பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் வெடித்துள்ள கோஷ்டிபூசலை தீர்த்துவைக்கும்படி முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் சதீஷ்ஜார்கிஹோளி, ரமேஷ்ஜார்கிஹோளி சகோதரர்களின் ஆதிக்கம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இவர்களில் ரமேஷ்ஜார்கிஹோளி, முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர்களை எதிர்த்து மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமிஹெப்பாள்கர் அரசியல் நடத்த முற்பட்டிருக்கிறார். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியை யார் கட்டுப்படுத்துவது என்பதில் ஜார்கிஹோளி சகோதரர்கள் மற்றும் லட்சுமி ஹெப்பாள்கருக்கு இடையே வெளிப்படையான கோஷ்டி மோதல்கள் வெடித்துள்ளன. லட்சுமிஹெப்பாள்கரை ஆதரிப்பதன் மூலம் பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரத்தில் தலையிடுவதாக அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது ஜார்கிஹோளி சகோதரர்கள் கோபத்தில் உள்ளனர். அண்மையில் நடந்த ஆரம்ப நில வள வங்கி தேர்தலின் போது இரு தரப்பினருக்கும் இடையில் நிலவும் கருத்து மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டது. இருதரப்பினரின் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபடும் நிலைக்கு நிலைமை மோசமானதை உணர்ந்த கட்சி மேலிடம், இப்பிரச்னையில் தலையிட முற்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் சனிக்கிழமை நடந்தபோது கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் இருதரப்பினரின் கருத்து வேறுபாடு மீண்டும் வெடித்தது. ஜார்கிஹோளி மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கே.சி.வேணுகோபால் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். அது சாத்தியமாகாத நிலையில், அந்தக் கூட்டத்தை சிறிது நேரம் தள்ளிவைத்தார் வேணுகோபால். லட்சுமி ஹெப்பாள்கருக்கு ஆதரவாக செயல்பட்டால், கட்சியைத் துறக்கவும் தயங்கமாட்டோம் என்று ஜார்கிஹோளி சகோதரர்கள் கட்சித் தலைவர்களை எச்சரித்தனர்.
இதுகுறித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் விவாதித்த கே.சி.வேணுகோபால், நடந்ததை எடுத்துக் கூறியிருக்கிறார். இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்கும்படி முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டார். ஜார்கிஹோளி சகோதரர்கள் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்கள் என்பதை உணர்ந்துள்ள கட்சி மேலிடம், அந்தப் பிரச்னையை அவரையே தீர்த்துவைக்க உத்தரவிட்டுள்ளது. வட்ட ஊராட்சி, மாவட்ட ஊராட்சி, ஆரம்ப நில வள வங்கி தேர்தல்களில் தன்னை அலட்சியப்படுத்தி ஓரங்கிகட்டியதாக ஜார்கிஹோளி சகோதரர்கள் மீது லட்சுமி ஹெப்பாள்கர் கட்சி மேலிடத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை சித்தராமையாவை ரமேஷ்ஜார்கிஹோளி சந்தித்துப் பேசினார். ரமேஷ்ஜார்கிஹோளியை சமாதானப்படுத்திய சித்தராமையா, ஐரோப்பா நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு செப்.15-க்கு பெங்களூரு திரும்பும்வரை கோஷ்டிபூசலால் ஏற்பட்டுள்ள விரிசலை அதிகமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். கோஷ்டிபூசல் வளர்ந்தால் அது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பாதகமாக முடியும் என்று கூறியுள்ள சித்தராமையா, ஐரோப்பிய சுற்றுப் பயணத்துக்குப் பிறகு பிரச்னையைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

முதியவா் கல்லால் தாக்கி கொலை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

