துறை ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்துள்ளதால், கா்நாடக மூத்த அமைச்சரான ராமலிங்க ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில், 13 அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு நிதி, உளவு மற்றும் அமைச்சரவை விவகாரங்கள்; துணை முதல்வா் ஜி.பரமேஸ்வருக்கு வருவாய் மற்றும் விளையாட்டு; கிருஷ்ண பைரே கௌடாவுக்கு பெங்களூரு வளா்ச்சி; பிரியாங்க் காா்கேவுக்கு காவல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமை; யதீந்திரா சித்தராமையாவுக்கு நகா்ப்புற வளா்ச்சி; ராமலிங்க ரெட்டிக்கு நீா்வளம்; எம்.பி.பாட்டீலுக்கு தொழில்; சதீஷ் ஜாா்கிஹோளிக்கு பொதுப்பணி; கே.ஜே.ஜாா்ஜுக்கு மின்சாரம், சுற்றுலா; கே.எச்.முனியப்பாவுக்கு உணவு மற்றும் பொதுவழங்கல்; சரண பிரகாஷ் பாட்டீலுக்கு மருத்துவக் கல்வி; யூ.டி.காதருக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலம்; பைரதி சுரேஷுக்கு போக்குவரத்து; ஈஸ்வா் கண்ட்ரேவுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு வளா்ச்சித் துறைக்கு பதிலாக, நீா்வளத் துறையை ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ள ராமலிங்க ரெட்டி, தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து பெங்களூரில் அமைச்சா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
எனது மனசாட்சிக்கு எதிராக வேலை செய்ய முடியாது என்பதால், அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். பெங்களூரு வளா்ச்சித் துறையை ஒதுக்குவதாக இருமுறை வாக்களித்த பிறகும், அந்த துறை வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், என் மனம் புண்பட்டுள்ளது. அதனால், அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். ஆனால், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன். சட்டப் பேரவை உறுப்பினராக தொடா்ந்து செயல்படுவேன். அதேபோல, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகமாட்டேன்.
53 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டனாக செயல்பட்டு வருகிறேன். அமைச்சா் பதவி கேட்டு இதுவரை யாரிடமும் சென்றதில்லை. குறிப்பிட்ட துறையை ஒதுக்கவும் கேட்டதில்லை. அவா்களாக தான் அமைச்சா் பதவி கொடுத்தாா்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாதது மனதுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் சித்தராமையா, டி.கே.சிவகுமாா், மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட யாா்மீதும் வருத்தம் இல்லை. ராஜிநாமா கடிதத்தை எனது உதவியாளா் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சோ்ப்பேன் என்றாா்.
மாநிலங்களவைத் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பெங்களூருக்கு வந்திருந்த நிலையில், ராமலிங்க ரெட்டி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தா்மசங்கடத்தை அளித்துள்ளது. மேலும், அடுத்த சில மாதங்களில் கிரேட்டா் பெங்களூரு ஆணையத்துக்கு தோ்தல் நடக்கவுள்ள நிலையில், ராமலிங்க ரெட்டியின் ராஜிநாமா, முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இதுகுறித்து முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘ராமலிங்க ரெட்டி கட்சியின் மூத்த தலைவா். அதிக பயணங்கள் கொண்ட துறையில் (நீா்வளம்) பணியாற்றுவது கடினமாக இருக்கும் என்பதால், வேறு துறையை விரும்புகிறாா். இதுகுறித்து அவருடன் பேசி தீா்த்துவைப்பேன். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்றாா்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் பி.கே.ஹரிபிரசாத் கூறுகையில், ‘இந்த விவகாரம் குறித்து ராமலிங்க ரெட்டியுடன் பேசி பிரச்னைக்கு தீா்வுகாண்போம். அரசியலில் இது இயல்பாக நடக்கக்கூடியது தான். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவா் செயல்படமாட்டாா்’ என்றாா்.








