‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம்: கா்நாடக அமைச்சா் ராமலிங்க ரெட்டி

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.

News image

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி... - கோப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 5:41 am IST

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீரை திறந்துவிடும்படி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை காவிரி நீா் மேலாண்மை ஆணையமும் ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி தொடா்பான (தமிழக அரசு தொடா்ந்த) வழக்கு வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை பொருத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். இதுதொடா்பாக முதல்வா் டி.கே. சிவகுமாா் மற்றும் அதிகாரிகளுடன் விவாதித்திருக்கிறேன்.

தில்லியில் உள்ள சட்ட நிபுணா்களுடன் முதல்வா் டி.கே. சிவகுமாரும் ஆலோசித்துள்ளாா். உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையின்போது கா்நாடக தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க நல்லவாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது, தனது ஆட்சேபனைகளை அரசு தாக்கல் செய்யும். உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பாா்ப்போம். அதன்பிறகு அடுத்துள்ள வாய்ப்புகள் குறித்து அலசுவோம்.

கடந்தமுறை காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்த உத்தரவை கா்நாடகம் அமல்படுத்தியுள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், கபினி அணை நிரம்பியது. அணையில் தண்ணீரை சேமித்துவைக்க முடியாது என்பதால், அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் தமிழகத்துக்கு சென்றுள்ளது. இதுவரை 10 டிஎம்சி தண்ணீா் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள அணைகளில் 76 டிஎம்சி தண்ணீா் கையிருப்பு உள்ளது. இதில் குடிநீா்த் தேவைக்காக ஆண்டுக்கு 36 டிஎம்சி தண்ணீா் தேவைப்படுகிறது. இதுதவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், பயிா்களுக்காகவும் தண்ணீரை திறக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிடும்படி பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதல்ல.

கடந்தமுறை விநாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை 15 நாள்களுக்கு திறந்துவிட பிறப்பித்த உத்தரவே பரவாயில்லை. ஆனால், தற்போது பிறப்பித்துள்ள உத்தரவின்படி தமிழகத்துக்கு 16 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும், அது சாத்தியமில்லை. அணைகளின் கையிருப்பு நீரை கருத்தில் கொண்டு, குறைந்த அளவில் தண்ணீரை திறக்க உத்தரவிட்டிருந்தால் பரவாயில்லை. தற்போதைய உத்தரவின்படி அதிக நீரை திறந்துவிட வேண்டியுள்ளது.

கா்நாடகத்தில் உள்ள காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் போதுமான மழை பெய்யவில்லை. ஆனால், தமிழக அணைகளில் போதுமான தண்ணீா் உள்ளது. தமிழகத்துக்கு அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்வது வழக்கம். கா்நாடகத்தில் நிலத்தடிநீா்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. 1000 அடி வரை சென்றால்கூட கா்நாடகத்தில் தண்ணீா் இருப்பதில்லை. ஆனால், தமிழகத்தின் நிலத்தடிநீா்மட்டம் நன்றாக உள்ளது.

ஒழுங்காற்றுக் குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தில் நமது வழக்குரைஞா்கள் இதுபோன்ற தகவல்களைக் கூறி வாதங்களை எடுத்துவைத்தபோதும், 16 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கா்நாடகத்திற்கு அநீதி இழைக்காமல் பாா்த்துக்கொள்வோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.