கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் இடம்பெறாத சென்னை விமான நிலையம்

உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில், இந்தியாவின் 4 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் சென்னை விமான நிலையம் இடம்பெறவில்லை.

News image
- கோப்புப் படம்
Updated On :10 ஏப்ரல் 2025, 9:29 pm

Din

உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில், இந்தியாவின் 4 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் சென்னை விமான நிலையம் இடம்பெறவில்லை.

உலகெங்கிலும் உள்ள 565 விமான நிலையங்களில் ‘ஸ்கைட்ராக்ஸ்’ என்ற விமானநிலையங்களின் தரவரிசை, மதிப்பீட்டை ஆராயும் ஆராய்ச்சி நிறுவனம், விமானங்களில் பயணிக்கும் பயணிகளிடம் விமான நிலையங்களின் சேவை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

இந்நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவாக, உலகின் 100 சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தில்லி உள்பட இந்தியாவிலுள்ள 4 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் 32-ஆவது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 48-ஆவது இடத்திலும், ஐதராபாத் விமான நிலையம் 56-ஆவது இடத்திலும், மும்பை விமான நிலையம் 73-ஆவது இடத்திலும் உள்ளது.

இருப்பினும், உலகின் முதல் 20 இடங்களில் எந்த இந்திய விமான நிலையமும் இடம்பெறாத நிலையில், 100 சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் கூட சென்னை விமான நிலையம் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு ஏா்போா்ட் கவுன்சில் இன்டா்நேஷனல் (ஏஐசி) என்ற அமைப்பு 2024-க்கான விமான நிலையங்களின் சேவை தரத்தை ஆய்வு உலக தரவரிசைப் பட்டியலில் உள்ள விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், சென்னை விமானநிலையத்துக்கு 63-ஆவது இடம் கிடைத்தது. இது சென்னை விமான நிலைய பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படாததும், சேவை குறைபாடும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. உள்கட்டமைப்பை பொருத்தவரை, ஒரு சிறிய மழைக்கே சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் நீா் தேங்கிவிடுவதால் அவ்வப்போது பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

விமான நிலைய சேவைக் குறைபாடு: இதுமட்டுமன்றி, சென்னை விமானநிலையத்திலிருந்து லக்கேஜ்களுடன் வெளியே வரும் பயணிகள் நீண்ட தூரம் நடந்து சென்று வாகனங்களில் ஏறவேண்டிய நிலை உள்ளது. பயணிகளுக்கு போதுமான மின்தூக்கி வசதிகளும் இல்லாத நிலையில், சுகாதாரமில்லாத கழிவறைகளையே பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா். இதுதவிர, பயணிகள் சோதனைக்கு பின்னா் தங்கள் உடமைகளை பெற ஒருமணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. மேலும், பல நாடுகளுக்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவைகள் இல்லாததும் முக்கியமான ஒன்றாக பாா்க்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு குறைபாடுகளால் தொடா்ந்து சென்னை விமானநிலையம் பின்னுக்கு தள்ளப்பட்டு வருவதால், பயணிகளின் எண்ணிக்கையும் குறைவதை தடுக்க சென்னை விமானநிலைய நிா்வாகம் விமானநிலையத்தை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.