மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமார் மறைவு: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய ரசாயனத் துறை அமைச்சர் எச்.என்.அனந்த்குமார், சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை

News image
மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மறைவுக்கு, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்த பாஜக எம்.பி. பிரஹலாத் ஜோஷி மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
Updated On :12 நவம்பர் 2018, 10:10 pm

DIN


புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய ரசாயனத் துறை அமைச்சர் எச்.என்.அனந்த்குமார், சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
அனந்த்குமாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, அனைத்துக் கட்சி தலைவர்கள், பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் செவ்வாய்க்கிழமை அரசு மரியாதையுடன் தகனம்
செய்யப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த எச்.என்.அனந்த்குமார் (59), கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். பெங்களூரு, பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசிய கூட்டத்தில் பங்கேற்றிருந்த அனந்த்குமார், அவரது உரையை கன்னடத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். அப்போது கடுமையான இருமலால் அவதிப்பட்டதை அனைவரும் காண நேர்ந்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பொதுவான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு பெங்களூரு, பசவனகுடியில் உள்ள சங்கரா புற்றுநோய் மருத்துவமனையில் செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் அனந்த்குமாரின் நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் நகரங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனளிக்காததைத் தொடர்ந்து, 25 நாள்கள் முன்பு பெங்களூருக்குத் திரும்பிய அனந்த்குமார், சங்கரா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர்ந்தார். ஆனாலும் புற்றுநோய் உடலின் பல்வேறு அவையங்களுக்கு பரவியது. இந்த நிலையில், திங்கள்கிழமை (நவ.12) அதிகாலை 2 மணிக்கு சிகிச்சை பலனின்றி அனந்த்குமார் உயிரிழந்தார். அந்த தருணத்தில் அவரது மனைவி தேஜஸ்வினி, மகள்கள் ஐஸ்வர்யா, விஜேதா ஆகியோர் உடனிருந்தனர்.
தலைவர்கள் இரங்கல்: மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கண்ணீர் அஞ்சலி: பெங்களூரு, பசவனகுடியில் லால்பாக் சாலையில் உள்ள அவரது சுமேரா இல்லத்தில் எச்.என்.அனந்த்குமாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் வஜுபாய் வாலா, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கெளடா, மாநில நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தினேஷ் குண்டுராவ், மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத், சட்டமேலவை இடைக்காலத் தலைவர் பசவராஜ் ஹோரட்டி, சுத்தூர் மடத்தின் பீடாதிபதி சிவராத்திரேஸ்வர தேசிகேந்திர சுவாமிகள், நடிகர்கள் அம்பரீஷ், சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ஜக்கேஷ், கணேஷ், ஸ்ரீநாத், நடிகைகள் மாளவிகா, தாரா, ஸ்ருதி, பாஜக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், பாஜக எம்.பி.க்கள் பி.சி.மோகன், பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட ஏராளமானோர் அனந்த்குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து, நேரில் அஞ்சலி செலுத்தினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் அனந்த்குமாரின் இல்லத்தில் திரண்டு, கண்ணீர் மல்க அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக அரசு துக்கம்: அனந்த்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக அரசு, நவ.14-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது. இந்த 3 நாள்களில் நடைபெறவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த நாள்களில் அரசு விழாக்கள், மனமகிழ் நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்டிருக்கும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கர்நாடக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அனந்த்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு: பெங்களூரு, தும்கூரு, கலபுர்கி உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் திங்கள்கிழமை நடக்கவிருந்த தேர்வு அனந்த்குமாரின் மறைவையொட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தும்கூரு பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நவ.20-ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழில்நுட்பக் கல்வித் துறை நடத்தவிருந்த தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது.
இறுதிச்சடங்கு: சுமேரா இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடல், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு அவரது உடல் பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி வளாகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, நண்பகல் 12 மணிக்கு அனந்த்குமாரின் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.
நண்பகல் 1 மணிக்கு சாமராஜ்பேட்டையில் உள்ள மின் மயானத்தில் உடல் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.