தில்லியில் முழங்கிவந்த கர்நாடகத்தின் குரல் எச்.என்.அனந்த்குமார்
இந்தியாவின் அரசியல் குவிமையமாக திகழும் தில்லியில் கர்நாடகத்தின் குரலாக முழங்கி வந்தவர் மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமார்.


இந்தியாவின் அரசியல் குவிமையமாக திகழும் தில்லியில் கர்நாடகத்தின் குரலாக முழங்கி வந்தவர் மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமார்.
கர்நாடக அரசியல்வானில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடாவுக்கு பிறகு மத்தியில் நடைபெறும் ஆட்சியில் கோலோச்சியவர் மறைந்த மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமார். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ், ஜனதா கட்சி, பாஜக அரசுகளில் ஏராளமானோர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். ஆனால், அவர்களில் தனித்து செயல்பட்டவர் மட்டுமல்லாது, கர்நாடகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னணியில் இருந்தவர் அனந்த்குமார். தில்லியில் அமர்ந்துகொண்டு கர்நாடகத்தை சிந்தித்தால் நினைவுக்கு வரும் தலைவராக அனந்த்குமார் புகழ்பெற்று விளங்கினார். அனந்த்குமாரின் அரசியல் ஆளுமையை காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் பெருமை பொங்க வர்ணிக்கிறார்கள். அத்தனை சிறப்புக்கு சொந்தக்காரரான அனந்த்குமார், அனைவரிடமும் எளிமையாகப் பழகக்கூடியவர், தனிமனித ஒழுக்கத்தில் எள்ளளவும் பிறழாதவர், அரசியலில் அறநெறியை தீவிரமாகக் கடைப்பிடித்தவர், தேர்ந்த நிர்வாகி, அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக விளங்கியவர்.
ஆரம்ப வாழ்வு:
வடகர்நாடகத்தின் ஹுப்பள்ளியில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்த எச்.என்.நாராயணசாஸ்திரி மற்றும் கிரிஷா சாஸ்திரி தம்பதிக்கு 1959-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி மகனாகப் பிறந்தவர் எச்.என்.அனந்த்குமார். ஹுப்பள்ளியில் உள்ள கே.எஸ்.கலைக் கல்லூரியில் பி.ஏ. படித்தபிறகு, மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ்.சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்றார்.
பொது வாழ்க்கை
இளம் வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஈடுபாடு கொண்டு, அதில் பயிற்சி பெற்று வந்த அனந்த்குமார், கல்லூரி காலங்களில் அதன் துணை அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தில் ஆர்வமாக பங்காற்றத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டதால் 40 நாள்கள் சிறைவாசத்தையும் அனுபவித்தார். இந்த காலகட்டத்தில் இவரது துடிப்பான செயல்பாட்டை கவனித்த மூத்தத் தலைவர்கள், அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் மாநிலச் செயலாளராக 1977-ஆம் ஆண்டு நியமித்தனர். கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைத் தொடங்குவதில் தீவிரப் பங்காற்றிய அனந்த்குமார், 1985-இல் அந்த அமைப்பின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அரசியல் களம்
10 ஆண்டுகாலம் அகில பாரதவித்யார்த்தி பரிஷத்தில் பணியாற்றிய அனுபவத்தில் தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கோடு 1987-ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதே ஆண்டில் கர்நாடக மாநில இளைஞர் அணியின் தலைவராக அனந்த்குமார் நியமிக்கப்பட்டார். பாஜகவின் ஆரம்பகாலம் என்பதால் கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்த்தெடுத்தார். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பிரஹலாத்ஜோஷி, கே.எஸ்.ஈஸ்வரப்பா போன்ற மாநில பாஜக தலைவர்களுடன் இணைந்து கட்சியைப் பலப்படுத்தினார். 1996-ஆம் ஆண்டு கட்சியின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது, பாஜகவின் தேசியத் தலைவர்களான அடல்பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்ற தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். 1996-ஆம் ஆண்டு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்தித்த பாஜக, பெங்களூரு தெற்கு தொகுதியில் முதல்முறையாக 37 வயதான அனந்த்குமாரை களமிறக்கியது. முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்வர் ஆர்.குண்டுராவின் மனைவி வரலட்சுமியை எதிர்த்துப் போட்டியிட்டு 251,235 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இணையதளம் குறித்த விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் தனது சாதனைகளை மக்களுக்குத் தெரிவிக்கவும், மக்களின் குறைகளை கேட்டறியவும் 1998-ஆம் ஆண்டு தனக்கென தனியாக இணையதளம் தொடங்கினார். அதே ஆண்டில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில் மீண்டும் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.