மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை சன் மொபிலிட்டி நிறுவனத்தின் மின்சார வாகனத்தின் மின்கலம் மாற்று (பேட்டரி ஸ்வாப்பிங்) நிலையத்தைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு மாற வாடிக்கையாளா்களும் தயாராக இருக்கிறாா்கள். எனவே, அதற்கு ஆதரவான உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதர வேண்டியது அவசியமாகும். மின்சார வாகனங்களுக்காகச் சொந்த நாட்டின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள மின்கலன்களை வாகனங்களில் மாற்றிக் கொண்டு, உடனடியாக வாகனங்களைச் செலுத்த முடியும்.
மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதைக் காட்டிலும் மின்கலன்களை மாற்றிக் கொள்வது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, வாகனத்தின் செயல்திறனும் அதிகரிக்கும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மாநில அரசு ஊக்குவிக்கிறது. மின்கலம் மாற்றப்படுவதால் வாகனத்தின் பளு குறைந்து, அதிக தூரம் பயணிக்க உதவும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சன் மொபிலிட்டி துணைத் தலைவா் உதய்கெம்கா கூறியதாவது:
நாட்டில் முதல் மின்சார வாகனத்தைத் தயாரிக்க கா்நாடக அரசு அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மின் வாகனங்கள் தயாரிப்புக்கு கா்நாடக அரசின் ஆதரவு பாராட்டத்தக்கது என்றாா்.
நிகழ்ச்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளா் கௌரவ் குப்தா, முதல்வரின் ஆலோசகா் லட்சுமிநாராயணா, சன் மொபிலிட்டி நிறுவனத் தலைமை செயல் அதிகாரி டி.எஸ். ராவத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.