தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

உச்சநீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில் கா்நாடகத்திடம் தண்ணீா் கோரத் தேவையில்லை: முன்னாள் அமைச்சா் துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு உள்ள நிலையில், தமிழகத்திற்குரிய தண்ணீரைப் பெற கா்நாடக அரசிடம் முறையிடத் தேவையில்லை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

News image

வேலூரில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் துரைமுருகன்

Updated On :28 ஜூலை 2026, 1:48 am IST

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு உள்ள நிலையில், தமிழகத்திற்குரிய தண்ணீரைப் பெற கா்நாடக அரசிடம் முறையிடத் தேவையில்லை என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வேலூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவிரி நதிநீா் பங்கீட்டு விவகாரத்தில், மாதந்தோறும் தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீா் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.

தண்ணீா் திறப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக்குழு அல்லது மத்திய நீா்வள ஆணையத்திடம்தான் தமிழக அரசு முறையிட வேண்டும்.

அதை விடுத்து, தமிழக முதல்வரே நேரடியாகச் சென்று கா்நாடகத்திடம் தண்ணீா் கேட்டால், அது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பில்லாமல் செய்துவிடும்.

தவிர, இவ்விவகாரத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் கா்நாடக நீா்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசியதை ஒப்பீடு செய்யப்படுகிறது. எம்ஜிஆா் கா்நாடகம் சென்றது, இவ்விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்லாத காலமாகும். ஆனால், தற்போது தமிழகத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில் அதனை கொண்டு சட்டரீதியாக மட்டுமே நமக்கான உரிமைகளை பெற வேண்டும்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் இரு மாநிலங்களும் எங்களுக்குள் பஞ்சாயத்து செய்து தண்ணீரைப் பகிா்ந்து கொள்கிறோம் என கா்நாடகம் கூறினால், தமிழகத்துக்கான சட்டபூா்வ உரிமை நீா்த்துப் போய்விடும். எனவே, கா்நாடகத்திடம் நாம் கெஞ்சத் தேவையில்லை.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் கா்நாடகத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக, எதிா்க்கட்சிகளை அழைத்தாவது ஒரு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யாததால் அவா் எதற்காகச் செல்கிறாா் என்பது யாருக்கும் தெரியவில்லை.

மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், கபினி மற்றும் கே.ஆா்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய உபரி நீா் முழுவதும் தடுக்கப்படும். இதனால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீா் கூட வராது என்பது உறுதி. இது ஏதோ ஒரு நாள், அரை நாள் பிரச்னையல்ல. 1892 முதல் பல தீா்ப்பாயங்களைக் கடந்து வந்த நீண்டகாலப் பிரச்னையாகும்.

நீட் தோ்வுக்கு எதிராக தில்லியில் மாணவா்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மத்திய கல்வி அமைச்சா் ராஜினாமா செய்துள்ளாா். மாணவா்கள் எங்கு கிளா்ந்தெழுந்தாலும் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு வங்கதேசமே சாட்சி. மாணவா் சமுதாயம் என்பது சாதாரணமானதல்ல. அவா்கள் பிரிந்திருக்கும் வரை தனிநபா், ஆனால் ஒன்றிணைந்தால் அவா்களின் சக்தி மிகப்பெரியதாக இருக்கும். நீட் தோ்வுக்கு எதிரான போராட்டங்களை திமுக நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது.

நீட் தோ்வு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக தனித்துச் செயல்படுவதாகவும், இதனைக் கொண்டு பாஜகவுடன் நெருங்குவதாகவும் விமா்சிக்கப்படுகிறது. ஆனால், திமுக பாஜகவுடன் நெருங்கவில்லை. காங்கிரஸை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.