விவசாயிகளின் பயிர்க் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாதது ஏன்? முதல்வர் சித்தராமையா கேள்வி

விவசாயிகளின் பயிர்க் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாதது ஏன்? என முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளின் பயிர்க் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாதது ஏன்? முதல்வர் சித்தராமையா கேள்வி
Published on
Updated on
2 min read

விவசாயிகளின் பயிர்க் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாதது ஏன்? என முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் தேவனஹள்ளியில் வெள்ளிக்கிழமை பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
 பெங்களூரு ஊரக மாவட்டத்தில் அமைந்துள்ள தேவனஹள்ளியில் இத்தனை வளர்ச்சிப் பணிகளை முன்னெப்போதும் தொடக்கிவைத்ததில்லை. எனவே,இந்த விழாவை பொன்னெழுத்துக்களால் நாம் எழுத வேண்டும். இந்த பகுதியில் நிலத்தடிநீர் மிகவும் குறைந்துவிட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக ஏரிகளை நிரப்பும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

நாட்டிலேயே கர்நாடகத்தில்தான் முதல்முறையாக ஏரிகளை நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்தப்படுகிறது. கோலார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பும் பணி 40 சதம் முடிந்துள்ளது. ரூ.1340கோடியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். பெங்களூரு ஊரக மாவட்டத்தின் ஏரிகளை நிரப்பும் பணி 18 மாதங்களில் முடிவடையும்.

கோலார், ராமநகரம், சிக்பளாப்பூர், பெங்களூரு ஊரகம், தும்கூரு மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவே ரூ.13 ஆயிரம் கோடி செலவில் எத்தினஹொளே திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டம் முடிவடைந்தால்

5 மாவட்டங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு நீங்கும். இந்தத் திட்டத்தை ஒருசில அரசியல் உள்நோக்கத்திற்கு எதிர்த்துவருகிறார்கள் என்பதை மக்களுக்குத் தெரியும்.

ஏரிகளை பொதுபயன்பாட்டுக்கு அளிக்கவிருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அதுபோன்ற திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. கட்டுநர்களுடன் இணைந்து ஏரிகளைப் பொதுப் பயன்பாட்டுக்கு அளிக்கவிருப்பதாக அரசு மீது பொய் சொல்கிறார்கள்.

வளர்ச்சிப் பணி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால், மதக் கலவரத்தில் யாராவது மாண்டுபோனால் அதிலும் ஒருசிலர் அரசியல் நடத்துகிறார்கள். ஆட்சியில் இருந்தபோது எந்த பணியையும் செய்யாதவர்கள், தற்போது காங்கிரஸ் அரசுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறார்கள்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களில் வெல்லப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. மக்கள் வாக்களித்தால் தானே 150 இடங்களை வெல்ல முடியும். காங்கிரஸ் அரசு செய்துள்ளபணிகளை மக்கள் பாராட்டி வருகிறார்கள். அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்கும்.

விவசாயிகளின் இன்னலை போக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க் கடனில் ரூ.50 ஆயிரத்தை தள்ளுபடி செய்திருக்கிறோம். அதேபோல, தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாதது ஏன்? விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தால், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறும் மத்திய பாஜக அரசு தொழிலதிபர்களின் ரூ.81 ஆயிரம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்தது எப்படி? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இதன்மூலம் விவசாயிகள் மீது பாஜகவினருக்கு இருக்கும் அக்கறையைத் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

விழாவில் பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெüடா, சமூகநலத் துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com