கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கர்நாடகத் தமிழர்களின் அரசியல் போக்கு சலனமில்லாததாக இருந்துவருகிறது.
கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் அரசு தனது பதவிக் காலத்தை மே 12-இல் நிறைவு செய்கிறது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் தேர்தலுக்காக 3 முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியன கடந்த ஓராண்டாகவே ஆயத்த வேலைகளில் ஈடுபட தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், கன்னடர்களுக்கு அடுத்தபடியாக வாழும் மொழி சிறுபான்மையினர் அரசியல் கட்சிகளிடம் அதிகாரப் பகிர்வைப் பேரம் பேசி வருகின்றனர். அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்காமல், சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெறமுடியாது என்பதில் உறுதியாக இருக்கும் பின்தங்கிய மொழிவாரி, மதவாரி மக்கள், அரசியல் உரிமைகளைக் கையகப்படுத்துவது பற்றி பேசத் தொடங்கிவிட்டனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கேட்டு அரசியல் கட்சிகளின் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். இருப்பினும், கர்நாடகவாழ் தமிழர்கள் அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.
சுதந்திரத்துக்கு பின்பு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது உதயமான கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள், சோழர்காலம் தொட்டு வாழ்வோர், சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தோர், கடந்த 50 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்காக தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்தோர் என்ற 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றனர்.
இவர்களில் வேலைவாய்ப்புக்காக ஓரிரு ஆண்டுகள் மட்டுமே கர்நாடகத்தில் வசிப்போரை கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.
பெங்களூரு, கோலார், மைசூரு, மண்டியா, சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும் 90 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். இதில் பெங்களூரில் மட்டுமே 40 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர்.
பரிதாப நிலையில் தமிழர்கள்?
கர்நாடகத் தமிழர்களின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழர்களில் 50 சதவீதம் பேர் தொழிலாளர்களாகவும், 40 சதவீதம் பேர் மாத ஊதியம் பெறுவோராகவும், 10 சதவீதம் பேர் உயர்வருவாய் பிரிவினராகவும் இருக்கிறார்கள். கர்நாடக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஊழியர்களாக பணியாற்றுவோர் ஒரு சதம் பேராக உள்ளனர். ஆக, 90 சதவீதம் பேர் நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பெங்களூரில் வாழும் 70 சதவீதம் தமிழர்கள் குடிசைப் பகுதிகளில்தான் வாழ்ந்துவருகின்றனர்.
சோதனை மேல் சோதனை...: சொற்ப வருவாய் ஈட்டும் பெரும்பாலான தமிழர்களால் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள முடியவில்லை. குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க இயலவில்லை. தொழில் செய்ய மூலதனமும் வங்கிகளில் கிடைப்பதில்லை.
குடும்பத்திலும், சமூகத்திலும்பொருளாதாரப் போராட்டத்தையே தமிழர்கள் நடத்திவருகின்றனர். தமிழ்ப் பட்டதாரிகளால் அரசுப் பணிகளில் நுழைய வாய்ப்பு இருப்பதில்லை. தமிழர்கள் வாழும் குடிசைப் பகுதிகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லை.
கர்நாடகத்தில் மும்மொழி திட்டம் அமலில் இருப்பதால், ஆங்கிலத்தைத் தவிர, கன்னடம், ஹிந்தி படிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் உள்ளனர்.
அடுத்த 10 ஆண்டுகளில் கர்நாடகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பண்பாடு, கலை உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் தமிழர்கள் இழக்கும் ஆபத்தும் உள்ளது.
எதிர்காலத்தில் தமிழ் பேசாத தமிழர்கள் என்ற நிலை உருவெடுக்கும். தமிழர்களை அரசியல் கட்சிகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகிறார்களே தவிர, அவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதில்லை.
2009-ஆம் ஆண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்துவைத்த பிறகு, தேர்தல் நேரத்தில் நடைபெறும் பொங்கல் விழாவின்போது அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். அரசியல் லட்சியங்களை கொண்டிருக்கும் ஒருசில தமிழர்கள் பொங்கல் விழாவை அரசியல் விழாவாக மாற்றிவிட்டனர். இதனால் திருவள்ளுவர் மீது பற்றுகொண்ட தமிழர்கள் யாரும் அங்கு கூடுவதில்லை.
காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் ஒருசிலர் எம்எல்ஏக்களாகவும், பெங்களூரு, கோலார் தங்கவயல், சிவமொக்காவில் உள்ளாட்சி அமைப்புகளிலும் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களால் தமிழர்களுக்கு எள்ளளவும் பயனில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.
பெங்களூரு, கோலார் தங்கவயலில் உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக தமிழர்களாக இருந்தும், அங்கெல்லாம் தமிழர்கள் தேர்தலில் நின்று வெற்றிபெற முடியாத நிலையே உள்ளது.
கடந்த தேர்தல்களில் காந்திநகர், பாரதி நகர், கோலார்தங்கவயல் தொகுதிகளைத் தவிர, வேறு எங்கும் தமிழர்களால் வெற்றி பெற முடியவில்லை. இப்போதைய நிலையில், அந்த 3 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்பில்லாதநிலையே உள்ளது.
தலைமை இல்லை: துளுவர்கள், கொங்கணிகள், தெலுங்கர்கள், மலையாளிகள், மராத்தியர்கள் போன்ற மொழி சிறுபான்மையினர் சிறந்த முறையில் அரசியல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு வலுவான தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், கர்நாடகத் தமிழர்களுக்கு அரசியல் தலைமை என்று யாருமே இல்லை.
கடந்த காலங்களில் கர்நாடக தமிழர்முன்னேற்றக் கழகம் போன்ற அரசியல் கட்சிகள் தமிழர் நலனுக்காகத் தொடங்கப்பட்டாலும், செல்வாக்கு பெற இயலவில்லை.
தமிழர்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட, உண்மையான நோக்கம் கொண்ட, அப்பழுக்கற்ற தமிழர் நலனை மையப்படுத்திய தமிழ் அமைப்பு இனிமேல் தான் தோற்றம்பெற வேண்டியுள்ளது. சலனமில்லாத கர்நாடகத் தமிழர்களின் அரசியல் வேகம் பிடிப்பது எப்போது என்ற ஏக்கம் தமிழர்களை வாட்டி வதைத்து வருகிறது. விடை தெரியாத கேள்விக்கு பதில் எப்போது...? என்ற ஏக்கம்தான் தமிழர்களின் நிலை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.