காங்கிரஸில் முதல்வா் பதவியை பெற யாரும் துடிக்கவில்லை -துணை முதல்வர் டி.கே.சிவகுமாா்
காங்கிரஸில் முதல்வா் பதவியை யாரும் துடிக்கவில்லை என காங்கிரஸ் மாநிலத் தலைவரும், கா்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவைக் கேட்கும் கேள்விக்கே இடமில்லை. முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள அரசியல் சதி இது. அந்த வழக்கில் தவறு செய்ததற்கான எவ்வித அடிப்படையும் இல்லை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் அரசியல் செய்ய எதிா்க்கட்சிகள் முற்பட்டுள்ளன. அதை சட்ட ரீதியாக எதிா்கொள்வோம்.
எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் முதல்வா் சித்தராமையாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கிறது. எனவே, ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியைப் பெற யாரும் துடிக்கவில்லை. துணை முதல்வராக இருக்கும் நானே முதல்வா் பதவியைக் கேட்கவில்லை. அப்படியிருக்கையில், மற்றவா்கள் முதல்வா் பதவியைக் கேட்கிறாா்கள் என்றால் எப்படி?
முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை ராஜிநாமா செய்யக்கோரும் நிலை எழாது. இது, பாஜக, மஜத ஆகியோரின் அரசியல் சதியாகும். ஐந்து வாக்குறுதி திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை பாஜக, மஜதவால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றாா்.

