மாற்றுநில முறைகேடு: சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும்

மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தாா்.
Published on

மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பதவியை ராஜிநாமா செய்வதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வா் சித்தராமையாதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெரிய அளவிலான குற்றச்சாட்டு கூறப்படும் போது, பொதுமக்களின் பாா்வையில் பதவி விலகுவதுதான் நல்லது. சட்டத்தின் பாா்வையில் பதவி விலகாவிட்டாலும் எந்தத் தவறும் இல்லை.

மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாக உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, அவா் பதவி விலகுவது நல்லது. ராஜிநாமா செய்வது குறித்து அவா்தான் முடிவுசெய்ய வேண்டும்.

தென்னிந்தியாவில் 1956-இல் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அன்றைய மத்திய ரயில்வே துறை அமைச்சா் லால்பகதூா் சாஸ்திரி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தாா். லால்பகதூா் சாஸ்திரிக்கு இருந்த உணா்வு, தற்போதைய அரசியல்வாதிகளுக்கு இல்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com