மண்டியா மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடத்துவது தொடர்பாக பல்வேறு மடங்களின் பீடாதிபதிகளுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு விஜயநகரில் உள்ள ஆதிசுன்சுனகிரி மடத்தில் புதன்கிழமை காவிரி, லோகபாவனி, ஹேமாவதிஆறுகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் நடக்கவிருக்கும் கும்பமேளா திருவிழா குறித்த ஆலோசனைகூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா, சுற்றுலாத் துறை அமைச்சர் சா.ரா.மகேஷ், சிறியநீர்ப்பாசனத் துறை அமைச்சர் சி.புட்டராஜூ, போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.சி.தம்மண்ணா, ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், சுத்தூர் மடத்தின்பீடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள் உள்ளிட்ட பல பீடாதிபதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி பேசியது: மண்டியா மாவட்டத்தில் மூன்று ஆறுகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி மைசூரு, மண்டியா மாவட்டங்களில் சாலைகள், அடிப்படை கட்டமைப்புகள் சீரமைக்கப்படும்.
கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த அனைத்து வகையிலான ஒத்துழைப்பையும் மாவட்ட ஆட்சியரகங்களுக்கு அரசு வழங்கும். இந்த விழாவை நடத்துவதற்கு நிதி பற்றாக்குறை எதுவுமில்லை. 156 வட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. கும்பமேளா திருவிழாவுக்கு பிறகு கடவுளின் ஆசியால் மாநிலத்தில் நல்லமழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.
வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.420 கோடி வரை செலவிட்டிருக்கிறோம். உத்தரபிரதேசத்திற்கு சென்று அங்கு கும்பமேளாவுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வுசெய்து,அதைவிடசிறப்பான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








