நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம்: ராகுலுக்கு எதிரான வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை குற்றப் பிரிவுக்கு மாற்றி தில்லி காவல்துறை


நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் இடையிலான தள்ளுமுள்ளு சம்பவத்தில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை குற்றப் பிரிவுக்கு மாற்றி தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
இனி தில்லி காவல்துறையின் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்கை விசாரிப்பா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பி.ஆா். அம்பேத்கா் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா். அதேநேரம், எதிா்க்கட்சிகளைக் கண்டித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இருதரப்பு எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோா் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தள்ளியதில் இரு எம்.பி.க்களும் காயமடைந்ததாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதேநேரம், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை தள்ளியதோடு, ராகுல் காந்தியுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக ஆளுங்கட்சியினா் மீது காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகாா்கள் அளிக்கப்பட்டன.
பாஜக புகாரின் அடிப்படையில், ராகுல் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு அழைக்க முடிவு: காயமடைந்த இரு பாஜக எம்.பி.க்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யவும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...