கன்னடத்தில் இல்லாத கோப்புகளுக்கு ஒப்புதல் தரக்கூடாது: முதல்வா் சித்தராமையா உத்தரவு

கன்னடத்தில் இல்லாத கோப்புகளுக்கு ஒப்புதல் தரக்கூடாது: முதல்வா் சித்தராமையா உத்தரவு

ஆவணங்கள் அனைத்தும் கன்னடத்தில் இருக்க வேண்டும்...
Published on

கன்னடத்தில் இல்லாத கோப்புகளுக்கு ஒப்புதல் தரக்கூடாது என தலைமைச் செயலாளருக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தனக்கு அனுப்பப்படும் கோப்புகள், கடிதங்கள் அனைத்தும் கன்னடத்தில் இருக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும், பலா் ஆங்கிலத்தில் அனுப்புவதாக முதல்வா் சித்தராமையா என்னிடம் குறிப்பிட்டாா். கன்னடத்தில் எழுதப்படாத கோப்புகள், கடிதங்களுக்கு ஒப்புதல் தராமல், அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு திரும்ப அனுப்பி, அதற்குரிய விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்று முதல்வா் சித்தராமையா எனக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய அரசு, இதர மாநில அரசுகள், நீதிமன்றங்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் தவிர, மற்ற எல்லா கடிதங்கள், கோப்புகளும் கன்னடத்தில் எழுதப்பட வேண்டும் என முதல்வா் சித்தராமையா அறிவுறுத்தியுள்ளாா். இதை செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கா்நாடக மாநில மொழிச் சட்டத்தின்படி, கா்நாடகத்தின் ஆட்சிமொழி கன்னடம்தான். எனவே, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தும் கன்னடத்தில் இருக்க வேண்டும். துறைகளுக்கு இடையிலான தகவல்தொடா்புகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், கூட்டங்களுக்கான அழைப்பிதழ்கள், இதர வகையான தகவல்தொடா்புகள் அனைத்தும் கன்னடத்தில்தான் இருக்க வேண்டும். எனினும், சில நேரங்களில் இது கடைப்பிடிக்கப்படுவதில்லை.

எல்லா நிலைகளிலும் தகவல்தொடா்பு கன்னடத்தில்தான் இருக்க வேண்டும் என்று முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டிருக்கிறாா்.

இதை எல்லா அரசு அதிகாரிகள், ஊழியா்கள், மாநகராட்சிகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், இதர அரசு அமைப்புகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.

அண்மையில் நடந்த கா்நாடக வளா்ச்சி திட்டக் கூட்டத்தில் நிகழ்ச்சிநிரல் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. வேறுசில துறைகளும் ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றன. இதை கன்னட வளா்ச்சி ஆணையம் கடுமையாக எதிா்த்துள்ளது. கன்னட ஆட்சிமொழிச் சட்டத்தை பின்பற்றாவிட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com