகழாய்வுகள் - செம்பியன்கண்டியூர் (2007-2008) தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.

47. ச. செல்வராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட தொல்பழங்காலம், கிருஷ்ணகிரி மாவட்டக் கருத்தரங்கக் கட்டுரை.

48. மேலது.

49. ச. செல்வராஜ், கீழ்வாளை ஓவியங்கள், தமிழாசிரியர் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.

50. ச. செல்வராஜ், அழகன்குளம் - மாங்குடி குறியீடுகள் ஓர் ஆய்வு (கட்).

51. கா. ராஜன், பொருந்தல் அகழாய்வு செய்திக்குறிப்பு, ஆவணம் இதழ் 20. 2009.

52. T.S. Sridhar, Archaeological Excavations of Tamilnadu Volume-I, Theriruveli - “The inscriptions in the potsherds were written in Archaic Tamil Script. There, six potsherds with early Tamil scripts. The Two potsherds with the names Korra and Nedunkili, are the Important findings of this site. The former refer the general name of the king as Korra and the latter refer the proper name Nedunkili belonging to the chola dynasty.

53. ஏ. சுப்பராயலு, “மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள்”, ஆவணம் இதழ் 18, 2010, கட்டுரை. திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் நிறுவிய தி.நா. சுப்பிரமணியன் அறக்கட்டளையின் கீழ் நடைபெற்ற 2007-ம் ஆண்டு சொற்பொழிவின் சுருங்கிய வடிவம்.

54. S. Selvaraj, Gangaikondacholapuram, Tamil civilization, Journal vol-5, 1 & 2, Thanjavur, 1987.

55. Ibid.pp.

56. N. Kasinathan, Padavedu Excavations, Dept. of Archaeology, Govt. of Tamilnadu.

57. சீ. வசந்தி, தலைச்செங்காடு அகழாய்வு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை, 2013.

58. N. Kasinathan, Padavedu Excavations, Govt. of Tamilnadu, Dept. of Archaeology.

59. திருக்கோயிலூர், படைவீடு போன்ற அகழாய்வுகளிலும், ஊத்தங்கரை - தருமபுரி அகழ்வைப்பகம் பகுதிகளிலும் சுடுமண் குழாய்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

60. S. Selvaraj, Kannanur Excavation, Excavations of Archaeological sites in Tamilnadu (1985-1995), Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai.

61. N. Kasinathan, Padavedu Excavation, Dept. of Archaeology, Govt. of Tamilnadu, Chennai.

62. T.S. Sridhar, Excavation of Archaeological sites in Tamil nadu, An Ancient Roman Port city, Govt. of Tamilnadu, Chennai, 2005.

63. Ibid.

64. பா. ஜெயக்குமார், நாகப்பட்டினம் அகழாய்வு, ஆவணம் இதழ் 20, 2009, தஞ்சாவூர்.

65. N. Kasinathan, opp.cit.

66. ச. செல்வராஜ், “சீன தேசத்து மட்கலன்கள்” - கல்வெட்டு காலாண்டு இதழ் 83, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, 2013.

67. S. Selvaraj, “Underwater Excavation at Poompukar”, Seminar paper Submitted on 2.2.2013 at Meenatchi Sundareswarar Arts and Science College, Kodambakkam, Chennai.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com