இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு கைகொடுக்குமா?

மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த நஞ்சன்கூடு, குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு கைகொடுக்குமா? என்பது அரசியலாளர்கள் மத்தியில் முக்கிய விவதாப்
Updated on
2 min read

மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த நஞ்சன்கூடு, குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு கைகொடுக்குமா? என்பது அரசியலாளர்கள் மத்தியில் முக்கிய விவதாப் பொருளாகியுள்ளது. எனினும், இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் சித்தராமையா தள்ளப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனம்.
முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில் காலியாக இருந்த நஞ்சன்கூடு மற்றும் குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்.9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி முதல்வர் சித்தராமையாவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த பாஜகவும், மஜதவும் வியூகம் அமைத்துள்ளன. அடுத்த ஓராண்டில் கர்நாடக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், நஞ்சன்கூடு மற்றும் குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நஞ்சன்கூடு மற்றும் குண்டல்பேட் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இம்முறை அந்த இரு தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக,மஜத தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
இக்கட்சிகளின் எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது. வீரசைவா மற்றும் தலித் சமுதாயத்தினர் ஆதிக்கம் செலுத்திவரும் இரு தொகுதிகளைக் கைப்பற்ற காங்கிரஸ், பாஜக, மஜத இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.
காங்கிரஸ் எம்.எல்.சி. கே.கோவிந்தராஜூயின் நாள்குறிப்பு விவரங்கள் பகிரங்கமானதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும் சரிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களாக ஜாபர்ஷெரீப், ஜனார்தனபூஜாரி, ஏ.எச்.விஸ்வநாத் உள்ளிட்டோர் முதல்வர் சித்தராமையாவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சிபூசல், ஆட்சிக்கு எதிரான மனப்பான்மை, கையூட்டு புகாருக்கு பிறகு உருக்குப்பாலம் திட்டத்தை கைவிட்டது போன்றவை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்துள்ளன. ஒக்கலிகர் சமுதாயத்தின் ஆதிக்கம் இல்லாத இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியை வழங்க மஜத தீர்மானித்துள்ளது.
குண்டல்பேட் தொகுதி: குண்டல்பேட் தொகுதியில் 5 முறை வென்று அமைச்சராக இருந்த மகாதேவபிரசாத் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவரை நிறுத்த காங்கிரஸ் தீர்மானித்துள்ளதால் அனுதாபஅலை காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனினும், இத்தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வீரசைவா சமுதாயத்தை ஈர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நிரஞ்சன்குமாரை மீண்டும் களமிறக்க பாஜக தீர்மானித்துள்ளது.
நஞ்சன்கூடு தொகுதி: சித்தராமையா அமைச்சரவையில் இருந்து கைவிட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ள சீனிவாஸ்பிரசாத், பாஜக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடைத் தேர்தல் தனக்கும், சித்தராமையாவுக்கும் இடையிலானது என்று சீனிவாஸ்பிரசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் குழப்பம் நீடித்துவருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
மஜதவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்துள்ள கேசவ மூர்த்தியை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க கட்சியில் விவாதம் நடந்துவருவதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதியில் வீரசைவா வாக்குகள் தவிர தலித் வாக்குகளைப் பெற பாஜக வியூகம் அமைத்துவருகிறது.
முதல்வர் வியூகம்: நஞ்சன்கூடு, குண்டல்பேட் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தனது செல்வாக்கு, ஆட்சி நிர்வாகத்தின் மீதுள்ள மதிப்பை வெளிப்படுத்தும் என்பதை அறிந்துள்ள முதல்வர் சித்தராமையா, நேரடியாக தேர்தல் பணிகளை கவனித்துவருகிறார். அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா, எம்பி ஆர்.துருவநாராயணா ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை கவனித்துவரும் சித்தராமையா, இடைத் தேர்தலில் சீனிவாஸ்பிரசாத்துக்கு பாடம்புகட்டதிட்டமிட்டிருக்கிறார்.
குண்டல்பேட் தொகுதி தேர்தல் பணி அமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாஜக குறிவைத்துள்ள வீரசைவா வாக்குகளை பிளவுபடுத்தி, தலித், நாயக், குருபா, முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
சித்தராமையாவுக்கு பெரும் சவாலாக அமையவிருக்கும் இருதொகுதிகளின் தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் காங்கிரஸின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த இரு தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல் மாநில அளவிலான தேர்தலாக மாறியுள்ளதால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com