அத்தியாயம் 64 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ஒன்று கூடி உண்டாக்குகிறார்கள் என்பது ஒரு சமூகத்தினை அல்லது ஒரு அமைப்புக்குள் அல்லது ஓரிடத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுகின்றார்கள் என்ற பொருள் வெளிப்படுகிறது.

கால்நடை வளர்க்கும் சமூகத்தினரிடையே காணும் சன்னியாசிக்கல் வழிபாட்டில் இடம்பெறும் வளமை சார்ந்த பலிச் சடங்கு, முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பெற்றது. அவ்விவரங்கள் தகடூர்ப் பகுதியினைச் சார்ந்து விளக்கப்படிருந்தாலும், மேய்த்தல் சமூகம் எப்பகுதியில் கால்நடைகளுடன் வாழ்ந்திருந்தாலும், அதன் நலத்துக்காக, எண்ணிக்கைப் பெருக்கத்துக்காக இவ்வகையான வழிபாட்டினை மேற்கொண்டிருந்ததை தொல்லியல் தடயங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

தொல்மனத்தின் மந்திரம் என்ற வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடைய இம்முறை, சமூகத்தின் நன்மைக்காகவே, அல்லது தற்கால வடிவில் ஊர் நன்மைக்காகவே நிகழ்த்தப்படுவதாகும். இடத்துக்கு இடம் சிற்சில வேறுபாடுகளுடன் இருக்கலாம். ஆனால், நோக்கம் ஒன்று என்பதை அறிந்துகொள்ளலாம். சன்னியாசிக்கல் சடங்கு தனிநபர் முன்னிட்டோ, குறிப்பிட்ட ஒருவரின் கால்நடைகளின் நலத்துக்காகவோ நிகழ்த்தப்படுவதன்று.

ரிக் மக்கள்

ரிக் மக்கள், முதன்மையாக மேய்த்தல் தொழில் புரிந்தவர்களாவர் என்பது வெளிப்படையானது. அவர்கள் மேய்த்தல் தொழில் சார்ந்த சடங்குகளையும், அது சார்ந்த நம்பிக்கைகளையும், அது வழங்கும் செல்வம், அவற்றின் வளம் ஆகியவற்றில் மிகுந்த எதிர்ப்பார்ப்பும், அதனை நோக்கிய முழு ஈடுபாட்டையும் காட்டியவர்களாகத் தங்களின் பாடல்களின் வரிகளில் காட்சியளிக்கின்றனர். ரிக் சமூகம், பிராமணியச் சமூகமாகப் பரிமாணம் கொள்ளும் முன், இனக் குழு வாழ்க்கையினைத் தொடர்ந்தவர்களாக உள்ளனர். ஆணாதிக்கச் சமூகமாக இருந்தாலும், குழு வாழ்க்கையை அவர்கள் பிடிவாதமாகக் கடைப்பிடித்தவர்களாக இருந்துள்ளனர். இது மேய்த்தல் சமூகத்தின் உலகளாவியப் பொதுகுணமாகவும்கூட உள்ளது.

யக்ஞம் அல்லது யாகம் என்ற வேள்வி

‘யக்ஞம்’ என்பது குழு வாழ்க்கை அமைப்பின் பெயராக இருந்துள்ளது. வேத நூல்கள், யக்ஞம் என்பதனை இரு பொருளில் பயன்படுத்துகின்றன. ஒன்று, யாகம் என்ற வேள்வி; மற்றொன்று, குழு. யக்ஞம், சம்ஸ்கிருதத்தில் யஞ்னா என குறிக்கப்படுகிறது. யஞ்னா என்பது தனிச் சொல் அல்ல. அது ஒரு வாக்கியம் என்று விளக்கப்பட்டுள்ளது. அதாவது, “ய”, “ஜ”, “னா” ஆகிய மூன்று சொற்களால் ஆன வாக்கியம். “ய” என்பதற்கு “போக, சேகரிக்க” என்பது பொருள்; “ஜ” என்றால் “உண்டாக்கு” என்பது பொருள்; “னா” என்பது படற்கைப் பன்மை விகுதி ஆகும். எனில், யஜ்னா என்பதற்கு “ஒன்று கூடி உண்டாக்குகிறார்கள்” என்பது பொருளாகும்.*1