சர்மாவை காட்டிலும் 1,80,047 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது, அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக கூட்டணி அரசில் அனந்த்குமார் பயணிகள் விமானத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். வாஜ்பாய் அமைச்சரவையில் இளம் வயதில் (39 வயது) அமைச்சராகப் பணியாற்றியவர் அனந்த்குமார். அதன்பிறகு, 1999-ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் அதேதொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அனந்த்குமார் சுற்றுலா, விளையாட்டு, இளைஞர் நலம், கலாசாரம், நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு போன்ற துறைகளின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். தன்னலமில்லா மக்கள் பணியால் தொடர்ந்து 3 மக்களவைத் தேர்தல்களில் வென்ற அனந்த்குமார், 2003-ஆம் ஆண்டு கர்நாடக மாநில பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2004-இல் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. அதேபோல, அதே ஆண்டில் நடந்த மக்களவை பொதுத்தேர்தலிலும் கர்நாடகத்தில் அதிக இடங்களில் பாஜக வென்றது. இதற்காக அனந்த்குமார் கடுமையாக உழைத்திருந்தார். 2004-இல் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அனந்த்குமார், மத்தியபிரதேசம், பிகார், சத்தீஸ்கர், தென்கிழக்கு மாநிலங்களில் கட்சி பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
இதனிடையே, 2009, 2014-ஆம் ஆண்டுகளில் தேர்தல்களிலும் அதேதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் மக்களவைத் தேர்தலை பாஜக எதிர்கொண்டபோது, பெங்களூரு தெற்கு தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேணியைவிட 2,28,575 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வரலாற்று சிறப்புவாய்ந்த வெற்றியைப் பெற்றார். 1996 முதல் 2014-ஆம் ஆண்டுவரை நடந்த அனைத்து மக்களவைத் தேர்தலிலும் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு, தொடர் வெற்றிகளை குவித்ததோடு தொடர்ந்து 22 ஆண்டுகளாக எம்பியாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். 2014-இல் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசில் அனந்த்குமார், ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று திறம்படப் பணியாற்றினார்.
சாதனைகள்
விவசாயிகளின் உரத் தேவையை நிறைவு செய்ய பல்வேறு புதுமையான திட்டங்களை கொண்டுவந்தார். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் மக்கள் மருந்தகங்களை நாடு முழுவதும் தொடங்கினார். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது பெங்களூருவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கவும், மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கவும் ஒப்பந்தங்களை கையெழுத்திட வைத்தார். பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தைத் தொடங்க முன்மொழிவுகளை தயார் செய்யக் காரணமாக இருந்தார். காவிரி ஆற்றில் இருந்து பெங்களூருவுக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற கருவியாகப் பங்காற்றியுள்ளார்.
2012-ஆம் ஆண்டில் நடந்த ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்ற அனந்த்குமார், முதல்முறையாக கன்னடத்தில் பேசி தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பெங்களூருவின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் எண்ணற்றத் திட்டங்களை, நிதி ஆதாரங்களை கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றினார். பெங்களூரு மாநகராட்சி தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாலங்கள், சாலை தடுப்புகள், மழைநீர் கால்வாய்கள் அமைக்க ஹட்கோ நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.1000 கோடி கடன் பெற உதவியாக இருந்திருக்கிறார். பெங்களூருவில் தூய்மை மற்றும் பசுமை நகரத் திட்டத்தைத் தொடங்கினார்.
தன்னார்வத் தொண்டு நிறுவனம்:
தனது மனைவி தேஜஸ்வினி தலைமையில் அதம்யசேத்தனா அறக்கட்டளை என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை 1998-ஆம் ஆண்டு தொடங்கிய அனந்த்குமார், அதன்மூலம் 2003-ஆம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள 300 அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார். இந்த திட்டத்தின் கீழ் தினமும் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. பெங்களூருவில் மரம் நடும் வழக்கத்தை தொடங்க ஒரு மனிதன் ஒரு மரம் நடும் திட்டத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தினார். ரசாயன உரம் கலக்காத இயற்கை வேளாண்மை முறையை விவசாயிகளிடையே பிரபலமாக்கினார். மேலும் குப்பையை சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் அழித்து பயனுள்ள பொருள்கள், மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். 2016-ஆம் ஆண்டு முதல் ஆங்காங்கே மரங்களை நடுவதற்காக பசுமை ஞாயிறு திட்டத்தை தொடங்கி, திறம்பட அமல்படுத்தி வந்தார். இதில் தனியார் கல்வி நிறுவனங்களையும் ஈடுபடுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...