திருவள்ளுவர் நாள் பேரணி: கர்நாடகத் தமிழர்களை இணைக்கிறதா? பிரிக்கிறதா?

பெங்களூரில் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் திருவள்ளுவர் நாள் பேரணி கர்நாடகத் தமிழர்களை இணைக்கிறதா? பிரிக்கிறதா? என்ற சர்ச்சை தமிழர்களிடையே எழுந்துள்ளது.
Updated on
3 min read

பெங்களூரில் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் திருவள்ளுவர் நாள் பேரணி கர்நாடகத் தமிழர்களை இணைக்கிறதா? பிரிக்கிறதா? என்ற சர்ச்சை தமிழர்களிடையே எழுந்துள்ளது.
இந்தியாவின் அங்கமாகவும், அண்டை மாநிலங்களாக உள்ள கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையதாகும். ஆங்கிலேயர் காலத்தில் தற்போதைய கர்நாடகத்தின் பெரும் பகுதி சுதந்திரத்திற்கு முந்தைய சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்தது.
 1956-ஆம் ஆண்டு புதிய மாநிலங்களாகத் தோன்றிய கர்நாடகமும், தமிழகமும் பாசத்தோடு அல்லாமல் ஆவேசத்தோடு உரசலாடி வந்துள்ளன. பூகோளம், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், உணவு, உடுப்பு போன்ற பல்வேறு கூறுகளில் ஒரேதளத்தில் இருக்கும் கர்நாடகமும், தமிழகமும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.
காவிரி நதிநீர்ப் பங்கீடு, சந்தன கடத்தல் வீரப்பன், செம்மொழி, நடிகர் ராஜ்குமார் கடத்தல், ஒகேனக்கல் நதி நீர்ப் பங்கீடு போன்ற பல சிக்கல்களால் சூழப்பட்டிருந்தாலும், திருவள்ளுவர் சிலை திறப்பு விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்னையாக நிலைத்திருந்தது.
40 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழும் பெங்களூரில் அல்சூர் ஏரி எதிரே அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் பொதுமறை தந்த புதுமைக்கோமான் திருவள்ளுவரின் சிலை திறக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம் நீண்ட காலமாக திட்டமிட்டு, 1991-ஆம் ஆண்டில் அதற்கான திறப்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
திருவள்ளுவர் சிலையைத் திறக்க திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கன்னடர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.பங்காரப்பாவால் திறக்க தேதி குறிப்பிட்டிருந்தும், அதற்கான காலம் கனியாமல் பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவரின் சிலை சணல் பையின் வாசத்தில் மூடி வைக்கப்பட்டிருந்தது.
ஜாதி, மதம், மொழி, நாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித வாழ்க்கையை செம்மையாக்கும் சீரிய சிந்தனைகளைக் கொண்ட செந்நாப்புலவன் திருவள்ளுவர் சிலையைத் திறக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம் சட்டப் போராட்டம் நடத்தினால், உலகத் தமிழர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
 பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் பண்ட மாற்றுமுறைப்படி கர்நாடக அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து திருவள்ளுவர் சிலையை 2009-ஆம் ஆண்டு ஆக.9-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது (இதற்குப் பதிலாக சென்னையில் கன்னடக்கவிஞர் சர்வர்ஞர் சிலை திறக்கப்பட்டது).
அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், ஜாதி, மத, அரசியல் உணர்வுகளை கடந்து லட்சக்கணக்கான கர்நாடகத் தமிழர்கள் எழுச்சிப் பொங்க கலந்து கொண்டனர்.
இந்த எழுச்சி, உற்சாகம், கொண்டாட்டம், குதூகலத்தை பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் திருவள்ளுவர் நாள் பேரணியில் காண இயலவில்லை என்று கர்நாடகத் தமிழர்கள் மனம் குமுறத் தொடங்கியுள்ளனர்.
 கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் நிறுவியிருக்கும் திருவள்ளுவர் விழாக் குழுவினரால் ஜன.15-ஆம் தேதியும், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் ஜன.22-ஆம் தேதியும் திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணி நடந்தது. இந்த இரு விழாக்களிலும் அரசியல், ஜாதி, மத, சுயநலம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது.
இதுகுறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது, தமிழர் மனத்தளங்களிலும் ஊடுருவி இருப்பதைக் காண முடிகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்) என்ற திருவள்ளுவரின் பெயரில் நடைபெறும் விழா மற்றும் பேரணியில் ஜாதி, மத அடையாளங்களோடு கலந்துகொள்வது தமிழார்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.