யஜுர், தமிழ் வழக்கில் யசூர் என்பதும் யக்ஞத்தின் பொருள் கொண்டதே. அது ய + ஜ் மற்றும் உர் அல்லது உஸ் என்ற படற்கை பன்மை விகுதி இணைந்த தொடராகும். அதனால், யசூரும் “ஒன்று கூடி உண்டாக்குகிறார்கள்” என்றே பொருள் தரும் தொடராகும்.

ஒன்று கூடி உண்டாக்குகிறார்கள்

ஒன்று கூடி உண்டாக்குகிறார்கள் என்பது ஒரு சமூகத்தினை அல்லது ஒரு அமைப்புக்குள் அல்லது ஓரிடத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுகின்றார்கள் என்ற பொருள் வெளிப்படுகிறது. இது, பிற்கால பிராமணங்கள் காட்டும் யாகத்துக்கு நேர் எதிர்ப்பொருள் கொண்டது.

வேட்டலும் பயனும்

ரிக்கில் எவ்வாறு பலிச்சடங்கு நடத்தப்பட்டது என்பதற்கு நேரடி வர்ணனை காட்சிகள் இல்லை. ரிக் பாடல்கள் அடிப்படையில், “கடவுளின் அல்லது கடவுளர்களின் பண்பைக் கூறிப் போற்றி, தாம் அளிக்கும் பொருளைக் குறிப்பிட்டும், தாம் வேண்டும் பொருளைக் குறிப்பிட்டும் அதனை இரந்தும் வேண்டும்” பண்பைக் கொண்டவை. வழிபாடு என்றும் அழைக்கப்படும் இந்நிகழ்வு, வேட்டல் என்றும் குறிப்பிடப்படும்.

வேட்டல், முக்கியமாக “வீரர்களை வேண்டுதல், வீரத்தை அளிக்க வேண்டுதல், சிறந்த புத்திரப்பேற்றை வேண்டுதல். செல்வத்தை அதாவது அன்று செல்வமாகக் கருதப்பட்ட கால்நடைச் செய்வங்களை, குறிப்பாக ஆநிரைச் செல்வங்களை வேண்டுதல்” ஆகியவற்றையே கொண்டிருந்தது. இவை அனைத்தும் வளமை சார்ந்த சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவையே.

வேள்வியும் விலங்குப் பலிச் சடங்கும்

பலி பொருள் குறித்து ரிக்கில் வெகு சில குறிப்புகளே கிடைக்கின்றன.

அத்திரியின் புதல்வன் விரசன் அல்லது ஜானனியின் புதல்வன் ரிஷி குமாரன் எழுதியதாகக் குறிப்பிடப்படும் பாடலொன்று, ‘‘நீ பந்தமாயிருந்த சுனச்சேபனை ஆயிரம் யூபங்களில் விடுவித்தாய். அவன் சாந்தமுடன் இருந்தான் - துதித்தான்” என்கிறது. இவ்வரிகளுக்கு, “பலி கொடுப்பதற்காக சுனச்சேபனை ஆயிரம் பசுக்களைக் கொடுத்து வாங்கினார்கள்” என்று பொருள் கண்டுள்ளனர்.*2

