காங்கிரஸில் செல்வாக்கு மிகுந்தவராக வளரும் சித்தராமையாவால் தங்கள் கட்சியின் எதிர்காலம் பாதிக்கும் எனக் கணித்துள்ள பாஜக, மஜத கட்சிகள், அவரை பேரவைத் தேர்தலில் தோல்வியுறச் செய்வதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளன. இதனால், தேர்தல் களத்தில் சித்தராமையாவின் விவேகம் குறைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாகக் கருதும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை வசப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் களப் பணியாற்றி வருகிறது பாஜக, இந்தத் தேர்தலின் முடிவு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜக கணித்துள்ளது. இதனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக மிகுந்த அக்கறையோடு அணுகி வருகிறது.
இதேபோல, மஜதவை அழிக்கும் நோக்கில் சித்தராமையாவின் செயல்பாடுகள் அமைத்துள்ளதாகக் கருதும் மஜத, அவரது எதிர்கால அரசியல் செல்வாக்கைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
பாஜக-மஜத வியூகம்
அரசியல் சித்தாந்தங்கள், கொள்கைகள், அணுகுமுறைகள் வெவ்வேறாக இருந்தாலும், தங்களது எதிர்கால அரசியல் மற்றும் கட்சிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சித்தராமையாவை வீழ்த்தும் நோக்கில் பாஜகவும், மஜதவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சித்தராமையாவை முதல்வராக நீடிக்க அனுமதித்தால் தனது இருப்பை இழக்க நேரிடுமோ என்று மஜத அஞ்சுகிறது. முதல்வர் பதவியில் சித்தராமையா நீடித்தால், ஹிந்துத்துவா அடிப்படையிலான அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும். அது மக்களவைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பைத் தடுத்துவிடும் என்று பாஜக கணக்கு போடுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவைக் கொண்டு அரசியல் விளையாட்டுகளில் சித்தராமையா ஈடுபட்டுவருவதாகக் கருதும் பாஜகவும், மஜதவும் ஜாதி அரசியலை முன்வைத்து, சித்தராமையாவை வீழ்த்த வியூகம் அமைத்துள்ளன.
ஜாதி அரசியல்
கர்நாடகத்தில் 18-20 சதவீத வாக்குகளை லிங்காயத்துகளும், 15 சதவீத வாக்குகளை ஒக்கலிகர்களும் வைத்துள்ளனர். இந்த இரு சமுதாயத்தின் ஆதரவைப் பெறும் கட்சிகள் வெற்றி பெற்று வந்தன. இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வராகவும், அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2013 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு சித்தராமையாவை முதல்வராக்க மிகவும் யோசித்தது. ஆனால், லிங்காயத்து அல்லாத ஒக்கலிகர் அல்லாத-பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் புதிய அரசியலைப் பயன்படுத்தி சித்தராமையா வெற்றி பெற்றிருந்ததால், அதை நம்பி அவரை முதல்வராக்கியது காங்கிரஸ்.
அதன்படி, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவு அதிகரித்து வந்தது. இந்த ஜாதி அரசியலை முறியடிக்க பாஜகவும், மஜதவும் கர்நாடகத்தில் செல்வாக்குமிக்க லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதாயங்களின் வாக்குகளை காங்கிரஸுக்கு எதிராக ஒருங்கிணைத்து வருகிறார்கள். மேலும், காங்கிரஸின் வாக்கு கோட்டையை உடைக்க பழங்குடியினரான ஸ்ரீராமுலுவை பாஜக முன்னிலைப்படுத்தி, ஆட்சி அமைத்தால் துணைமுதல்வராக்குவோம் என்ற செய்தியை கசியவிட்டுள்ளது. இதேபோல, மஜத ஆட்சிக்கு வந்தால், தாழ்த்தப்பட்டோரை துணை முதல்வராக்குவதாக அக் கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
திணறும் சித்தராமையா
தனது சமூக நீதி அரசியலுக்கு எதிராக பாஜகவும், மஜதவும் புதிய ஜாதி நீதி அரசியலை முன்வைத்துள்ளதை சற்றும் எதிர்பார்க்காத சித்தராமையா, அதை சமாளிக்கும் வழித் தெரியாமல் தடுமாறி வருகிறார். லிங்காயத்து சமுதாயத்தினருக்கு சிறுபான்மையினர் மத அங்கீகாரம் வழங்க முன்வந்தால், அச் சமுதாயத்தினர் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பார்கள் என்று திட்டமிட்ட சித்தராமையாவின் அரசியல் கணக்கு பலனளிக்கவில்லை.
கைநழுவியது ஆதரவு
வேட்பாளர் பட்டியலில் பெயர் அறிவித்தும்கூட , அதை பொருள்படுத்தாமல், கடைசிநேரத்தில் தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கிய நடிகர் அம்பரீஷ், ஒக்கலிகர் சமுதாயத்தின் முன்னணித் தலைவர். சித்தராமையாவை கடுமையாக விமர்சித்துள்ளார் அம்பரீஷ். இதன்மூலம் ஒக்கலிகர்களின் வாக்குகள் சித்தராமையாவுக்கு முழுமையாக செல்லாமல் சிதறியுள்ளன.
பாஜக, மஜதவின் கணக்குப்படி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் வாக்குகள் பிளவுபட்டால், லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர்களின் வாக்குகள் காங்கிரஸுக்கு கைகொடுக்கவில்லையென்றால், தேர்தல் முடிவை திசை மாற்றும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பாஜகவும், மஜதவும் வகுத்துள்ள ஜாதி கணக்கை முறியடித்து, தனது சமூக நீதி அரசியலை நிலைநிறுத்தி காங்கிரஸுக்கு வெற்றிக்கனியைப் பறித்து தருவாரா சித்தராமையா என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