 ஜாதி, மதம், அரசியல் போன்ற கூறுகளால் பிரிந்து கிடக்கும் தமிழர்களை மொழியால் ஒன்றுபடுத்த முயல்வதற்குப் பதிலாக, ஜாதி,மத, அரசியல், மொழி உள்ளிட்ட எவ்வித அடையாளங்களையும் சுமக்காத திருவள்ளுவரின் பெயரால் தமிழர்களை ஜாதி, மத, அரசியல் ரீதியாக கூறுபோடுவதை ஏற்க முடியாது என்று வாதிடுகிறார்கள்.
 திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்களாக கலந்து கொள்ளலாமே தவிர, ஜாதி, மதம், அரசியல் அடையாளங்களை பிரதிநிதிக்கக் கூடாது. கர்நாடகத் தமிழர்களின் அரசியல் விடியலுக்காக திருவள்ளுவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது. தமிழர்கள் எந்த ஜாதி, மதம், அரசியல் சார்புநிலையை கொண்டிருந்தாலும், தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழர் என்ற அடையாளத்தோடுதான் பங்கேற்க வேண்டும்.
திருவள்ளுவர் நாள் பேரணியை தமிழர்களின் பலத்தை காட்டுவதற்காக நடத்துவதாக வாதிட்டுக்கொண்டு, அரசியல் கட்சிகளைபோல ஆட்களை சேர்க்கும் மலிவான முறையை தமிழ்ச் சங்கம் கைவிட வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
திருவள்ளுவர் நாள் பேரணியில் ஜாதி, மதம், அரசியல் அடையாளங்கள் இல்லாமல் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக பங்கேற்பது எதிர்காலத்திற்கு தமிழர்களின் நலனைக் கட்டிக்காக்க உதவும். திருவள்ளுவரின் பெருமையை கட்டிக்காப்பதைவிட, திருக்குறளின் சிந்தனைகளை தமிழர்களுக்கும், பிறமொழியினருக்கும் வாரி வழங்குவதே பேரணியின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.
பேரணியில் திருவள்ளுவரின் புகைப்படம் தவிர, வேறு யாருடைய புகைப்படங்களும் இடம் பெறக் கூடாது. திருக்குறள் பொறிக்கப்பட்ட பதாகைகள், தட்டிகள் மட்டுமே ஏந்தப்பட வேண்டும். குழந்தைகள், இளைஞர்களிடையே திருக்குறளை கொண்டுசேர்க்கும் வகையில் விழாவை அமைத்துக்கொள்வது எதிர்கால சந்ததிக்கு பயனுள்ளதாக அமையும்.
விழாவில், அரசியல் தலைவர்களை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து பெருமைப்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். அரசியல் தலைவர்கள் பங்கேற்பதால், தமிழர்கள் அரசியல் ரீதியாக பிரிக்கப்படுகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக நடக்கும் திருவள்ளுவர் பேரணியின் உற்சாகம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருவதற்கும், ஜாதி, மதம், அரசியல் அடையாளங்களை விரும்பாத தமிழர்கள் விழாவுக்கு வராமல் இருப்பதற்கும் வெளிப்படையான காரணங்கள் தெரிகின்றன.
திருவள்ளுவர் விழா மற்றும் பேரணியை தமிழர் பண்பாட்டு மீட்புக்காக கர்நாடகத் தமிழர்களை உணர்வு ரீதியாக தட்டியெழுப்புவதற்கும், கூட்டு சக்தியாக தமிழர்களை ஒருமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், தமிழர்களை கூறுபோடுவதற்காக அல்ல.
தாய்த் தமிழகத்தில் இருந்து வெளியே இருக்கும் தமிழர்களை மொழியால் ஒன்றுபடுத்த திருவள்ளுவர் பேரணி பயன்பட வேண்டுமே தவிர, ஜாதி, மதம், அரசியல் அடையாளங்களை, பெருமிதங்களை வெளிப்படுத்துவதற்கான களமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் தமிழார்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் திருவள்ளுவர் விழா மற்றும் பேரணி, தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்வைத்து நடத்தப்பட வேண்டும் என்று கர்நாடகத் தமிழர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
இதை செய்ய தவறும்பட்சத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் கர்நாடகத்தில் தமிழர்களை தேடி கண்டுபிடிக்க நேரிடும் என்பதை மறுக்க இயலாது. தமிழால் இணைவோம், தமிழராய் பிளவுபடாதிருப்போம் என்பதே கர்நாடகத் தமிழர்களின் விருப்பமும், எதிர்பார்ப்பும் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com