ரிஷி பெளமோ அத்திரி, “தந்தையின் அங்கத்திலே அன்புள்ள மகனைப்போல் வேள்வியை நாடும் மகாவீர பாண்டம் அக்கினியின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. வபையுள்ள பாண்டத்தை பரத்தித் தாபப்படுத்துவதுபோல் அதை அறிஞர்கள் எழில்படுத்துகிறார்கள் அதில் நெய்யை இடுகிறார்கள்” என, யாகத்தில் இடப்படும் பொருளொன்றை காட்சிப்படுகிறார். இதில் வபையுள்ள பண்டம் என்பது ”குடலோடு இரப்பையை இணைக்கும் சதைப்பிடிப்புள்ள மடிப்புப் பாக”த்தைக் குறிப்பிடும் சொல்லாகும்.*3

ரிஷி சியாவாசுவன் – ஆத்திரேயன், “…இந்த வழிபடுபவனுடைய வேள்வியிலே போகங்களைத் தரும் மருத்துகளைப் போற்றவும், தீனியில் பசுக்களைப்போல் அவர்கள் துதியில் இன்புறுகிறார்கள்.…”*4

புரோடாசாதிகம் என்று ஒரு பொருள் வேள்வியின்பொழுது குறிப்பிடப்படுகிறது. ரிஷி மநுவை வஸ்சதன் இதனைக் குறிப்பிடும்பொழுது, “…அவன் புரோடாசத்தை அளிக்கிறான் என்றும், சக்கரன் பால் கலந்த சோமத்தையும், புரோடாசங்களையும் அளிப்பவனுக்கு…’’*5 என்பார். இதற்குப் பொருள் கொண்டவர்கள், “புரோடாசாத்தை - இவ்வரிகளின் வடமொழி மூலம் ‘பசு புரோடாசாதிகம் பசதி’ என்றும் இதற்கு, ‘மிருக பலி கொடுக்கும்பொழுது, அப்பம் ஒரு தேவையான பொருளாகும்’ என விளக்கப்பட்டுள்ளது.

ரிஷி தீர்க்கதமன் வழங்கும் விவரங்கள் (1.162 சூக்தங்களில் அடங்கிய பாடல்கள் முழுவதும்) அஸ்வமேதத்தினை நன்கு அறிமுகப்படுத்துகிறது. “சுத்தப்படுத்தப்பட்ட செய்வ ஆபராங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரையின் முன்னே, ரித்விஜர்கள் பற்றப்பட்ட அவியை செலுத்துங்கால், மே, மே சத்தம் செய்துகொண்டு அதன் முன்னே போகும் விசுவரூபமான – அவியாம் - அஜம் இந்திரனுக்கும் பூசனுக்கும் ஏற்ற உணவாகிறது.”*6

இங்கு குறிப்பிடப்படும் பற்றப்பட்ட அவி என்பது, ‘கடந்த இரவு நடைபெற்ற வேள்வியில் எரிக்கப்பட்டு மிஞ்சியதை குதிரைக்கு அளித்தல்’ எனவும், அஜம் என்பது யாகம் நடக்கும் இடத்தில் கம்பத்தில் குதிரைகளுடன் கட்டப்படும் ஆடு எனவும் பொருள் கொள்வர். அடுத்த பகுதி, “இந்த ஆடு பூசாவுடையது - அக்னியின் – பாகம் எல்லா தேவர்களுக்கும் பிரியமாக இருக்கிறது. துரித குதிரையோடு முதலில் செலுத்தப்படுகிறது. துவஷ்டா, குதிரையோடு அதை முன்னே, புகழுக்காக வேள்விக்கு ஏற்றதாக் இயக்குகிறான்.”*7 என்றும் அடுத்த பகுதி ‘‘மனிதர்கள் பருவத்திலே, தேவர்களிடம் செலுத்துவதற்குரிய அவியம் குதிரையை மும்முறை அனலைச் சுற்ற நடத்துங்கால், பூசாவுடைய பாகமான ஆடு, தேவர்களுக்கு வேள்வியை அறிவித்துக்கொண்டு முன்னே போகிறது.”*8 இதில், ‘தேவர்களுக்கு அவியாகும் குதிரை’ என்பதற்கு “யாகத்தில் குதிரையை தேவர்களுக்கு அளிப்பது” என பொருள் கொள்வர். 8 முதல் 15 வரையிலான பாடல்களும், 18-ம் பாடலும் மேலும் சில விவரங்களைத் தருகின்றன.

