கார் தீ விபத்தின்போது தடுப்பு நடவடிக்கைகளை துரித கதியில் செயல்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறையின் செய்திப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப் படைத் தளத்தில் கார் தீ விபத்து நேர்ந்த இடத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது, இந்திய விமானப் படை, மாநில தீயணைப்பு சேவைகள், மாநில காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சருக்கு விளக்கப்பட்டது. வாகன உரிமையாளர்கள் காப்பீடு வசதிகளைப் பெற செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மண்டல போக்குவரத்து அலுவலக உதவி மையத்தில் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இருக்க மத்திய அமைச்சர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
வாகன நிறுத்தத்தில் தீ வேகமாகப் பரவாமல் தடுக்க விமானப் படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத் தொழில் கண்காட்சியின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு மையத்தின் துரித நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சருக்கு விளக்கப்பட்டது. வாகன நிறுத்தப் பகுதியில் மணிக்கு 3 0கி.மீ. வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருந்ததால், தீ வேகமாக பரவியது. பெரும்பாலான வாகனங்கள் காற்று வீசிய திசையில் நிறுத்தப்பட்டிருந்தன. மாநில தீயணைப்புப் படையின் ஒத்துழைப்புடன் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு மைய கட்டளை அதிகாரியின் உத்தரவின்பேரில் 13 தீயணைப்பு வாகனங்கள், 7 நீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள், 33 தீ-நீர் வாகனங்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
இதுதவிர, இந்திய விமானப்படையின் 6 விமான மோதல் தீயணைப்பு வாகனங்கள், தீ பரவாமல் தடுக்க பயன்படுத்தப்பட்டது. 45 நிமிடங்களில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இப் பணிக்கு 3 ஆயிரம் லிட்டர் நுரை பயன்படுத்தப்பட்டது. இதுபோன்ற துரித கதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் விபத்தின் வரம்பு சிறிய இடத்தில் குறுக்கப்பட்டதோடு, பெரிய அளவிலான சேதங்கள் தடுக்கப்பட்டன.
விமானப் படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் வானியல் ஆய்வுமேற்கொள்ளப்பட்டு, தீயை அணைக்க வழிகாட்டுதல் தரப்பட்டது. விபத்துநிகழ்ந்தபோது வாகன நிறுத்தப் பகுதியில் 3 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, வாகன நிறுத்த கருவிகள் விடுவிக்கப்பட்டு பல கார்கள் விபத்தில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் வாகன சேதம் குறைக்கப்பட்டு, தீ பரவுவதும் தடுக்கப்பட்டது. மொத்தம் 278 கார்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 73 கார்கள் பகுதியாக சேதமடைந்துள்ளன. (இதில் 16 தீயால், 57 கண்ணாடி உடைக்கப்பட்டதால்). துரிதகதியில் செயல்பட்டு நிலைமையை சீராக சமாளித்ததால், சனிக்கிழமை மதியம் வழக்கம்போல விமான சாகச நிகழ்ச்சிகள் நடந்தேறின. மேலும், வாகன உரிமையாளர்கள் புகார் அளிக்க உதவி மையங்களும் அமைக்கப்பட்டன. வாகனங்களை நிறுத்த மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டன. வழக்கம்போல கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







