பயனில்லாத எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

அரியலூர், ஜுன் 21: தமிழகத்தில் எரிவாயு நுகர்வோரின் குறைகளைத் தீர்க்க நடத்தப்பட்டு வரும் குறைதீர் கூட்டங்களால் பயன் ஏதும் கிடைக்கவில்லை, எனவே, அவற்றைச் செம்மையாக நடத்த ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தப
Updated on
2 min read

அரியலூர், ஜுன் 21: தமிழகத்தில் எரிவாயு நுகர்வோரின் குறைகளைத் தீர்க்க நடத்தப்பட்டு வரும் குறைதீர் கூட்டங்களால் பயன் ஏதும் கிடைக்கவில்லை, எனவே, அவற்றைச் செம்மையாக நடத்த ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களைச் செம்மைப்படுத்த பல்வேறு வகையிலான குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அவற்றில் கடந்த ஆட்சி முதல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டம் பெயரளவிலேயே நடத்தப்படுவதை பல மாவட்டங்களிலும் காண முடிகிறது.

இன்றைய நிலையில் காஸ் சிலிண்டர் பெறுவதில் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. விற்பனை மையத்தில் காலையிலிருந்து பல மணி நேரம் காத்திருந்து அதைப் பெறும் நிலை பல இடங்களில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் காஸ் சிலிண்டர் தீர்ந்து அடுத்த சிலிண்டரை பெறுவதற்குப் பதிவு செய்ய தொலைபேசியில் தொடர்பு கொண்டால், எளிதில் இணைப்புக் கிடைப்பதில்லை. இணைப்பு கிடைத்தால் முறையான பதில் கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. காஸ் சிலிண்டர் விற்பனை நிலைய முகவரிடம் பதிவு செய்து பல நாள்கள் கழித்து முதல் சிலிண்டரை பெறுதலும், தொடர்ந்து 21 நாள்கள் கழித்துத்தான் அடுத்ததற்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதுபோல, பல பிரச்னைகள் தொடர்கின்றன.

இந்நிலையில், முந்தைய திமுக அரசு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய காஸ் அடுப்பை வழங்க, எரிவாயு நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. பிரச்னைகளும் அதிகரித்தன. இவ்வாறு இணைப்பு பெற்றவர்கள் பலர் கூடுதல் விலைக்கு அவற்றை விற்பனை செய்வது, பல உணவகங்கள் இதுபோன்ற காஸ் சிலிண்டரை வாங்கிப் பயன்படுத்துதல் போன்ற நிகழ்வுகளும் தொடர்கின்றன.

இவ்வாறு எரிவாயு நுகர்வோர்கள் தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், முந்தைய திமுக அரசைத் தொடர்ந்து தற்போதைய அதிமுக அரசும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தை நடத்தி வருகிறது.

பெயருக்குத்தான் கூட்டமோ: இந்தக் கூட்டங்களில் காஸ் சிலிண்டர் விற்பனை நிலையத்தினர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். பெரும்பாலான கூட்டங்களில் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்பதில்லை. திருச்சி போன்ற மாவட்டங்களில் ஓரிரு நிறுவனத்தினர் மட்டும் பங்கேற்கின்றனர். மற்ற மாவட்டங்களில் அதுவும் இல்லை.

மேலும், இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் தங்களது குறைகளை எழுத்து மூலமாகத் தெரிவித்தால், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினாலும், நடவடிக்கைகள் எடுத்ததாகத் தெரியவில்லை. நுகர்வோர் பலர் தொடர்ந்து ஒரே கருத்தை வலியுறுத்தினால், சம்பந்தப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை நிலையத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அதுபோன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர்.

பெரும்பாலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் கூறப்படும் குற்றச்சாட்டாக இருப்பது நுகர்வோரை சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்கள் கண்ணியமாக நடத்துவதில்லை என்பதுதான்.

நுகர்வோர் யாரும் இலவசமாக காஸ் சிலிண்டரை பெறவில்லை. பணம் கொடுத்துதான் பெறுகிறார்கள். இன்று சிலிண்டர் வராது, நாளை வரும் என்று மென்மையாகக் கூறினால் புகார் தெரிவித்தவர்கூட அமைதியாகிவிடுவர். அதற்குப் பதிலாக கடிந்து பேசினால் கோபம் வராதவர்களுக்குக்கூட கோபம் வந்துவிடும் என்கிறார் அரியலூரைச் சேர்ந்த கோபாலசாமி.

எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கூட்டம் நடைபெற இருப்பது அதற்கு முந்தைய நாளில்தான் இன்றுதான் தெரிவிக்கின்றனர். இதனால், பலரும் அதுகுறித்து தெரிந்து கொள்ள முடியாமல் போகிறது. எனவே, ஒரு வாரம் முன்பு கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்கிறார் அவர். எனவே, இனிமேலாவது சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்களின் அலுவலர்கள், எரிவாயு விற்பனை நிலையத்தினர் என அனைவரையும் பங்கேற்கச் செய்து, நுகர்வோரின் குறைகளைத் தீர்க்க செம்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com