(8). ‘‘குதிரையின் கழுத்திலும், கால்களிலும் சேர்க்கப்படும் வடங்களும், வார்களும், இடை ரசிசிகளும், கோலச் சாமான்களும், அதன் வாயிலுள் வைக்கப்பட்ட புல்லும் குதிரையோடு தேவர்களிடம் செல்க.” (9). ‘‘ஈயல் புசிக்கப்பட்ட எந்தப் பச்சை மாமிசப் பகுதியும், கம்பிலோ, கோடாரியிலோ பூசப்பட்ட எந்த மேதையின் பகுதியும், வெட்டுபவனுடைய கைகளிலோ, நகங்களிலோ படிந்துள்ள அந்த ரசப் பகுதியும் உன்னோடு தேவர்களிடம் செல்க.” (10). “அவனுடைய உதிரத்தில் இருந்து உதிரும் எந்த சீரணமாகாத புல்லும், பச்சை மாமிசத்தில் மிச்சமிருக்கும் எதுவும் – இந்த அனைத்தும் வெட்டுபவர்கள் மாசு நீக்கி, சுத்த அவியை தேவர்களுக்குப் பக்குவப்படுத்துவார்களாக.” (11). நெருப்பிலே வாட்டப்படுங்கால், சூலத்தில் இருந்து விழும் துணித்த தேகத்திலிருந்து புவியிலோ, தருப்பையிலோ எத்துண்டும் விடப்படாமலாகுக. இவ்வனைத்தும் விரும்பும் தேவர்களுக்கு அளிக்கப்படுக.” (12). “குதிரை பாகமாவதைப் பார்த்து – பக்குவப்படுவதைப் பார்த்து - வாசனை வீசுகிறது. எங்களுக்கும், குதிரையின் மாமிசத்தை, யாசகமாகக் கேட்பவர்களுக்கும் கொஞ்சம் அளியுங்கள். இவர்கள் முயற்சி எங்கள் நலத்துக்காகுக.”

(13). “மாமிசம் கொதிப்பிக்கப்படும் பாத்திரத்திலே, மாதிரி பார்க்க அமிழ்த்தப்படும் கம்பு, ரசத்தை வழங்கும் பாண்டங்கள், தட்டுகளின் மூடிகள், வாட்டுஞ் சலாகைகள், கத்திகள் எல்லாம் குதிரையை அலங்கரிக்கின்றன.” (14). “புறப்படும் இடம்” தங்குமிடம், புவியிலே புரளும் இடம், கால் கட்டின் இடம், பருகப்பட்ட நீர், தின்னப்பட்ட புல், இவை அனைத்தும் உன்னோடு தேவர்களிடம் சேர்க.” (15). “கந்தப் புகையுள்ள அக்கினி உன்னை கதறச் செய்யாமலிருக்க; சுகந்தமுள்ளதும், பிரகாசிப்பதுமான கடாரம் கவிழாமலிருக்க; தேவர்கள் வேள்விக்காக ஆய்ந்தெடுக்கப்பட்ட குதிரையை ஏற்கிறார்கள். அனலைச் சுற்றிச் செலுத்தப்பட்டதும், பக்தியோடு அளிக்கப்பட்டதுமான குதிரையைத் தேவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.”*9

