நான்கு தமிழ் இளைஞர்களின் உயிர்த் தியாகத்தால் விளைந்த மொழிப் போராட்டம், கர்நாடகத் தமிழர்களால் மறக்க முடியாத நிகழ்வாக நிலைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயலில் 1982-ஆம் ஆண்டு ஜூலை 5,6,7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தாய்மொழியாம் தமிழ் மொழிக் காக்கும் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் நான்கு பேர் உயிர்த் தியாகம் செய்த வரலாற்று நிகழ்வு கர்நாடகத் தமிழர்களால் மறக்க முடியாத, காலத்தால் அழிக்கமுடியாத நிகழ்வாகும்.
1956, நவ.1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கர்நாடகத்தில் காலாகாலமாக வாழ்ந்துவந்த தமிழர்கள் மொழிச் சிறுபான்மையாகினர். இதன் தொடர்ச்சியாக, கர்நாடகத்தில் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை, வாழ்வாதாரத்தை, பேச்சுரிமையை, அரசியல் அங்கீகாரத்தை, தாய்மொழி உரிமையை, குடிமை உரிமையை தற்காத்துக்கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. கர்நாடகத்தில் அப்போதும் இப்போதும் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது.
அந்தக் காலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறும் நோக்கில், பள்ளிகளில் முதல்பாடமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்கும் போக்கு கன்னடர்களிடம் அதிகரித்தவண்ணம் இருந்தது. இதுதவிர, ஹிந்தி மொழி மீதான மோகமும் கன்னடர்களிடையே அதிகளவில் காணப்பட்டது. சம்ஸ்கிருதமும், ஹிந்தியும் கன்னடத்தை கபளீகரம் செய்வதை கவனித்த கன்னட ஆர்வலர்கள், கன்னட மொழிக்கு முக்கியத்துவத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அதன்விளைவாக, கன்னட மொழி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கு கல்வி அறிஞர் முன்னாள் துணைவேந்தர் வி.சி.கோகாக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அனைத்து அரசு பள்ளிகளிலும் கன்னட மொழியை முதல் பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும். வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கன்னடம் படித்தால் மட்டுமே அரசு வேலை போன்ற பரிந்துரைகளை அக் குழு அளித்திருந்தது.
இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட அப்போதைய குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதை உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டு, அதற்கான பணியைத் தொடங்கியது. இதனால் தமிழ்மொழியை முதல் பாடமாக எடுத்து படித்து வந்த தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், உருது, மராத்தி மொழியைப் படித்துவந்த மாணவர்களுக்கும் தாய்மொழிக் கல்வி மறுக்கப்பட்டது. இதனால் கிளர்ந்தெழுந்த தமிழர்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியில் படிப்பதற்கு தடைக்கல் ஏற்பட்டதை சகித்துக்கொள்ள முடியாமல் தவித்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் கோலார் தங்கவயலில் ஜிம்கானா திடலில் கோகாக் அறிக்கையின் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்கக் கோரியும், கோகாக் அறிக்கையை திரும்பப்பெறக் கோரியும் வலியுறுத்தி 1982-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பெங்களூரில் பிரம்மாண்டமானபேரணி நடத்தி, அன்றைய ஆளுநர் கோவிந்த் நாராயண், முதல்வர் குண்டுராவிடமும் மனு அளிக்கப்பட்டது.
பின்னர், கப்பன்பூங்காவில் தமிழர்களின் எழுச்சி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கோலார் தங்கவயலில் ஜூலை 1-ஆம் தேதி திமுக சார்பில் கோகாக் அறிக்கையை திரும்பப்பெற கோரி கூட்டம் நடத்தப்பட்டது. இது கோலார்தங்கவயல் இளைஞர்கள், மாணவர்களிடையே பெரும் எழுச்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 5-ஆம் தேதி கோலார் தங்கவயலில் ஆயிரக்கணக்கில் திரண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ்மொழிக் கல்வி பாதுகாக்கக் கோரி ஊர்வலம் நடத்தினர்.
நகரின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சிலை அருகே வந்தபோது, ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், கூட்டத்தைக் கலைக்க மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுவீசினர். இதில் சின்னாபின்னமாகச் சிதறி ஓடிய மாணவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த போலீஸார், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
தங்கம் விளைந்த கோலார் தங்கவயல் நகரமே கலவரக்காடானது. என்.டி.பிளாக் பகுதியைச் சேர்ந்த மாணவர் பரமேஷ், போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு முதல் பலியானார்.
கோலார் தங்கவயலில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. சாம்பியன்ரீஃப் பகுதியில் மோகன் என்பவர் மார்பைத் திறந்து காட்டி சுடு என்று வீராவேசமாக கூறிய வேகத்தில், அவரது மார்பை போலீஸாரின் குண்டு துளைத்ததில் நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, பால்ராஜ், உதயகுமார் போன்ற இளைஞர்களும் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்தில் போலீஸாரின் தடியடி, துப்பாக்கிச்சூட்டில் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜூலை 7-ஆம் தேதி கோலார் தங்கவயலில் மாணவர் போராட்டம் ஓய்ந்தது.
ஆனால், தமிழ் மொழிக்காக நான்கு தமிழ் இளைஞர்கள் செய்த உயிர்த் தியாகம் இன்னமும் கோலார் தங்கவயல் மக்களின் மனங்களை வேதனையால் துடிக்கவைப்பதோடு, கண்களில் கண்ணீர் கசியவிடும் நினைவுகளாக நிலைத்திருக்கின்றன. ஜூலை 5-ஆம் தேதி பிறந்தால் கர்நாடக தமிழர்களின் நினைவலைகளில் மொழிப்போர் வரலாற்று நிகழ்வுகள் நிழலாடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. உயிர்த் தியாகம் செய்தும் தமிழ்மொழியைக் காப்பதில் கர்நாடகத் தமிழர்கள் வெற்றி பெறவில்லை.
சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் தங்களின் மொழி உரிமையைப் பெற முடியாத நிலை 36 ஆண்டுகளாக நீடித்துவருவது வேதனை தருவதாக மொழி ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோலார் தங்கவயலின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 5,6,7 ஆகிய 3 நாள்களிலும் தமிழ் அமைப்புகளால் வீரவணக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தாய்மொழி உரிமையைப் பெறுவதில் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நான்கு தியாகிகளின் வீரவணக்க நாள், கர்நாடக தமிழர்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்தும் என்று தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

