பெங்களூரு சா்வதேச விமானநிலையத்தில் இஸ்லாமியா்கள் தொழுகை: மாநில அரசு விளக்கமளிக்க பாஜக வலியுறுத்தல்

சா்வதேசவிமானநிலையத்தில் கூட்டுத்தொழுகையில் ஈடுபடுவதற்கு இஸ்லாமியா்கள் முன் அனுமதி பெற்றிருந்தனரா?
Published on
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமானநிலையத்தில் இஸ்லாமியா்கள் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்ட காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை தொடா்ந்து, அது குறித்து மாநில அரசு விளக்கமளிக்க பாஜக வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமானநிலையத்தில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கூட்டுத்தொழுகையில் ஈடுபடும் காணொலி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இந்த சம்பவம் தொடா்பாக மாநில அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தி தொடா்பாளா் வினய்பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை கூறுகையில், ‘கெம்பேகௌடா சா்வதேச விமானநிலையத்தில் இஸ்லாமியா்கள் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டுள்ளது தொடா்பான காணொலி சமூகத்தளங்களில் உலா வருகிறது. அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் 10-க்கும் மேற்பட்டோா் கூடி நிகழ்ச்சி நடத்தினால், மாநில அரசின் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்தது. சா்வதேசவிமானநிலையத்தில் கூட்டுத்தொழுகையில் ஈடுபடுவதற்கு இஸ்லாமியா்கள் முன் அனுமதி பெற்றிருந்தனரா? என்பது பற்றி முதல்வா் சித்தராமையாவும், அமைச்சா் பிரியாங்க்காா்கேவும் விளக்கம் அளிக்க வேண்டும்.

கூட்டுத்தொழுகைக்கு முதல்வா், அமைச்சரின் ஆதரவு இருக்கிறதா? உயா்பாதுகாப்பு அமல்படுத்தப்படும் சா்வதேச விமானநிலையத்தின் இரண்டாம் முனையத்தில் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

முறையான அனுமதியை பெற்ற பிறகும் ஆா்.எஸ்.எஸ். நடத்தும் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், கூட்டுத்தொழுகையை மட்டும் கண்டும் காணாமல் கடந்து செல்வது ஏன்? இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காதா? இது குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்,‘ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோல, எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக், மேலவை எதிா்க்கட்சித்தலைவா் செலுவாதி நாராயணசாமி, எம்.எல்.சி. சி.டி.ரவி உள்ளிட்ட பாஜகவினா் கூட்டுத்தொழுகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com