18-ம் பாடல், “தேவர்களுக்குப் பிரியமான துரித குதிரையின் முப்பத்து நான்கு என்புகளிலே கத்தி செல்கிறது. அங்கங்கள் பாழாகாமல் இருக்க, குதிரையை திறமையுடன் வெட்டுங்கள். அவற்றைத் துணிக்குங்கால், ஒவ்வொரு துண்டின் பெயரையும் கூறுங்கள்.”*10 முப்பத்தி நான்கு எலும்புகள் என்பதற்குப் பொருள் கொள்ளும்பொழுது, “யாகத்தில் பலி கொடுக்கப்படும் குதிரை தெய்வீகமானதாகக் கருதப்படுகிறது. அதனுடைய முப்பத்தி நான்கு எலும்புகள் சூரியன், சந்திரன், ஐந்து கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன” என்பர். ஒவ்வொரு துண்டு என்பதற்கு, “யாகத்தில் பலியாகக் கொடுக்கப்படும் குதிரையின் உடல் பாகங்களைக் கூறுகளாக்கி, ஒவ்வொரு தேவதைக்கும் அவற்றை பகிர்ந்து அளிக்க வேண்டும். அப்பொழுது ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு பெயரைச் சொல்ல வேண்டும்” என்பர்.

இதே சூக்தத்தின் 20, 21, 22 பாடல்கள், இவ்வாறு மேற்கொள்ளப்படும் வேள்விச் சடங்கின் நோக்கத்தை தெளிவாக்குகின்றன. (21). “குதிரையே, நீ தேவர்களிடஞ் செல்லுங்கால், உன்னுடைய பிரியமான தேகம் உன்னை வருத்தப்படாமலிருக்க; கத்தி தேகத்தில் தங்காமலிருக்க; திறமையற்றவனும், பேராசையுள்ள காதகன், அங்கங்களைத் தவறி தன் கத்தியால் அனாவசியமாய் உன் உறுப்புக்களைச் சின்னா பின்னப்படுத்தாமல் இருக்க;” (21). “இல்லை, இங்கு நீ சாகவில்லை; நீ துன்பமாகவில்லை. ஏனெனில், நீ மங்களமான வழிகளால், தேவர்களிடம் செல்கின்றாய். இந்திரனின் குதிரைகளும், மருத்துகளின் அசுவங்களும், அவர்களுடைய தேர்களில் இணைக்கப்படும். உன்னை சோதிக்கு வகித்துச் செல்ல – அசுவினிகளின் – கழுதையின் நுகத்துக்குக் குதிரை இணைக்கப்படும்.” (22). “இந்தக் குதிரை எங்களுக்கு, மிகுந்த பசுக்களும், உத்தமக் குதிரைகளும், வீரப் புதல்வர்களும் உள்ள விசுவத்தைத் தாங்கும் செல்வத்தை ஏந்தி வருக. எங்களுக்கு அதிதி – குதிரை - பாவத்தில் இருந்திலிருந்து விடுதலையை அளிப்பாளாக. குதிரை அவிகளோடு எங்களுக்கு க்ஷத்திரத்தை அளிப்பாளாக.”*11

இது, விலங்குப் பலியுடன் கூடிய வேள்வி வளமை குறித்து சமூகத்தின் அல்லது தங்களின் குழுவின் நன்மைக்கு நிகழ்த்தப்பட்டது என்பதை தெளிவாக்குகிறது.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

1. எஸ்.ஆ.டாங்கே, பண்டைய இந்தியா, (தமிழில்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, (2011 பதி.) ப.66

2. ரிக். 5.2.7, தொகுதி-2, பக். 5 & 7.

3. ரிக். 5.43.7, தொகுதி-2, பக். 86 & 87.

4. ரிக். 4.53.16, தொகுதி-2, பக். 114.

5. ரிக். 8.31.1 & 2, தொகுதி-2, ப.702.

6. ரிக். 1.162.2, தொகுதி-1, ப. 342 & 435.

7. ரிக். 1.162.3, தொகுதி-1, ப. 432 & 435.

8. ரிக். 1.162.4, தொகுதி-1, ப. 434 & 435.

9. ரிக். 1.162.8-15, தொகுதி-1, ப. 433 & 434.

10. ரிக். 1.162.18, தொகுதி-1, ப. 434 & 435.

11. ரிக். 1.162.20-22, தொகுதி-1, ப. 434.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com