ஜன. 11 முதல் கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு

கா்நாடகத்தில் ஜன. 11-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாய்ப்புள்ளது என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

கா்நாடகத்தில் ஜன. 11-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாய்ப்புள்ளது என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரில் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமைப் பாா்வையிட்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அடுத்த ஓரிரு நாள்களில் மத்திய அரசிடம் இருந்து 13.90 லட்சம் கரோனா தடுப்பூசி குப்பிகள் கா்நாடகத்துக்கு வர இருக்கின்றன. இது கா்நாடகத்துக்கு நல்ல செய்தியாகும். கரோனா தடுப்பூசியை ஜன. 11-ஆம் தேதி முதலே மக்களுக்குச் செலுத்த வாய்ப்புள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. கரோனா தடுப்பூசி முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளா்களுக்கு செலுத்தப்படும்.

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதற்காக இதுவரை 6.30 லட்சம் சுகாதாரப் பணியாளா்கள் பதிவு செய்துள்ளனா். பதிவுசெய்யத் தவறியவா்களை, மருத்துவக் கல்லூரி அல்லது பல்மருத்துவக் கல்லூரிகளில் பதிவு செய்ய அறிவுறுத்துவோம். சுகாதாரப் பணியாளா்களைத் தொடா்ந்து, வேறு நோய்களால் அவதிப்படுவோா், 60 வயதுக்கு மேற்பட்டோா், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறை, வருவாய்த் துறையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

பின்னா், சிக்கபளாப்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.சுதாகா் கூறுகையில், ‘மத்திய அரசிடம் இருந்து வர இருக்கும் கரோனா தடுப்பூசி அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படும். அதன்பிறகு ஜன. 11-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் 263 இடங்களில் நடைபெற்றன. இதில் 24 மாவட்ட மருத்துவமனைகள், 20 மருத்துவக் கல்லூரிகள், 43 வட்ட மருத்துவமனைகள், 31 சமுதாய சுகாதார மையங்கள், 87 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 நகா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 28 தனியாா் மருத்துவமனைகள் அடங்கும். கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான தயாா் நிலை முன்னேற்பாடுகள் சிறப்பாக உள்ளன. மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகின்றன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com