பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எத்தனை முறை கர்நாடகத்துக்கு வந்தாலும், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ய வஸ்ய பட்டதாரிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஜனநாயக நாட்டில் யார், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா போன்றவர்கள் கர்நாடகத்துக்கு வருவதில் தவறில்லை. ஆனால், அவர்கள் எத்தனை முறை கர்நாடகத்துக்கு வந்து பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தாலும், மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடிப்பது உறுதி. பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, கர்நாடகத்துக்கு வரும்போதெல்லாம், விவாதத்திற்குரிய வகையில் பேசி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசு மாநிலத்தில் தொடர்ந்து அமைதியை பேணிக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் அமைதியைக் குலைக்க யாரேனும் முயற்சி மேற்கொண்டால், அதனை வேடிக்கை பார்க்க முடியாது. பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதில் பாஜகவினரை வெல்ல யாராலும் முடியாது. ஆனால் அவர்களின் பொய் பிரசாரத்தை கர்நாடக மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.
மேலும் மகதாயி, கலசா-பண்டூரி விவகாரத்தில் பிரதமர் தலையிடுமாறு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அண்மையில் மகதாயி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த கடித்தத்திற்கு பிறகு மகதாயி விவகாரத்தில் பிரதமர் தலையிடுவார் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சட்டமேலவைத் தலைவர் சங்கரமூர்த்தி, மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.