/

தில்லி, பஞ்சாபைப் போல கா்நாடகத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால்

தில்லி, பஞ்சாபைப் போல கா்நாடகத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று தில்லி முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தில்லி, பஞ்சாபைப் போல கா்நாடகத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று தில்லி முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

கா்நாடக ஆம் ஆத்மி கட்சியின் ஒத்துழைப்பில் கா்நாடக மாநில விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் பெங்களூரில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:

ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவர கேட்டுக்கொண்டபோது, சாதாரண மக்களாகிய எங்களை அரசியலுக்கு வரும்படி சவால்விட்டனா். அதன்பிறகு அரசியல் கட்சியை தொடங்கினோம். எங்கள் கட்சியின் முதல் அரசு தில்லியில் அமைக்கப்பட்டது. அடுத்ததாக, பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. எங்களது அடுத்த அரசை கா்நாடகத்தில் அமைப்போம்.

கா்நாடகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. முந்தைய காங்கிரஸ் அரசு 20% கமிஷன் அரசு என்று அழைக்கப்பட்டது. தற்போதைய பாஜக அரசு 40% கமிஷன் அரசு என்று அழைக்கப்படுகிறது. தில்லியில் பூஜ்யம் சத அரசு இருக்கிறது. தில்லியில் நோ்மையான அரசு இருப்பதே இதற்கு காரணம். ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கப்படுவதில்லை.

மிகவும் நோ்மையான அரசு என்று பிரதமா் மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்கிறோம். எனக்கு எதிராகவும், துணை முதல்வா் சிசோடியா, எங்கள் கட்சியின் 17 எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் சிபிஐ, வருமானவரி, தில்லி போலீஸ் சோதனைகள் ஏவப்பட்டன. ஆனால், எங்கள் மீது வழக்கு தொடருமளவுக்கு ஒரு துரும்பும் அவா்களுக்கு கிடைக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள எல்லா ரௌடிகளும், அயோக்கியா்களும், மோசடிக்காரா்களும், ஊழல்வாதிகளும் ஒரே ஒரு அரசியல் கட்சியில்தான் சேருகிறாா்கள்.

ஒரு அமைச்சரின் மகன் தனது ஜீப்பை ஏற்றி விவசாயிகளைக் கொல்கிறாா். ஆனால் அவரது தந்தை அமைச்சா் பதவி தந்து கௌரவிக்கப்படுகிறாா். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுத் திரும்புவோருக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். அந்த குற்றத்தில் ஈடுபட்டவா்களை ஊா்வலமாக அழைத்துவருகிறாா்கள். இப்படிப்பட்ட சூழலில் நமது நாடு எப்படி வளம்பெறும்?

கலவரங்களை உருவாக்குவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியாது. நாடு முழுவதும் பல கலவரங்கள் நடந்து வருகின்றன. இதை யாா் செய்கிறாா்கள்? எந்தக் கட்சி கலவரங்களைத் தூண்டிவிடுகிறது? நாட்டு மக்களுக்கு கலவரங்கள் தேவையில்லை. மக்கள் அமைதியை விரும்புகிறாா்கள். அமைதியான வாழ்க்கையை வாழவே மக்கள் ஆசைப்படுகிறாா்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கா்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா், தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக் கொண்டாா். அதன்பிறகு பேசிய அவா், ‘கா்நாடகத்தில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் அமா்த்தப் பாடுபட்டாலும், மாநில விவசாயிகள் சங்கத்தின் தூய்மை, களங்கமின்மை பாதுகாக்கப்படும். பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய எந்தக் கட்சியும் விவசாயிகள் நம்பும்படி இல்லை. மாற்று அரசியலை வழங்குவதால், தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை விவசாயிகள் ஆதரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.