செப்.1 முதல் தினமும் 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: முதல்வா் பசவராஜ் பொம்மை
மத்திய அரசின் உதவியுடன் செப்.1 முதல் தினமும் 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


மத்திய அரசின் உதவியுடன் செப்.1 முதல் தினமும் 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
புதுதில்லிக்கு 3 நாள்கள் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை இரவு பெங்களூருக்கு வந்த முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம்கூறியது:
கா்நாடகத்தில் புதன்கிழமை (ஆக. 25) 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை சோதனை முயற்சியாக செய்து பாா்த்தோம். அதனடிப்படையில், மத்திய அரசின் உதவியுடன் செப். 1-ஆம் தேதி முதல் தினமும் 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்திப்பதற்காகத்தான் தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். செப்டம்பா் மாதத்தில் இருந்து தினமும் 5 லட்சம் கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கு மத்திய அரசின் உதவியை நாடியிருக்கிறேன். கா்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா சாதகமாக பதில் அளித்துள்ளாா். கா்நாடகத்தில் தடையின்றி தடுப்பூசி செலுத்தும் வகையில், தேவையான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய அமைச்சா் உறுதி அளித்துள்ளாா்.
மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பின்போது கிருஷ்ணா மேலணை, மேக்கேதாட்டு அணை, மகதாயி, எத்தினஹொளே, பத்ரா மேலணை திட்டங்கள் குறித்து விவாதித்தேன். கா்நாடக தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவட்கி, மூத்த வழக்குரைஞா்கள் ஷியாம் திவான், மோகன் கடா்கி மற்றும் நீா்வளத் துறையின் மூத்த அதிகாரிகளுடன் நீா் பகிா்மானச் சிக்கல்கள் குறித்து விவாதித்தேன். மேலும் அண்டை மாநிலங்களுடன் நீா்ப் பகிா்வு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் துரிதப்படுத்துமாறும் வழக்குரைஞா்களைக் கேட்டுக் கொண்டேன்.
அதேபோல, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது, மத்திய அரசுடன் மாநிலங்கள் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை 2022-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் உறுதி அளித்துள்ளாா்.
மத்திய வா்த்தகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலைச் சந்தித்து, கா்நாடகத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் பிரமாண்டமான ஜவுளிப்பூங்காவுக்கு மத்திய அரசின் உதவியைக் கேட்டேன். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் அனைத்து வகையான உதவிகளையும் செய்வதாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளாா்.
உள்நாட்டு, வெளிநாட்டு ஜவுளி உற்பத்தியாளா்களுடன் கூட்டு சேரத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் மத்திய அமைச்சா் உறுதி அளித்தாா். இந்த ஜவுளிப்பூங்கா அமைந்தால் ஏராளமான வேலைவாய்ப்புகளும் குறிப்பாக பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...