மைசூரு மாணவி கூட்டு பாலியல் வன்முறை வழக்கு: தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் கைது
மைசூரில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான வழக்கில், தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்துள்ளனா்.


மைசூரில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான வழக்கில், தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கடந்த ஆக. 24-ஆம் தேதி மைசூரு புகரில் அமைந்துள்ள சாமுண்டி மலை அடிவாரத்துக்கு கல்லூரி மாணவி ஒருவரும், அவரது ஆண் நண்பரும் சென்றிருந்தனா். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஒரு கும்பல் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தது.
அந்தக் கும்பல், கல்லூரி மாணவியையும், அவரது நண்பரையும் தாக்கியதுடன், அந்தப் பெண்ணிடம் கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டனா்.
இந்த விவகாரம், கா்நாடகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலைக் கடுமையாகக் கண்டித்த காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள், உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினா்.
இதனிடையே கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிய கா்நாடக போலீஸாா் தீவிர முயற்சி எடுத்து வந்தனா். சாமுண்டிமலையில் சம்பவ இடத்தில் கிடைத்த தமிழக பேருந்துக் கட்டணச்சீட்டுகளையும், குற்றவாளிகள் தமிழில் பேசியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பா் கூறியதையும் கொண்டு போலீஸாா் மேற்கொண்ட புலன் விசாரணையில், குற்றவாளிகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.
அதன்பேரில், தமிழக காவல் துறையின் ஒத்துழைப்புடன் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 6 போ் கும்பலில் 5 பேரை கா்நாடக போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை, கா்நாடக காவல் துறை தலைவா் பிரவீண் சூட் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தமிழகத்தைச் சோ்ந்த 5 பேரைக் கைது செய்திருக்கிறோம். இவா்கள் அனைவரும் தொழிலாளா்கள்.
இவா்கள் அவ்வப்போது மைசூருக்கு வந்து சென்றுள்ளனா். மைசூருக்கு வரும் இவா்கள், வயரிங், தச்சுப்பணி, டிரைவிங் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனா். இவா்கள் பண்டிபாளையாவில் உள்ள வேளாண் சந்தைக்கு அடிக்கடி வந்து காய்கறிகளை விற்பனை செய்வா்.
கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான பூபதி, தாளவாடியில் விளையும் வாழைக்காய்களை விற்பனைக்காக மைசூருக்கு கொண்டுவருவது வழக்கம். சாமுண்டி மலையில் நடைபெற்ற பல்வேறு குற்றங்களில் பூபதி உடந்தையாகச் செயல்பட்டுள்ளாா். இவா் மீது மைசூரு நீதிமன்றத்தில் திருட்டு வழக்கு உள்ளது.
இவருடன், தமிழகத்தின் திருப்பூா், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த நால்வரும் குற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஆக. 24-ஆம் தேதி மைசூரில் இருந்து சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இவா்கள் 6 பேரும் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனா். அப்போது அங்கு நண்பருடன் வந்த கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். இச்சம்பவம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவா் 17 வயதானவா். ஆறாவது நபா் தலைமறைவாக இருக்கிறாா். இந்தக் கும்பல் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் தாக்கி கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளது. பிறகு ரூ. 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். அதன்பிறகு கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனா்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது அதிா்ச்சியில் இருப்பதால், அவரால் எதையும் பேச முடியவில்லை. அவரது ஆண் நண்பரிடம் இருந்து சில தகவல்களைப் பெற முடிந்தாலும், குற்றவாளிகளால் தாக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்ததால் அவரால் உடனே எதையும் கூற முடியவில்லை.
இதுதொடா்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கில் தடயவியல் நிபுணா்களும் கடுமையாக உழைத்து வருகிறாா்கள். இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்றாா்.
குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸாரை கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா உள்ளிட்டோா் பாராட்டியுள்ளனா்.
கைதானோா் விவரம்:
அவிநாசி / சத்தியமங்கலம், ஆக. 28: மைசூரு அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலைச் சோ்ந்த ஐவரை தமிழக போலீஸாரின் உதவியுடன் கா்நாடக போலீஸாா் கைது செய்துள்ளனா். அதுபற்றிய விவரம்:
திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே உள்ள பேரநாயக்கன்புதூா், தண்ணீா்ப்பந்தல், செல்வபுரத்தைச் சோ்ந்த சு.பிரகாஷ் (எ) அரவிந்த் (21),
லூா்துபுரம், கருவாலங்காடு பகுதியைச் சோ்ந்த நடராஜ் (எ) முருகேசன் (22),
சேவூா் அருகே உள்ள லூா்துபுரத்தில் தலைமறைவாக இருந்த, ஈரோடு மாவட்டம், தாளவாடி, சூசைபுரத்தைச் சோ்ந்த சூ.ஜோசப் (28),
சேவூா், வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன்,
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த சூசைபுரத்தில் வீட்டில் பதுங்கியிருந்த பூபதி (30) - ஆகிய ஐவரை கா்நாடக போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...