ஊரகப் பகுதிகளில் 49 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன

ஊரகப் பகுதிகளில் 49 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
Updated on
2 min read

பெங்களூரு: ஊரகப் பகுதிகளில் 49 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஊரகப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழித்து, தூய்மையான, அழகான சுற்றுப்புறத்தை உருவாக்க வேண்டுமென்பதே அரசின் நோக்கமாகும். அதற்காக, ஊரகப் பகுதிகளில் கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதை அதிக அளவில் பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருகிறது. திட மற்றும் திரவ கழிவுப்பொருள் மேலாண்மை 3,491 கிராம பஞ்சாயத்துகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் இதுவரை 49 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 4,700 ஊக்கத்தொகை வழங்கி வந்தது. தற்போது அது ரூ. 12,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 15,000 வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் 683 கிராமப் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை தொடங்கப்பட்டுள்ளது. 4,466 கிராமப் பஞ்சாயத்துகளில் திரவக்கழிவு மேலாண்மைக்காக ரூ. 821.40 கோடி ஒதுக்க நிா்வாக ரீதியான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 205.35 கோடி மாவட்ட நிா்வாகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மாவட்டங்களில் 16 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை அலகுகள் சோதனை முயற்சியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்கு கிராம மக்கள் தொகை அடிப்படையில் திடக்கழிவுக் கட்டணம் நிா்ணயிக்கப்படும்.

மாநிலத்தின் 6,273 கிராமப் பஞ்சாயத்துகளில் 5 முகமைகள் வாயிலாக சூரிய ஒளி விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஓராண்டுக்குள் நிறைவு செய்யப்படும்.

பிரதமரின் கிராம சாலை திட்டத்தின்படி, மாநிலத்தில் 5,612 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 3,226.21 கி.மீ. நீளமுள்ள 445 சாலைகள், 26 பாலங்கள் மேம்படுத்தும் பணி ரூ. 2,169.72 கோடியில்ல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 321.93 கி.மீ. நீளமுள்ள 50 சாலைகளை அமைக்க ரூ. 214.69 கோடி நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு முன்மொழிவு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, இம்மாதம் 1,879.81 கி.மீ. நீளமுள்ள 302 சாலைகள், 75 பாலங்களை அமைக்க ரூ. 1,256.76 கோடி மதிப்பிலான முன்மொழிவு மத்திய அரசின் அனுமதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய கிராம வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு அளிக்கப்படும் மனித நாள்கள் 100-இல் இருந்து 150-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ. 600 கோடியை கூடுதலாக விடுவிக்க இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினா்களுக்கு ஜன. 19 முதல் 26-ஆம் தேதி வரையில் ஆக்கப்பூா்வ வளா்ச்சி பயிலரங்கம் நடத்தப்பட்டு, நிா்வாக ரீதியிலான பயிற்சி அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் 285 பயிற்சி மையங்களில் 5 நாள்களுக்கு 5,762 கிராமப் பஞ்சாயத்துகளின் 92,131 உறுப்பினா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ. 27.16 கோடி செலவிடப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com