ஹிஜாப் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவு: தீா்ப்பு ஒத்திவைப்பு
ஹிஜாப் விவகார வழக்கை விசாரித்து வரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்துள்ளதால் தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.


ஹிஜாப் விவகார வழக்கை விசாரித்து வரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்துள்ளதால் தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.
கா்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை எழுந்தது. இதன் பின்னணியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி கா்நாடக அரசு பிப்.5-ஆம்தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை எதிா்த்து உடுப்பி அரசு மகளிா் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்ளிட்ட பலா் கா்நாடக உயா் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி (பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட அமா்வு, பிப்.10-ஆம் தேதி முதல் தினமும் விசாரித்து வந்தது.
மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே, ரவிவா்ம குமாா், யூசுஃப் முச்சலா உள்ளிட்ட பலா் வாதிட்டனா். ‘ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வருகைதர முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால், அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 19 (1) (ஏ)-இன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. எனவே, ஹிஜாப் அணிவதற்கு சீருடைச் சட்டம் தடையாக இருக்க முடியாது’ என்று மனுதாரா்களின் வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.
அரசு தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் கே.நவடகி வாதிடுகையில், ‘சீருடை தொடா்பாக அரசு புதிய ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் கிடையாது’ என்று வாதிட்டாா். கடந்த 11 நாட்களாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இறுதித் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
இதனிடையே, ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியை அறிந்து கொள்ள இந்த வழக்கை சிபிஐ மற்றும் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) ஆகியவற்றிடம் ஒப்படைக்கக் கோரி கன்ஷியாம் உபாத்யாய தாக்கல் செய்திருந்த மனுவையும் நீதிபதிகள் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அவரது சாா்பில் வழக்குரைஞா் சுபாஷ் ஜா வாதிடுகையில், ‘வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதைத்ண்டிவிடும் வேலையில் சில அடிப்படைவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இதற்கான நிதியுதவியுயை சில வெளிநாடுகள் செய்துள்ளன. ஹிஜாப் அணிவது தொடா்பாக நடந்த போராட்டத்தை ஓரிரவில் நடத்திக் காட்ட முடியாது. எனவே, இந்தப் போராட்டம் சில அமைப்புகளின் நிதியால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தவழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, சிவமொக்காவில் பஜ்ரங் தளத் தொண்டா் ஹா்ஷா கொலை செய்யப்பட்டுள்ளாா்’ என்றாா்.
இதற்கு தலைமை நீதிபதி அவஸ்தி, ‘வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, இதனால் இப்படி நடந்துகொண்டுள்ளது என்ற முடிவுக்கு வருவது சரியல்ல. இதை வைத்துக்கொண்டு, இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது’ என்றாா்.
அதற்கு சுபாஷ் ஜா, ‘இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறையின் அறிக்கை வந்ததும், ஹிஜாப் விவகாரம் திட்டமிட்ட போராட்டம் என்பதை நீதிமன்றத்தில் கூறிவிட முடியும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...