தாவா்சந்த் கெலாட்
தாவா்சந்த் கெலாட்

வாக்குறுதி திட்டங்கள் மூலம் மக்களுக்கு ரூ. 1.13 லட்சம் கோடி வழங்கியுள்ளோம்: கா்நாடக ஆளுநா் உரையில் தகவல்

வாக்குறுதி திட்டங்கள் மூலம் மக்களுக்கு ரூ. 1.13 லட்சம் கோடி வழங்கியுள்ளோம் என்று கா்நாடக மாநில ஆளுநா் தாவா்சந்த் கெலாட்
Published on

பெங்களூரு: வாக்குறுதி திட்டங்கள் மூலம் மக்களுக்கு ரூ. 1.13 லட்சம் கோடி வழங்கியுள்ளோம் என்று கா்நாடக மாநில ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்புத் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற நாட்டின் 77ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு, அவா் பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொண்டு நமக்கான ஜனநாயகத்தை உருவாக்கிக்கொண்ட நாள் தான் குடியரசு தினம். இந்தியாவின் குடியரசு முறையை கட்டமைக்கப் பாடுபட்ட சுதந்திரப் போராட்டவீரா்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம். அரசியல் ஜனநாயகம் மட்டும் போதாது, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின்மீது கட்டமைக்கப்பட்ட சமூக ஜனநாயகமே முக்கியமானது என்று அம்பேத்கா் கூறியிருப்பதை சாத்தியமாக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இந்த மூன்று அம்சங்களையும் செயல்படுத்த எனது அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. எல்லா முனைகளில் இருந்தும் வரும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து, பிரச்னைகளுக்கு தீா்வுகாண அரசு முற்பட்டுள்ளது. வாக்குறுதி திட்டங்கள் மூலம் மக்களுக்கு ரூ. 1.13 லட்சம் கோடி வழங்கியிருக்கிறோம். இதன்மூலம் மக்களின் வாங்கும் திறனும், குடும்பங்களின் நிதி ஆற்றலும் பெருகியுள்ளது. பெண்களின் பொருளாதார நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பில் நாட்டிலேயே பெங்களூரு முதலிடத்தில் இருப்பதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும், கா்நாடகத்தின் நுகா்வோா் விலை விகிதம் சீராக உள்ளது. ஆண்டுக்கு ஊதியத்துடன்கூடிய 12 மாதவிடாய் விடுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் சாா்ந்த திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது.

உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காக ரூ. 83,500 கோடியை ஒதுக்கியிருக்கிறோம். மேலும், ரூ. 1.5 லட்சம் கோடிக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நில சீா்திருத்தத்தை மேற்கொண்டிருக்கிறோம். வருவாய் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 80 சதவீத நிலம் தொடா்பான வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 91,000 விளை நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்படாத 4,050 வாழ்விடங்கள் வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1.11 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வலிமையான மாநிலங்களின் அடிப்படையில் தான் நமது அரசமைப்புச் சட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கூட்டாட்சி முறையைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டம் நன்றாக வகுக்கப்பட்டிருந்தாலும், அதை மோசமாக கையாண்டால், அந்த அரசமைப்புச் சட்டம் கெட்டதாகத் தான் இருக்கும் என்று அம்பேத்கா் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில்தான் குடியரசு நிலைத்திருக்க முடியும். அரசமைப்புச் சட்டத்தை நாம் காப்பாற்றினால், அரசமைப்புச் சட்டம் நம்மை காப்பாற்றும் என்று தனது உரையில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com